இந்த நாட்டின் பூர்வீக ஆதிவாசிகளைத் தவிர ,ஏனையோர் வந்தேறு குடிகள்தான்!

 

“முஸ்லிம் சமூகம் பற்றிய சரியான விழிப்புணர்வை மாற்று சமூகங்களுக்கும் எத்திவைக்கவேண்டிய பணியை எங்கள் எல்லோருக்கும் இருக்கும் ஒரு மிகப் பெரிய பொறுப்புணர்ச்சியாக கொள்ளவேண்டிய ஒரு கால கட்டத்தில் இருக்கிறோம்”.

இவ்வாறு,அண்மையில் கொழும்பில் நடைபெற்ற கலாநிதி றவூப் ஸெய்ன் எழுதிய ” இலங்கை முஸ்லிம்களின் தேசிய பங்களிப்பு” நூல் வெளியீட்டு நிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

கடந்த வருடம் நடந்த மக்கள் புரட்சி, நாட்டினுடைய அரசியலை தலைகீழாக புரட்டிப் போட்டிருக்கிறது.
அந்த மக்கள் புரட்சிக்கு வித்திட்ட பொருளாதார வீழ்ச்சி, இன்னும் எங்களை இயல்பு வாழ்க்கைக்கு வருவதற்கு இயலாத ஒரு நிலைமையைத் தோற்றுவித்திருக்கிறது.

ஒவ்வொருவரும் அன்றாடம் தங்களுடைய வாழ்வாதாரத்தைப் பற்றி சிந்திக்கவேண்டிய ஒரு கட்டத்தில் இருந்து கொண்டிருக்கிறோம். இன்னும் கூடுதலான வரிச்சுமையை, ஒவ்வொரு துறையிலும் கட்டண உயர்வுகளை, விலைவாசி உயர்வுகளை சந்திக்கவேண்டிய நிர்பந்தத்தில் நாங்கள் இருந்து கொண்டிருக்கிறோம். இவை
எல்லாவற்றிற்கும் மத்தியில் கடந்த வருடம் நடந்த அந்த சமூகப் புரட்சியினால் நாங்கள் எல்லோரும் அனுபவித்த மிகப் பெரிய அச்ச உணர்வு எங்களைவிட்டு அகன்றிருக்கிறது என்றொரு நிம்மதிப் பெரும் மூச்சையும் நாங்கள் விட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஒருவிதமான முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புக் கலாசாரம் ஒன்றை உருவாக்கி அதன் மூலமாக, அதற்கென்று ஒரு அரசியல் நியாயத்தை கற்பிக்கிற ஒரு ஆபத்தான மனநிலையை இந்த நாட்டின் பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் விதைக்கிற ஒரு மோசமான கலாசாரம் உருவாகிக் கொண்டுவந்தது. அந்த கலாசாரம் வேண்டுமென்று அரசியல் காரணங்களுக்காகத்தான் உருவாக்கப்பட்டது என்பதை இன்று பெரும்பான்மை சமூகங்களும் உணர்ந்து கொள்கின்ற அளவிற்கு நாட்டில் நடந்த இந்த சமூகப் புரட்சி, அதனோடு சேர்ந்து நடந்திருக்கிற பொருளாதார வீழ்ச்சி என்பன அமைந்திருக்கின்றன. இந்த காரணங்களையெல்லாம் அடிப்படையாகவைத்துத்தான் ஓர் அளவுக்கு நாங்கள் நிம்மதிப் பெரும்மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறோம்.

இந் நூலின் மூலம் நூலாசிரியர் எப்படியெல்லாம் வெவ்வேறு துறைகளில் முஸ்லிம்களுடைய பங்களிப்பு ஆரம்பகாலம் தொட்டு இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கு துணையாக அமைந்திருந்தது என்பதை பல முக்கியமான அத்தியாயங்களில் வகைப்படுத்தி எங்களுக்கு தந்திருக்கிறார் என்பது முக்கியமான விடயமாகும்.

பொருளாதாரத்துறை, தேசிய இறைமை, பாதுகாப்புத்துறை, அரசியல் பங்கேற்பு, முஸ்லிம்களின் மருத்துவத்துறை பங்களிப்பு, சமய,கலாசார துறையில் எங்களுடைய பங்களிப்பு என்று பல துறைகளில் இவற்றை வேறுபடுத்தி ஆய்வு செய்கிற இந்த முயற்சியின் மூலம் உண்மையில் வெறும் வந்தேறு குடிகளாக மாத்திரம் பார்க்கப்பட்ட ஒரு சமூகம், வந்தேறு குடிகள் மாத்திரமல்ல வந்தேறு குடிகளாக வந்து, இருக்கிற பூர்வீக குடிகளின் ஒட்டுண்ணிகளாக நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற மாதிரி முஸ்லிம்களை சித்திரிக்க முயன்ற பலருக்கு இந்த நூலின் மூலம் நல்ல விடைகளை ஆசிரியர் தருகிறார் என்பதுதான் இதில் முக்கியமான விடயமாகும்.

எமது நாடு 16 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களால் கைப்பற்றப்பட்டு முதலில் கரையோரப் பகுதிகளும் பிறகு மலையகமும், முழு நாடும் உள்ளாக நாங்கள் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்த போதிலும்கூட, இந்த நாட்டின் பூர்வீக குடிகளான ஆதிவாசிகளைத் தவிர மற்றைய எல்லோரும் வந்தேறு குடிகள்தான் என்றளவிற்கு ஏதோ ஒரு வகையில் ஆக்கிரமிப்புகள்,படையெடுப்புகள் மூலம் வந்தவர்கள்தான் இங்கிருக்கிற சனப் பரம்பலை உருவாக்கினார்கள் என்பது வரலாறு.

அண்மையில் நான் தெஹியத்தகண்டிய பிரதேசத்திற்குப் போயிருந்தேன். அங்கிருக்கிற ஹெணாணிகல பிரதேசத்தின் ஆதிவாசி தலைவர்களோடு நீண்ட நேரம் உரையாடுகின்ற ஒரு வாய்ப்புக் கிடைத்தது, அவர்களுடைய மொழியில் பேசினார்கள், அதை அந்த ஆதிவாசி சமூகத்திலிருந்த இன்னுமொரு இளைஞர் சிங்களத்தில் மொழிபெயர்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார்.

நான் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் என்ற காரணத்தினால் எப்படியெல்லாம் முஸ்லிம்கள் ஆதிவாசிகளுக்கு உதவியாக இருந்தார்கள் என்பதைக் கூறும்போது , ஆரம்ப காலத்தில் இருந்து தங்களுக்கு எப்படி முஸ்லிம்கள் உதவினார்கள் என்றால், தாங்கள்ஹெணாணிகலயில் இருந்து தங்களுடைய ஆன்மீகப்படி,” கத்தரகம தெய்யோ” என்று அழைக்கப்படுகிற கதிர்காமக் கோயிலுக்கு நடந்து போய் தங்களுடைய காணிக்கைகளைச் சமர்பித்து வருகிற ஒரு வழக்கம் ஒவ்வொரு வருடமும் நடக்கிறது. அப்படி நடந்து போகின்ற போது, வழியில் இருக்கும் ஒவ்வொரு முஸ்லிம் கிராமங்களிலும் தங்களுக்கு கிடைக்கின்ற உபசரிப்பைப் பற்றி, இது இன்று,நேற்று அல்ல தங்களுடைய மூதாதையர் காலத்திலிருந்து இந்த, கத்தரகம யாத்திரையின் போது, தங்களுக்கு பல இடங்களில் முஸ்லிம்கள் உபசரிப்புகள் மாத்திரமல்ல, பணிவிடைகளையும், தங்களுக்கு தங்குமிட வசதிகளையும் செய்துதந்து, தங்களை உபசரிக்கிற மிகப் பெரிய பணியை முஸ்லிம்கள் செய்தார்கள் என்ற விடயங்களைப் பற்றி மிகவும் சிலாகித்து என்னோடு பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஆரம்ப காலத்திலிருந்து தங்களுடைய
பிரதேசங்களுக்கு வந்த முஸ்லிம் பணிக்கர்களைப் பற்றி அந்த ஆதிவாசித் தலைவர் என்னிடத்தில் சொல்லிக் கொண்டிருந்தார். கலாநிதி ஸெய்னுடைய ஊரிலும் கூட இந்த பணிக்கர் வர்க்கத்தினர், காட்டு யானைகளைப் பிடித்து அவற்றை மற்றைய வேலைகளுக்கு பயிற்றுவிக்கும் பணியை செய்த நீண்டதொரு பாரம்பரியம் முஸ்லிம்களுக்கு இருந்திருக்கிறது. அதை அந்த ஆதிவாசித் தலைவரும் என்னிடத்தில் உறுதி செய்தது மாத்திரமல்ல, எப்படியெல்லாம் பூர்வீக காலம் தொட்டு தங்களுடைய இந்த பண்டமாற்று பணிகளில் முஸ்லிம்கள் அவர்களுக்கும் ,அவர்கள் முஸ்லிம்களுக்கும் உதவியாக இருந்தார்கள் என்பதைக் கூறினார்.

குறிப்பாக இங்கு சொல்லப்படுகின்ற இந்த தவளம என்கிற கரையோரப் பகுதியில் இருந்து மலைநாட்டிற்கு பொருட்களை ஏற்றிச் செல்வதற்கான வியாபார நோக்கத்துடனான பயணத்தை முஸ்லிம்கள் மேற்கொண்ட போது, தங்களது பிரதேசங்களை எதிர்கொண்டு போகின்றபோது தங்களுக்கு அவர்கள் இலவசமாக பலவற்றை தந்துவிட்டுப் போனார்கள் என்ற விடயங்களையெல்லாம் ஒரு ஆதிவாசித் தலைவர் என்னிடத்தில் சொல்லுகின்றளவிற்கு முஸ்லிம்களைப் பற்றி, அவர்களுடைய பூர்வீகத்தைப் பற்றி அவர்கள் அதற்கு சாட்சியாக இருந்து பல விடயங்களை பகிர்ந்து கொண்டபோது எப்படியெல்லாம் எங்களுடைய சமூகம் ஆரம்ப காலத்திலிருந்து இந்த நாட்டின் பல துறைகளிலும் ஈடுபாட்டுடன் தனது பங்களிப்பைச் செய்திருக்கிறது என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.

இந்த புத்தகம் எப்படி முஸ்லிம்களுடைய வணிகத் தொடர்பாடல்கள் மற்றும் இலங்கை வந்த ஆக்கிரமிப்பாளர்களின் சொந்த சுயலாப நோக்கத்திற்கு முரணாக இருந்தபோது எப்படியெல்லாம் பழிவாங்கப்பட்டார்கள் என்ற விடயத்தையும் இங்கு ஆராய்வது மட்டுமல்ல முஸ்லிம்களுக்கு நடந்த அநியாயங்கள்,அக்கிரமங்கள் எப்படியெல்லாம் கடந்த காலங்களில் கரையோரப் பிரதேசங்களுக்கும், மலையகத்திற்குமிடையிலான உறவுப்பாலமா இருந்த முஸ்லிம் வணிகர்களுக்கு கரையோரப் பகுதிகளில் ஆபத்து நேர்ந்த போது, குறிப்பாக போர்த்துக்கேயர்,ஒல்லாந்தருடைய ஆட்சிக் காலத்தில் மோசமான பழிவாங்களுக்குள்ளாக்கப்பட்டு நிறையப் பேர் கூண்டோடு கொலை செய்யப்பட்ட நிலைவரங்கள் ஏற்பட்டபோது கண்டிய மன்னர்கள் முஸ்லிம்களை கிழக்கு பிரதேசங்களில் குடியேற்றினார்கள் என்ற வரலாறும் நாங்கள் எல்லோரும் அறிந்த விடயமாகும்.

இது நிறைய இடங்களில் ஆவணப்படுத்தப்பட்டு ,தெளிவாக இந்த நாட்டில் முஸ்லிம்களுடைய பூர்வீகம் குறித்த பல தடயங்கள் இருந்தபோதும் அவற்றையெல்லாம் தாண்டி மிகப் பழமையான தடயங்களை இந்தப் புத்தகம் ஆராய்ந்து ஆவணப் படுத்துகின்ற விடயம் மிகவும் பாராட்டத்தக்கது. இயலுமாக இந்த நூலை சிங்கள மொழியில் மொழிபெயர்ப்பது மிக முக்கியமானது என்று நான் கருதுகிறேன். சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்படுவதன் மூலம் முஸ்லிம் அல்லாதவர்களும் இந்த நாட்டின் முஸ்லிம்களின் பூர்வீகம் சம்பந்தமாக சரியான ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்வதற்கு அது வசதியாக அமையும்,அதற்கான முயற்சியை ஆசிரியரும்,அவருடைய இந்த முயற்சிக்கு துணையாக வந்திருக்கும் சமூக தலைமைகளும் இதில் அவருக்கு பக்கத்துணையாக இருக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

(தொகுப்பு:எம்.என்.எம்.யஸீர் அறபாத் -ஓட்டமாவடி.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *