110 வயதில் பாடசாலைக்கு செல்லும் மூதாட்டி!

சவூதி பெண் ஒருவர் தனது 110வது வயதில் கல்வி கற்­ப­தற்­காக மீண்டும் பாட­சா­லைக்குச் செல்­வது பல­ரது கவ­னத்­தையும் ஈர்த்­துள்­ளது.

நவ்தா அல்-­கஹ்­தானி சவூதி அரே­பி­யாவின் தென்­மேற்கில் அமைந்­துள்ள உம்வா ஆளுநர் பிரி­வி­லுள்ள அல்-­ரஹ்வா மத்­திய நிலை­யத்தின் உத­வி­யுடன் தனது கல்­வி­யினை மீளத் தொடங்­கி­யுள்ளார்.

நான்கு பிள்­ளை­களின் தாயான நவ்தா அல்-­கஹ்­தா­னியின் மூத்த பிள்­ளைக்கு 80 வய­தா­கி­றது, அவ­ரது கடைசி ஆண் பிள்ளை தனது 50 களில் இருக்­கின்றார். படிக்­கவும் எழு­தவும் கற்­றுக்­கொள்­வது தனது வாழ்க்­கையை மாற்­றி­யுள்­ள­தாக சர்­வ­தேச ஊட­க­மொன்­றிற்கு தெரி­வித்­துள்ளார்.

பல வாரங்­க­ளுக்கு முன்பு இந்த மத்­திய நிலை­யத்­தினால் ஆரம்­பிக்­கப்­பட்ட கல்­வி­ய­றி­வின்மை ஒழிப்புத் திட்­டத்தில் சேர்ந்­த­தி­லி­ருந்து, அவர் தினமும் 50க்கும் மேற்­பட்­ட­வர்­க­ளுடன் பாட­சா­லைக்கு சென்று வரு­கின்றார்.

அனைத்து வயதுப் பிரி­வு­க­ளையும் கொண்ட மாண­வர்­க­ளுக்கு எழுத்­துக்­களின் அடிப்­ப­டைகள் மற்றும் குர்­ஆனின் சில வச­னங்கள் கற்­பிக்­கப்­ப­டு­கின்­றன.

பாடங்­களை மகிழ்ச்­சி­யுடன் கற்­ப­தா­கவும், ஒவ்­வொரு நாளின் முடி­விலும் தனது வீட்டுப் பாடத்தை செய்து முடிப்­ப­தா­கவும் அல்-­கஹ்­தானி தெரி­வித்தார்.

பிஷாவில் உள்ள கல்வி அமைச்சின் கிளை, அல்-­கஹ்­தானி பற்றி டுவிட்­டரில் ஒரு பதி­வொன்றைப் பகிர்ந்­துள்­ளது. அதில் 110 வய­தான அவர், கல்­வி­ய­றி­வின்­மையை ஒழிப்­ப­தற்­காக எடுக்கும் முயற்­சி­க­ளுக்­காக சவூதி அரே­பி­யாவின் தலை­வர்­க­ளுக்கு தனது நன்­றியைத் தெரி­விக்­கிறார்.

படிப்­பிற்­காக மீளச் செல்­வது தொடர்பில் சிந்­திப்­பது ‘குறிப்­பாக 100 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளுக்குக் கடி­ன­மான விட­ய­மாக இருந்­தது,’ என அவர் தெரி­வித்தார்.

இருப்­பினும், இந்த நட­வ­டிக்கை நீண்ட கால­மாக தாம­த­மா­கி­விட்­ட­தா­கவும், பல ஆண்­டு­க­ளுக்கு முன்பே தனது பாட­சாலைக் கல்­வியை முடித்­தி­ருக்க வேண்டும் எனவும் அவர் தெரி­வித்தார்.

கடந்த பல ஆண்­டு­க­ளாக தனது கல்­வியை மேம்­ப­டுத்­தாமல் இருந்­த­மைக்­காக கவலை அடை­வ­தாக தெரி­வித்த அவர் இது நிச்­ச­ய­மாக எனது வாழ்க்­கை­யிலும் மற்­ற­வர்­களின் வாழ்க்­கை­யிலும் ஏரா­ள­மான மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தாகச் சுட்டிக் காட்­டினார்

இந்த தாமதம் தனது வாழ்க்­கையில் உரு­வான தனிப்­பட்ட பிரச்­சி­னையால் ஏற்­ப­ட­வில்லை, ஆனால் புவி­யி­யல்­ரீ­தி­யாக தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டதால் தனது கல்­வியை தொடர முடி­யாத நிலை ஏற்­பட்­ட­தா­கவும் பிராந்­தி­யத்தின் கிரா­மப்­பு­றங்­களைச் சேர்ந்த நூற்­றுக்­க­ணக்­கான சிறு­மி­க­ளுக்கு இது பொது­வான நிலைமை எனவும் அவர் தெரி­வித்தார்.

அல்-­கஹ்­தா­னியின் நான்கு பிள்­ளை­களும் அவர் கல்வி கற்­பதை ஆத­ரிக்­கின்­றனர் அத்­துடன் அவ­ரது வாழ்க்­கையின் புதிய மாற்றம் தொடர்பில் மிகுந்த நம்­பிக்­கை­யுடன் இருக்­கின்­றனர்.

நவ்தா அல்-­கஹ்­தா­னியின் 60 வயது மகன் முக­மது அல்-­கஹ்­தானி சர்­வ­தேச ஊட­க­மொன்­றிற்கு கருத்துத் தெரி­விக்­கையில், தினமும் காலையில் தனது தாயை மத்­திய நிலை­யத்­திற்கு அழைத்துச் சென்று வகுப்­புகள் முடி­யும்­போது அவரை மீள அழைத்து வரு­வ­தா­க தெரி­வித்தார்.

தனது தாய் தினமும் புதி­தாக ஏதேனும் ஒன்றைக் கற்­றுக்­கொள்­கிறார் என்­பதில் அவ­ரது மகன் மகிழ்ச்­சியும் பெரு­மி­தமும் அடை­கின்றார்.

‘110 வயதைத் தாண்­டிய எங்கள் தாயா­ருக்கு இந்த விடயம் எளி­தா­ன­தாக இருக்­காது என்­பதை நாங்கள் நிச்­ச­ய­மாக அறிவோம். ஆனால் இது குடும்­பத்தில் உள்ள அனைத்து உறுப்­பி­னர்­க­ளையும் பெரு­மைப்­ப­டுத்தும் ஒரு நட­வ­டிக்கையாகும். அவ­ருக்கு சிறந்த கல்வி வச­தி­யினை வழங்க நாங்கள் சரி­யான முடி­வெ­டுத்­தி­ருக்­கின்றோம்.’

ஆளுநர் பகு­தியில் பெண்­க­ளுக்­கான ஒரே ஒரு உயர்­நிலைப் பாட­சாலை மட்­டுமே உள்­ளது. அந்தப் பாட­சா­லையும் பெரும் அழுத்­தங்­களை எதிர்­நோக்­கி­யுள்­ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஏனையோர் கல்வியறிவு பெறவும், அவர்களின் கல்வியை கற்று முடிக்கவும் அதிகாரிகள் பொதுக் கல்விக்காக அதிக பாடசாலைகளை தாபிப்பார்கள் என்று தான் நம்புவதாக முகம்மத் அல்-கஹ்தானி மேலும் தெரிவித்தார்.

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள கல்வியறிவின்மையை எதிர்த்துப் போராடவும் அகற்றவும் நாட்டின் தலைவர்கள் ஆர்வமாக உள்ளனர் எனவும் அவர் கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *