கடந்த ஆண்டில் சென்னை விமான நிலையத்தில் 124 கோடி ரூபாய் தங்கம் பறிமுதல்!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் அதிகமாக இருக்கும். வெளிநாட்டுக்கு கடத்தப்படும் வெளிநாட்டு பணமும் பறிமுதல் செய்யப்படும். ஆனால் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தங்கம் கடத்தலை தொடர்ந்து ஹெராயின் போன்ற போதை பவுடர், வனவிலங்குகள், வைரம் போன்ற கடத்தலும் அதிகரித்து விட்டன. நாளுக்கு நாள் புது புது விதமாக நவீன முறையில் கடத்தப்பட்டு வருகின்றன. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 2021-ம் ஆண்டைவிட 2022-ம் ஆண்டில் தங்கம், போதைப்பொருள், வெளிநாட்டு பணம் போன்ற கடத்தல் பொருட்கள் அதிக அளவில் பிடிபட்டது. சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து 2022-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி வரை ரூ.94.22 கோடி மதிப்புள்ள 205.84 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தங்கம் கடத்தல்கள் சம்பந்தமாக 293 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கடத்தலில் ஈடுபட்ட 97 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த கடத்தல் தங்கம் அதிகமாக துபாய், சார்ஜா, குவைத், சவுதி அரேபியா, இலங்கை உள்பட வளைகுடா நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்டுள்ளன. மேலும் மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்தும் தங்கம் கடத்தப்பட்டு வந்தன. அதேபோல் சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற ரூ.10 கோடியே 97 லட்சம் அமெரிக்க டாலர், யூரோ கரன்சி, சவூதி ரியால் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இது தொடர்பாக 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வெளிநாட்டு பணம் கடத்தல் சம்பவங்களில் பெண்கள் அதிக அளவில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரூ.14 கோடி மதிப்புள்ள 27.66 கிலோ ஹெராயின், மெத்தகுலோன், கொகைன் போன்ற போதை பவுடர்களையும் பறிமுதல் செய்தனர்.

இதில் உகாண்டா, தான்சான்யா, வெனிசுலா, எத்தியோப்பியா, கென்யா ஆகிய நாட்டைச் சேர்ந்த பெண்கள் உள்பட 12 பேர் சார்ஜா, எத்தியோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபா நாடுகளில் இருந்து கடத்தி வந்துள்ளனர்.மேலும் கொழும்பில் இருந்து ரூ.1 கோடியே 26 லட்சம் மதிப்பிலான 5,274 காரட் வைர கற்கள், நவரத்தினங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற ஒரு புத்தர் சிலை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.3 கோடியே 90 லட்சம் மதிப்பிலான சிகரெட்டுகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆக மொத்தம் 2022-ம் ஆண்டில் ரூ.124 கோடியே 88 லட்சம் மதிப்பிலான தங்கம், போதைப்பொருள் உள்ளிட்டவை கடத்தப்பட்டுள்ளன. இவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 407 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 122 கடத்தல் ஆசாமிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பெண்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *