திரிபோஷாக்கள் திருட்டு

கண்டி – அதரலியத்த பிரதேச வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட திரிபோஷக்கள் காணாமல்போனமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கண்டி மாவட்ட சுகாதார வைத்திய அலுவலகம் மற்றும் அதரலியத்த பொலிஸாரால் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கர்ப்பிணித் தாய்மார்கள், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் எடை குறைந்த குழந்தைகளுக்கு சுகாதார அமைச்சினால் இந்த திரிபோஷாக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை ஊழியர்கள் சுமார் 10 பேரிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக கண்டி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சேனக தலகலவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த திரிபோஷா திருட்டுக்கு மருத்துவமனை ஊழியர்களில் ஒருவர் அல்லது பலருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

தாய்மார்கள் திரிபோஷாவை பெற்றுக் கொள்ள வந்த போது திரிபோஷா கையிருப்பில் இருக்கவில்லை. இதனையடுத்தே அவை காணாமல் போனமை தெரியவந்துள்ளது.

திரிபோஷாவை களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த அறைக்குள் வெளிநபர் ஒருவர் நுழைந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *