இந்தியாவில் கேபிள் கார் அறுந்து விழுந்ததில் 60 பேர் பலி 100 பேர் மாயம்!

குஜராத்தின் மோர்பி நகரில் பழமையான கேபிள் பாலம் அறுந்து விழுந்ததில் சுமார் 60 பேர் பலியாகினர். பாலம் அறுந்த சமயத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் அதில் இருந்ததாகவும், அவர்களில் 100க்கும் மேற்பட்டோர் ஆற்றில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது. ஆற்றில் மூழ்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்தது. குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே நூற்றாண்டு பழமையான தொங்கும் கேபிள் பாலம் அமைந்துள்ளது. அப்பகுதியில் சுற்றுலா தலமாக திகழும் இந்த பாலத்தை சீரமைக்கும் பணி சமீபத்தில் நடந்தது. பணிகள் முடிந்த பின் கடந்த 26ம் தேதி, பாலம் மீண்டும் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. பாலம் திறக்கப்பட்டதால், அதைப் பார்க்க சுற்றுப்புற பகுதி மக்கள் நேற்று ஏராளமானோர் திரண்டனர். விடுமுறை தினம் என்பதால் கூட்டம் அதிகளவில் இருந்தது. மாலை 6.30 மணி அளவில், சுமார் 500 பேர் பாலத்தில் இருந்தபடி ஆற்றின் அழகை ரசித்துக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென கேபிள் பாலம் அறுந்து விழுந்தது.

இதில் 100க்கும் மேற்பட்டோர் ஆற்றில் மூழ்கினர். 50க்கும் மேற்பட்ட பெண்களும், குழந்தைகளும் அறுந்த பாலத்தின் ஒரு பகுதியை பிடித்து தொங்கியபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். கரையை ஒட்டி பாலத்தில் நின்றிருந்தவர்கள் நூலிழையில் உயிர் தப்பி கரை சேர்ந்தனர். உடனடியாக தகவலறிந்த போலீசாரும், தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுற்றுப்புற பகுதி மக்களின் உதவியுடன் மீட்புப்பணிகள் நடந்தன. ஆற்றில் குறைவான தண்ணீர் இருந்தாலும், அப்பகுதியில் போதுமான மின்விளக்கு வசதிகள் இல்லாமல், இருள் சூழ்ந்து காணப்பட்டதால் மீட்புப்பணி மேற்கொள்வதில் கடும் சிக்கல் ஏற்பட்டது. குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி விபத்து குறித்து தகவல் அறிந்ததும், மாநில முதல்வர் பூபேந்திர சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக மீட்புப்பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். முதல்வர் பூபேந்திர படேலும் சம்பவ இடத்திற்கு புறப்பட்டார்.

இந்த விபத்தில் சுமார் 60 பேர் பலியானதாக முதற்கட்ட தகவலில் உறுதிபடுத்தப்பட்டது. போலீஸ் டிஜிபி ஆஷிஷ் பாட்டியா கூறுகையில், ‘‘மாலை 6.30 மணி அளவில் விபத்து நடந்துள்ளது. பாலம் அறுந்த சமயத்தில் 150 பேர் இருந்துள்ளனர். அடுத்த 15 நிமிடத்தில் போலீசாரும் தீயணைப்பு வீரர்களும், டாக்டர்கள், ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டு மீட்பு பணிகள் தொடங்கப்பட்டன. 100 பேர் ஆற்றில் மூழ்கினர். அவர்களில் 40 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மாயமான 60 பேரை தேடும் பணி நடக்கிறது. அறுந்த பாலத்தில் தொங்கிக் கொண்டிருந்த 6 பேரை பத்திரமாக மீட்டுள்ளோம். காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் 50 பேர் சுயநினைவின்றி உள்ளனர்’’ என்றார். ராஜ்கோட் எம்பி மோகன் கண்டாரியா அளித்த பேட்டியில், ‘‘விபத்தில் 50 பேர் இறந்துள்ளனர். 100 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களை மருத்துமனைகளுக்கு கொண்டு செல்லும் பணி வேகமாக நடந்து வருகிறது. சம்பவ இடத்திலேயே மருத்துவ குழுவினர் அழைத்து வரப்பட்டு முதலுதவி சிகிச்சைகளும் தரப்படுகின்றன’’ என்றார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *