வரலாற்றில் முதன் முறையாக தாஜ்மஹால் மீது வரி செலுத்த அறிவிப்பு!

வரலாற்றில் முதன்முறையாக தாஜ் மஹால் மீது சொத்து வரி மற்றும் தண்ணீர் வரி போடப்பட்டுள்ளது. இந்த வரிகளை செலுத்துமாறு இந்திய தொல்லியல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நமக்கு சொந்தமான சொத்துபத்துக்கள், நாம் பயன்படுத்தும் தண்ணீர், நாம் பெறும் வருமானம் என எல்லாவற்றிற்கும் நாம் அரசுக்கு வரி செலுத்துவோம். இது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையாகும்.

ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக இந்தியாவின் பாரம்பரிய நினைவுச்சின்னமான தாஜ் மஹாலின் மீது வரிகள் போடப்பட்டுள்ளது. சுமார் 1.4 லட்சம் ரூபாய் சொத்து வரியும், ரூ. 1 கோடி தண்ணீர் வரியும் செலுத்தவேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

2021-22 மற்றும் 2022-23 ஆம் ஆண்டுகளுக்கான சொத்து மற்றும் தண்ணீர் வரியை அடுத்த 15 நாட்களுக்குள் செலுத்தவேண்டும் என இந்திய தொல்லியல் துறைக்கு (ASI) ஆக்ரா நகராட்சி நோட்டீஸ் வழங்கியுள்ளது.

சரியான நேரத்திற்குள் வரியை செலுத்தாவிடில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது

தாஜ் மஹாலின் 370 ஆண்டுக் கால வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்வது இதுவே முதல் முறை.

இது குறித்து பேசிய ASI தொல்லியல் கண்காணிப்பு ஆய்வாளர் (ஆக்ரா வட்டம்) ராஜ் குமார் படேல், நினைவுச்சின்னங்கள் மீது சொத்துவரிகள் போடப்படுவதில்லை எனவும், தண்ணீர் வணிக ரீதியாக பயன்ப்படுத்தப்படவில்லை என்பதால் எந்த வரியையும் செலுத்த வேண்டியதில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் அவர் “வளாகத்தினை பராமரிக்கவே தண்ணீர் பயன்படுத்தப்பட்டுள்ளது. தாஜ் மஹால் மீது சொத்து வரி போடப்பட்டுள்ளது இதுவே முதன் முறை. இதில் தவறு நிகழ்ந்திருக்கலாம்” என ஆய்வாளர் ராஜ் குமார் படேல் தெரிவித்துள்ளதாக வியான் நியூஸ் தளம் கூறுகிறது

உத்திரபிரதேச அரசின் பல பிரிவுகளில் நிலுவையில் உள்ள பில்கள் தொடர்பாக அனுப்பட்ட நோட்டிஸ்களில் தாஜ் மஹாலுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய நகராட்சி ஆணையாளர் நிகில் ஃபண்டே, “தாஜ்மஹால் தொடர்பான வரி நடவடிக்கைகள் பற்றி எனக்குத் தெரியாது. மாநிலம் தழுவிய புவியியல் தகவல் அமைப்பு (ஜிஐஎஸ்) வரிகளைக் கணக்கிடுவதற்காக நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன” என்றார்.

மேலும் அவர் அரசு கட்டிடங்கள் மற்றும் மதத் தலங்கள் உட்பட அனைத்து வளாகங்களிலும் நிலுவையில் உள்ள தொகையின் அடிப்படையில் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

சட்டப்படி உரிய நடவடிக்கைக்குப் பின் தள்ளுபடி வழங்கப்படுகிறது. தாஜ்மஹால் நோட்டீஸ் விவகாரத்தில் ASI-யிடமிருந்து பெறப்படும் பதிலின் அடிப்படையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தாஜ் மஹால் மீது சொத்து மற்றும் தண்ணீர் வரி போடப்பட்டுள்ள விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *