மனைவிக்கு 55 ஆயிரம் உடைகளை வாங்கிக் கொடுத்த காதல் கணவர்!

பண்டிகை காலங்களில் கூட ஒரு புடவை வாங்கிவிட்டு இன்னொன்று நல்லா இருக்கே’ என தொட்டுப் பார்த்தாலே ‘வீட்ல இருக்க சேலையெல்லாம் எடைக்குப் போடப் போறியா?’ என முணுமுணுப்பார்கள் கணவன் மார்கள். ஆனால் அமெரிக்கா அரிசோனாவில் ஒரு கணவன் தன் மனைவி ஒரு முறை உடுத்திய உடையை மற்றொரு முறை உடுத்தக் கூடாது என கடந்த 61 வருடங்களாக சுமார் 55,000 உடைகளை வாங்கிக் குவித்திருக்கிறார். அதிர்ச்சியடையாதீர்கள் உண்மைதான்.
 
83 வயது பால், அவரது மனைவி மார்கட் பிராக்மன். ஐம்பதுகளில் தங்களது சொந்த நாடான ஜெர்மனியில் ஒரு நடன நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்திருக்கிறார்கள்.  இரவு முழுக்க நடனம் ஆடியவர்கள் விடியும் போது இருவரும் காதலர்களாக வெளியேறியிருக்கிறார்கள். இவர்களின் ஒவ்வொரு சந்திப்பிலும் பால், மார்கட்டுக்கு ஸ்டைலான உடையைத்தான் பரிசாகக் கொடுத்திருக்கிறார்.

முதன்முதலில் மார்கட்டை சந்தித்தப் போது அவர் என்ன உடை உடுத்தியிருந்தார் என்பதை மார்கட் கூட மறந்துவிட்டார். ஆனால் பால் சரியாகச் சொல்கிறார். ‘அந்த நீல நிற உடையில் மார்கட் அவ்வளவு அழகா இருந்தாள். இப்போதும் அந்த முதல் சந்திப்பு அப்படியே மறக்காமல் இருக்கு. நாளுக்கு நாள் ஃபேஷன் மாறிக்கொண்டே இருக்கும், அதற்கேற்ப நான் உடைகள் வாங்கிக் கொடுத்திட்டே இருப்பேன்.

நான் வாங்கிக்கொடுத்த எல்லாமே  அந்தந்த சமயத்தில் ஃபேஷன் டிரெண்டுல இருக்கும். ஒவ்வொரு பத்து வருடங்களுக்கு ஒருமுறையும் ஒரு செட் உடைகளை நாங்க விற்பனை செய்திடுவோம். பேரமெல்லாம் கிடையாது, கொடுக்கற காசுக்கு விற்போம். அப்படியும் இப்போது நாங்க இருக்கற அமெரிக்க அரிசோனாவுல ஒரு கேரேஜ் நிறைய துணிகள் இருக்கு. அவ்வளவையும் ஒரு சின்னத் தொகைக்கு விற்கப் போறோம்’ என்கிறார் பால்.

‘இதில் ஒரு உடையைக் கூட நான் இரண்டாவது முறைப் பயன்படுத்தியதில்லை. இடம் இல்லாத காரணம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாலின் உடைகள் வாங்கும் பழக்கதை நான் நிறுத்திட்டேன். போதும். ஆசை தீர என் கணவர் எனக்கு வாங்கிக் கொடுத்திட்டார். நானும் போட்டு அழகு பார்த்துவிட்டேன். மகாராணிகள் கூட இப்படி உடைகள் வாங்கியிருக்க மாட்டார்கள்’ என்னும் மார்கட் அதில் ஒரு 200 உடைகளை மட்டும் தனக்கென எடுத்து வைத்திருக்கிறாராம்.

இப்போது கூட தங்களது திருமண நாளுக்கு இரண்டு புது உடைகள் இருக்கு எனப் பூரிக்கிறார் மார்கட். evolution-vintage.com என்னும் தளத்தில் அத்தனை உடைகளும் அதற்கு மேட்சிங்காக மார்கட் பயன்படுத்திய நகைகள் உட்பட அனைத்தும் விற்பனைக்கு உள்ளன என்பது சிறப்புத் தகவல்.

தொகுப்பு : ஷாலினி நியூட்டன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *