முகவர்களின் ஏமாற்று வேலை- பிரித்தானியாவில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள்!

முகவர்களின் நூதனமான ஏமாற்று வேலை - பிரித்தானியாவில் அகதிகளாக சிக்கித் தவிக்கும் தமிழர்கள்

போலியான சான்றிதழ்கள், போலிக் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் ஏனைய போலியான தொழில் தகைமைச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து வேலை விசாவைப் பெற்றுக்கொண்டு பிரித்தானியாவிற்குள் பிரவேசித்த 100,000 இற்கும் அதிகமான இலங்கையர்கள் தொடர்பில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ஸ்கை நியூஸ் மேற்கொண்ட ஆய்வில், இலங்கையில் இருந்து இங்கிலாந்து வந்தவர்கள் தொழில் விசா பெறுவதற்காக 50,000 முதல் 65,000 பவுண்டுகள் வரை செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் வேலை விசா கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இவ்வளவு பணத்தை செலவழித்து அனைத்தையும் இழந்த இலங்கையர்கள் குழுவொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை விவரித்திருந்தனர்.

Ratha

RathaPhoto credit – Sky News

ராதாவின் கதை

ராதா ஒரு இலங்கை தமிழ் விவசாயி. வேலைக்காக பிரித்தானியா செல்ல வேண்டும் என்பது அவரது நம்பிக்கை. ஆனால் அதற்கான தகுதி அவருக்கு இல்லை.

ஆனால் தனது லட்சியத்தை எப்படியாவது நிறைவேற்றிக் கொள்ள, இலங்கையில் உள்ள ஒரு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் பிரதிநிதியிடம் ராதா சென்றிருந்தார்.

அங்கு ஆவணங்கள் மற்றும் இதர சேவைக் கட்டணங்கள் என சுமார் ஐம்பதாயிரம் பவுண்டுகள் செலுத்த வேண்டியிருந்ததால், அந்தப் பணத்திற்காகத் தன் தலைமுறையிலிருந்து வந்த நகைகள் உள்ளிட்ட சொத்தை ராதா அடகு வைத்துள்ளார்.

இறுதியாக, ராதா தனது கனவுக்காக பறப்பதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். அங்கு ராதா கற்பனை செய்யாத ஒரு அனுபவத்தை சந்திக்க நேர்ந்தது.

ராதாவின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ராதா இதுவரை சந்திக்காத ஒரு பெண்ணுடன் விமான நிலையத்திற்கு வந்தார்.

“இவர் உங்கள் மனைவி, நான் அவரை உங்களின் மனைவியாக காட்டுவதற்கான ஆவணங்களை செய்துள்ளேன். அதனால் நீங்கள் அவருடன் செல்ல வேண்டும்” என முகவர் ராதாவிடம் கூறியிருந்தார்.

“நீங்கள் அவருடன் போகவில்லை என்றால், வழியில் பிரச்சினை ஏற்படலாம் – அது மட்டுமல்ல, உங்கள் பணத்தை திரும்பப் பெற முடியாது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடைசியில் ராதாவால் தன் முகவரின் அறிவுரையை மீற முடியவில்லை. ஏனென்றால் அந்த நேரத்தில் அவர் தனது லட்சியத்தைத் தொடர தனது குடும்பத்தின் பரம்பரை சொத்துகளை பணமாக்கியுள்ளார்.

போலி வேலை விசா வழங்கும் கும்பலால் பாதிக்கப்பட்ட ராதா, தான் முதன்முதலில் சந்தித்த பெண்ணுடன் கணவன் மனைவியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.

சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க ரிஷி சுனக் அரசாங்கத்தின் முயற்சிகள் இருந்தபோதிலும், அதற்கான போதிய நடவடிக்கை இல்லையென ஸ்கை நியூஸ் குறிப்பிட்டுள்ளது.

மேலும், திறமையற்ற தொழிலாளர்களை பிரித்தானியாவிற்கு அழைத்து வருவதன் மூலம் இங்கிலாந்தின் காலியிடங்களை நிரப்பும் முறையை தவறாக பயன்படுத்துவதாக ஸ்கை நியூஸ் வெளிப்படுத்துகிறது.

பிரித்தானிய குடியேற்றச் சட்டத்தின்படி, நாட்டிற்கு வரும் திறமையான தொழிலாளர் அவரைச் சார்ந்தவர்களுடன் கூட செல்லலாம்.

அந்த விதியை தவறாக பயன்படுத்தியதன் விளைவாக ராதா பிரித்தானியாவிற்கு வர நேரிட்டதாக ராதாவின் கதையை ஸ்கை நியூஸ் வெளியிட்டுள்ளது.

Hinthujan

HinthujanPhoto credit – Sky News

மகன் நடித்து அகதியாக இருக்கும் ஹிந்துஜன்

ராதா பிரித்தானியாவில் வேலை மற்றும் நிரந்தர வதிவிடத்திற்காக குடியேறியவர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவர் எதிர்பாராத ஒரு சம்பவத்தை எதிர்கொண்டார். தெரியாத பெண்ணின் கணவனாக மாறியிருந்தார்.

அவர்களின் போலி குடும்பம் மூன்றாக மாற அதிக நேரம் எடுக்கவில்லை. ராதாவுக்கு ஒரு மகன்!! ஆம்! ராதா மற்றும் தெரியாத பெண்ணின் குடும்பத்திற்கு மகனாக ஒருவரும் இணைந்துள்ளார்.

19 வயதான ஹிந்துஜனும் ஒரு முகவர் மூலம் பிரித்தானியா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டிருந்தார்.

ஹிந்துஜனின் பெற்றோர்கள் தங்கள் சம்பாதித்த செல்வத்தை மகன் பிரித்தானியாவுக்குச் செல்வதற்காக செலவழித்துள்ளனர்.

ஆனால் ராதாவைப் போலவே தனது மகனும் கட்டுநாயக்காவில் போலி வேலை விசா வலையில் சிக்கியுள்ளார் என்பதை கண்டுபிடித்தார்.

அப்போது ஹிந்துஜனும் தெரியாத பெண் மற்றும் ராதவின் பிள்ளையாக இங்கிலாந்து செல்ல நேரிட்டது. இந்த எதிர்பாராத திருப்பத்தால் ராதாவைப் போலவே ஹிந்துஜனும் அதிர்ச்சியடைந்தார்.

ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை கூட பேசத் தெரியாத ராதாவும் ஹிந்துஜனும் ஹீத்ரோ விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருவரும் இப்போது இங்கிலாந்தில் அகதிகளாக உள்ளனர்.

ராதா ஸ்டாஃபோர்ட்ஷையரில் நேரத்தை செலவிடுகிறார், ஹிந்துஜன் லிவர்பூலில் வசிக்கிறார். ஆனால் ராதாவுக்கோ அல்லது ஹிந்துஜனுக்கோ போலியான குடும்பத்தின் தாயாக மனைவியாக இருக்கும் பெண்ணைப் பற்றி எதுவும் தெரியாது.

அந்த பெண் ஹீத்ரோ விமான நிலையத்தில் வைத்து காணாமல் போனார் என்பது மட்டும் அவர்களுக்குத் தெரியும். ராதா மற்றும் ஹிந்துஜனின் கதையை ஸ்கை நியூஸ் அவ்வாறே விவரித்துள்ளது.

Mrs A

Mrs APhoto credit – Sky News

‘ஏ’ என்ற பெண் – ‘நான் பயந்தேன் ஆனால் எதுவும் செய்ய முடியவில்லை!’

ராதா, ஹிந்துஜன் போன்றே தனது அனுபவத்தை ஸ்கை நியூஸிடம் கூறிய ‘ஏ’ என்ற பெண்ணும் இந்த கடத்தலுக்கு பலியாகி உள்ளார்.

ராதா மற்றும் ஹிந்துஜனைப் போலவே அந்த பெண்ணும் பிரித்தானியா வேலை விசாவை நாடியிருந்தார், அதற்காக அவர் முகவர்களுக்கு 65,000 பவுண்டுகள் செலுத்தியிருந்தார்.

பிரித்தானியாவில் சுகாதாரப் பணியாளராக வேலை தேடிக்கொண்டிருந்த ‘ஏ’, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 12 வயது ஆண் பிள்ளைக்கு ‘தாயாக’ இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

“கடைசி நிமிடத்தில் இது நடந்தது, நான் அதிர்ச்சியடைந்தேன்! நான் மிகவும் பயந்தேன். ஆனால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

ஆனால் எந்த பிரச்சனையும் இல்லை என்று அவர்கள் என்னிடம் உறுதியளித்தனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு, குழந்தையை ஒரு குழுவினர் அழைத்துச் சென்றனர், அந்த சிறுவனை குறித்த பெண் மீண்டும் பார்க்கவில்லை.

‘ஏ’ என்று குறிப்பிடும் பெண், தனது அடையாளத்தை வெளியிட மறுத்துவிட்டார், ஆனால் அவருக்கு இலங்கையில் உள்ள பிரித்தானியா உயர் ஸ்தானிகராலயம் விசா வழங்கியதாக ஸ்கை நியூஸிடம் தெரிவிக்கப்பட்டது.

False documents

False documentsPhoto credit – Sky News

போலி ஆவணங்கள்

இங்கிலாந்தில் வேலை தேடுவதற்குப் பொருத்தமான ஆங்கில மொழிப் புலமையைப் பூர்த்தி செய்யாத பெண் ‘ஏ’. ஆங்கிலம் பேசத் தேவையில்லை என்று வேலைவாய்ப்பு நிறுவனம் அந்த பெண்ணுக்கு தெரிவித்திருந்தது.

அந்த பெண்ணுக்கு ஒரு பராமரிப்பு நிறுவனத்தால் வேலை வழங்கப்பட்டதை ஸ்கை நியூஸ் உறுதிசெய்து,

ஆனால், இங்கிலாந்தில் பயிற்சி விசாவில் பராமரிப்பாளராக வேலைக்கு வருவதற்கு ஆங்கிலம் பேசுவது அடிப்படை நிபந்தனையாகக் கருதப்படுகிறது.

எனினும், ஆங்கிலம் படிக்கவோ, எழுதவோ, பேசவோ தெரியாத பெண்ணை வேலைக்குச் செல்ல கடத்தல் கும்பல் போலிச் சான்றிதழ்களை தயாரித்துள்ளது.

ஸ்கையின் கூற்றுப்படி, ஆங்கிலம் பேசாத பெண்ணுக்கு “சிறந்த” மொழித்திறன், பராமரிப்பு பணிக்கு ஏற்ற நர்சிங் டிப்ளோமா, உயிரியல், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகியவற்றில் உயர் தேர்ச்சி பெற்றதற்கான போலி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக ஸ்கை நியூஸ் வெளிப்படுத்தியுள்ளது.

He is now claiming asylum

He is now claiming asylumPhoto credit – Sky News

பிரித்தானியாவில் திறமையான தொழிலாளர் விசா பெறுவது எப்படி?

பிப்ரவரி 2022 இல், பிரித்தானியா அரசாங்கம் வேலைக்காக இங்கிலாந்துக்கு வருவதைப் பாதிக்கும் விதிகளை மாற்றியது, இதனால் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் விண்ணப்பிப்பதை எளிதாக்கியது.

அதில், நாட்டில் பற்றாக்குறையாக உள்ள வேலைகளின் பட்டியலை விரிவுபடுத்த அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது, மேலும் இங்கிலாந்தில் வெளிநாட்டவர் விண்ணப்பிக்கக்கூடிய குறைந்த தகுதியான வேலையாக பராமரிப்பு சேவை பட்டியலிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் இடம்பெயர்வு ஆலோசனைக் குழுவின் ஆண்டு அறிக்கையின்படி, இந்த மாற்றமானது வேலைக்கான குறைந்தபட்ச வருடாந்திர சம்பளமாக 20,480 பவுண்ட் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்கை செய்திச் சேவை தனது கட்டுரையில் கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 150,000 பேர் திறமையான தொழிலாளர் விசாவில் இங்கிலாந்துக்கு வந்ததாகத் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *