ஸ்ரீலங்கா மீடியா போரத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் !

 

( மினுவாங்கொடை நிருபர் )

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 26 ஆவது வருடாந்தப் பொதுக் கூட்டம், போரத்தின் தலைவி புர்கான் பீ. இப்திகார் தலைமையில், எதிர்வரும் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல், கொழும்பு தபால் தலைமையகக் கேட்போர் கூடத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, போரத்தின் செயலாளர் ஷிஹார் அனீஸ் தெரிவித்தார்.

இலங்கைக்கான மலேஷியத் தூதுவர் பதி ஹிஷாம் ஆதம் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ள இக்கூட்டத்தில், களனிப் பல்கலைக்கழக பேராசிரியர் தெல்கஹவத்தகே ராஜ்குமார் சோமதேவ சிறப்பதிதியாகக் கலந்து கொண்டு, “இலங்கையில் முஸ்லிம்கள் மீள் நோக்கிப் பார்த்தல்” எனும் தலைப்பில் விசேட உரையாற்றவுள்ளார்.

இரு அமர்வுகளாக நடைபெறவுள்ள இக்கூட்டத்தின் முதல் அமர்வில், ஊடகத்துறையில் பல வருடங்களாக சேவையாற்றியுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்கள் பலர் கௌரவிக்கப்படவுள்ளனர்.

அண்மையில் மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் மூத்த எழுத்தாளர் கலைவாதி கலீல் மீதான இரங்கலும் நிகழ்த்தப்படவுள்ளது.
இரண்டாவது அமர்வில், 2023/24 ஆம் ஆண்டுக்கான தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் உட்பட செயற்குழு உறுப்பினர்கள் தெரிவுகளும் இடம்பெறவுள்ளன.

அத்தோடு, உறுப்பினர்களின் அங்கீகாரத்துடன் போரத்தின் யாப்பில் சில திருத்தங்களை மேற்கொள்ளவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

( ஐ.ஏ. காதிர் கான் )
22/06/2023.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *