இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி!

இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலியில் 16 ஆம் திகதி ஆரம்பமானது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

அதன்படி முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி 95.2 ஓவர்களில் 312 ஓட்டங்களுக்கு ஒல்-அவுட் ஆனது. முதலில் தடுமாறிய இலங்கை அணி தனஞ்செயா டி சில்வாவின் சதத்தின் மூலம் இந்த ஓட்டங்களை எடுத்தது.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 101 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. இதில் 6-வது விக்கெட்டுக்கு சாத் ஷகீலும், ஆஹா சல்மானும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இறுதியில் பாகிஸ்தான் அணி 121.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 461 ஓட்டங்களுக்கு ஒல் அவுட் ஆனது. பாகிஸ்தான் அணி தரப்பில் சாத் ஷகீல் 208 ஓட்டங்களை குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இலங்கை அணி தரப்பில் மெண்டீஸ் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

இதையடுத்து 149 ஓட்டங்கள் பின்னிலையுடன் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி பாகிஸ்தான் அணியின் சிறப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

தனஞ்செயா, மெண்டீஸ் மற்றும் நிசான் ஆகியோரின் துடுப்பாட்டத்தால் இலங்கை அணி 2-வது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ஓட்டங்களை எடுத்தது. இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்கு 131 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அகமது, நோமன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்நிலையில் 131 ஒட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணியும் தடுமாறியது. 38 ஓட்டங்களுக்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. இதன் பின் கேப்டன் பாபர் அசாம் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் ஜோடி சிறிது நேரம் தாக்குப்பிடித்தது. அதில் பாபர் அசாம் 24 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

அதன்பின் ஜோடி சேர்ந்த சாத் ஷகீல்- இமாம் உல் ஹக் இணை அணியை வெற்றிப்பாதையை நோக்கி பயணிக்க வைத்தது. இலக்கை நெருங்கிய தருவாயில் சாத் ஷகீல் அவுட் ஆனார். மறுபுறம் இறுதி வரை களத்தில் நின்று விளையாடிய இமாம் உல் ஹக் அரைசதம் அடித்து அணி வெற்றி பெற உதவினார். முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்து அசத்திய பாகிஸ்தான் வீரர் சாத் ஷகீல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அடுத்து இவ்விரு அணிகளுக்கான 2-வது மற்றும் கடைசி போட்டி வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *