அலியான்ஸ் லங்கா, நவலோக வைத்தியசாலை குழுமத்திற்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து!
Allianz Global Healthcare காப்புறுதிதாரர்களுக்கு பிரத்தியேகமான மற்றும் நிகரற்ற வரப்பிரசாதங்களை வழங்குவதற்காக, உலகளாவிய Allianz SE குழுமத்தின் உறுப்பு நிறுவனமும், முன்னணி காப்புறுதி சேவை வழங்குநருமான அலியான்ஸ் லங்கா, அண்மையில் நவலோக வைத்தியசாலைகள் குழுமத்துடன் ஒரு கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது. காப்புறுதிதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு முழுமையான மருத்துவ காப்புறுதித் திட்டமானது வைத்தியசாலை சிகிச்சையைப் பெறுவதற்கு முன் ஆரம்பித்து, வைத்தியசாலை சிகிச்சை நிறைவடைந்து வெளியேறிய பின் வரையில் உலகெங்கிலும் எந்த இடத்திலும் உயர் தரமான, உலகத்தரம் வாய்ந்த மருத்துவப் பராமரிப்பு வசதிகளுக்கு Allianz Global Healthcare Insurance எனப்படும் உலகளாவிய அலியான்ஸ் மருத்துவக் காப்புறுதித் திட்டம் உத்தரவாதம் அளிக்கின்றது.
Allianz Global Healthcare Insurance காப்புறுதித் திட்டத்தின் பல்வேறு நன்மைகள் மத்தியில் உலகளாவில் மருத்துவமனை சிகிச்சை காப்புறுதி, கொவிட்-19 காப்புறுதி, குடும்பத்தினருக்கான விசேட தள்ளுபடிகள், 64 வயது வரையில் காப்புறுதியைப் பெற்றுக்கொள்ளும் தகைமை, தேர்ந்தெடுக்கப்பட்ட சிகிச்சை (வெளிநாடு), மருத்துவ சிகிச்சைகளுக்கான அவசர வெளியேற்றம் மற்றும் திரும்புதல், 24/7 அவசர உதவி, நேரடி தீர்வுக் கொடுப்பனவு வசதிகள் மற்றும் பல அடங்கியுள்ளன.
அலியான்ஸ் லங்கா மற்றும் நவலோக வைத்தியசாலைகள் குழுமம் ஆகியவற்றுக்கு இடையேயான புதிய கூட்டாண்மையின் ஊடாக, நவலோக வைத்தியசாலைகளில் பிரத்தியேகமான வரப்பிரசாதங்களுடன் காப்புறுதிதாரர்களுக்கு இந்த விரிவான நன்மைகள் மேலும் அதிகரிக்கப்படும். கொழும்பு நகர எல்லைக்குள் கட்டணமின்றி அவசரகால அம்பியுலன்ஸ் சேவை, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து நவலோக ஆய்வுகூடங்கள் மற்றும் மாதிரி சேகரிப்பு மையங்களில் ஆய்வுகூட பரிசோதனைகளுக்கான தள்ளுபடிகள், மருத்துவமனை சிகிச்சை அறைகளுக்கான முன்னுரிமை கட்டணங்கள் மற்றும் மருத்துவமனை கட்டணப் பட்டியல்களில் மேலும் தள்ளுபடிகள் ஆகியவை இதில் அடங்கும்.
மிகவும் குறிப்பிடத்தக்கவகையில், புதிய கூட்டாண்மையானது Allianz Global Healthcare Insurance காப்புறுதிதாரர்களுக்கு நவலோக வைத்தியசாலைகள் குழுமத்தில் மருத்துவ பரிசோதனைகள் மீதான பிரத்தியேகமான தள்ளுபடிகள், மருத்துவத் தேவைகளுக்காக பிரத்தியேக வாடிக்கையாளர் உறவு முகாமையாளர் மற்றும் தகைமை கொண்ட காப்புறுதிதாரர்களுக்கு இன்னும் கூடுதலான வரப்பிரசாதங்களை வழங்கும் பிரத்தியேகமான நம்பிக்கை அங்கத்துவத் திட்டமான நவலோக வைத்தியசாலையின் Platinum Circle எனப்படும் சிறப்பு வரப்பிரசாதத்தில் இலவச உறுப்புரிமை ஆகியவற்றையும் பெற்றுக்கொள்ள முடியும்.
இக்கூட்டாண்மை தொடர்பில் விபரித்து, வாடிக்கையாளர்கள் மீது அலியான்ஸ் லங்கா கொண்டுள்ள அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டை விளக்கிய அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், இலங்கைக்கான முகாமையாளருமான அலன் ஸ்மீ அவர்கள், “வாழ்க்கையில் மிகவும் விலைமதிப்பற்றவற்றைப் பாதுகாக்க மக்களுக்கு உதவ நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். உங்கள் ஆரோக்கியத்தை விடவும் விலைமதிப்பற்றது வேறு என்னவாக இருக்க முடியும்! எமது வாடிக்கையாளர்களுக்கு தலைசிறந்த காப்புறுதித் தயாரிப்புகளை வழங்குவதற்கான இந்த ஆர்வமே, இலங்கையின் முன்னணி தனியார் சுகாதார சேவை வழங்குனர்களில் ஒன்றான நவலோக வைத்தியசாலைகள் குழுமத்துடன் இந்த கூட்டாண்மையை ஏற்படுத்துவதற்கு எங்களைத் தூண்டியது.
இந்தக் கூட்டாண்மையின் மூலம், எங்களின் மதிப்புமிக்க காப்புறுதியாளர்கள் மருத்துவ சிகிச்சை தேவைப்படும்போது, சிறந்த மட்டத்திலான கவனிப்பையும் தலைசிறந்த மதிப்பையும் அனுபவிப்பார்கள். எனவே, நவலோக வைத்தியசாலைகள் குழுமத்துடன் இணைந்து இந்த கூட்டாண்மையை அறிவிப்பது எமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதுடன், எதிர்காலத்தில் ஒன்றிணைந்து செயற்பட ஆவலாக உள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.
நவலோக ஹொஸ்பிட்டல்ஸ் பிஎல்சி இன் பணிப்பாளர் சபைத் தலைவரான கலாநிதி ஜயந்த தர்மதாச அவர்கள் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், “உலகளாவிய பக்கபலத்துடன் இலங்கையின் முன்னணி காப்புறுதி நிறுவனங்களில் ஒன்றுடன் கூட்டுச் சேர்வது எமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் தருகிறது. இலங்கையில் அபிமானம் பெற்ற சுகாதார சேவை வழங்குநராக, நாம் அனைத்து இலங்கையர்களுக்கும் ஈடுஇணையற்ற சேவைகளை வழங்கி வருகிறோம். மேலும் மிகச் சிறந்த மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சிகிச்சை முறைகளுடன் சிகிச்சை பெறுவதற்கு நாடுகின்றவர்களை இணைக்கிறோம்.
பரஸ்பரம் வளர்ச்சி கண்டு வருகின்ற எமது இரு தரப்பினதும் வாடிக்கையாளர்கள் தளத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் அதே வேளையில், இந்த கூட்டாண்மை மூலம் எழும் ஒருங்கிணைந்த பலம் எங்கள் இரு நிறுவனங்களுக்கும் மதிப்பைத் தோற்றுவிக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது,” என்று குறிப்பிட்டார்.
அலியான்ஸ் லங்கா என பொதுவாக அழைக்கப்படுகின்ற அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் மற்றும் அலியான்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் ஆகியன ஜேர்மனியின் மூனிச் மாநகரைத் தலைமையிடமாகக் கொண்ட காப்புறுதி மற்றும் சொத்து முகாமைத்துவ வணிகத்தில் முதன்மையான சேவைகளைக் கொண்ட உலகளாவிய நிதியியல் சேவை வழங்குநரான Allianz SE இன் முழுமையான உரிமையாண்மையின் கீழான துணை நிறுவனங்களாகும். அலியான்ஸ் குழுமத்தின் உலகளாவிய பலம் மற்றும் வலுவான மூலதனமயமாக்கல், உள்ளூர் நிபுணத்துவம் மற்றும் வணிக அறிவு ஆகியவற்றுடன் இணைந்து, அலியான்ஸ் லங்காவின் வெற்றிக்கான சக்திவாய்ந்த சூத்திரமாக உள்ளன.