இந்திய- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி ஓட்டல் அறைகளின் விலை திடீர் உயர்வு!

ஐசிசி உலகக் கிண்ண 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் ஒக்டோபர் 5ம் திகதி தொடங்கி நவம்பர் 19ம் திகதி வரை நடக்கிறது. இதற்கான அட்டவணை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

இதில், இந்தியா- பாகிஸ்தான் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஒக்டோபர் 15ம் திகதி நடக்கிறது. போட்டிக்கான அட்டவணை அதிகாரப்பூர்வமாக வௌியானதும் இந்தியா- பாகிஸ்தான் போட்டி குறித்து ரசிகர்களிடையே பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது.

அகமதாபாத் மைதானத்தில் சுமார் ஒரு லட்சம் ரசிகர்கள் போட்டியை ரசிக்கலாம். இதனால் அன்றைய தினம் அகமதாபாத் ரசிகர்கள் படையால் ஜொலிக்கும் என்பதில் ஐயமில்லை. இதற்கிடையே ரசிகர்கள் ஒக்டோபர் 15ம் திகதி அகமதாபாத்தில் கூடும் வாய்ப்பை பயன்படுத்தி அங்குள்ள நட்சத்திர ஓட்டல்களின் அறை வாடகைகளை தாறுமாறாக உயர்த்தியுள்ளன.

ரூ.5 ஆயிரம் வாடகை கொண்ட அறை வாடகை, அக்டோபர் 15ம் திகதியன்று 10 மடங்கு அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.ஆன்லைன் மூலம் அறைகள் முன்பதிவு செய்யும் இணையதளம் மூலம் இந்த உயர்வு தெரியவந்துள்ளது. அப்படி விலை உயர்த்தப்பட்ட நிலையிலும் அறைகள் அனைத்தும் முன்பதிவு ஆகிவிட்டதாக தெரிகிறது.

ஆடம்பர ஓட்டல்களில் ஒருநாள் அறை வாடகை ரூ.5 ஆயிரம் முதல் ரூ. 8 ஆயிரம் வரை அகமதாபாத் நகரில் இருக்கிறது. தற்போது ரூ.40 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அகமதாபாத் நகரில் உள்ள ஐடிசி ஓட்டல்களின் வெல்கம் ஓட்டலில் ஜூலை 2ம் திகதி அறை வாடகை ரூ.5,699. அதுவே ஒக்டோபர் 15ம் திகதி ரூ.71,999ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. எஸ்.ஜி. ஹைவேயில் உள்ள ரெனாய்ஸ்சான்ஸ் அகமதாபாத் ஓட்டலில் தற்போது ரூ.8 ஆயிரமாக உள்ளது. அதுவே ஒக்டோபர் 15ம் திகதி ரூ.90,679ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பிரைடு பிளாசா ஓட்டல், அறை வாடகையை ரூ.36,180ஆக உயர்த்தியுள்ளது. பட்ஜெட் விலையான ரூ.3 ஆயிரமாக இருந்த வாடகை ரூ.27,233 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விலை விண்ணைத்தொடும் அளவிற்கு உயர்ந்தாலும் பல நட்சத்திர ஓட்டல்களில் அறைகள் அனைத்தும் முன்பதிவு ஆகிவிட்டதாம்.

இதுகுறித்து ஓட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட் சங்க அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் உயர் நடுத்தர இந்திய ரசிகர்கள் அதிகளவில் அறைகளை முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருவதால் வாடகை உயர்த்தப்பட்டள்ளது. குறிப்பிட்ட நாளில் தேவை மிகவும் அதிகமாக இருப்பதால், ஓட்டல் உரிமையாளர்கள் வாடகையை உயர்த்தி கூடுதல் வருமானம் பார்க்கலாம் என நினைத்திருக்கலாம். விலை உயர்த்தப்பட்டாலும் அறைகள் அனைத்தும் நிரம்பி விடும் என்பதில் அவர்கள் உறுதியாக இருப்பதுதான் அதற்கு காரணம். தேவை குறைந்தால் வாடகை தானாக குறைக்கப்படும். இந்தியா- பாகிஸ்தான் போன்ற சுவாரஸ்ரமான கிரிக்கெட் போட்டியை பார்க்க வெகு தூரத்தில் இருந்து வர தயங்காத ரசிகர்கள் ஆடம்பர ஓட்டல்களை விரும்புகின்றனர்’ என்றார். நட்சத்திர அந்தஸ்து இல்லாத ஓட்டல்களில் அறை வாடகை பெரிய அளவில் உயர்த்தப்படவில்லை. போட்டி நாள் நெருங்கும் நேரத்தில் வாடகை உயர்வுக்கு வாய்ப்புள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *