முன்னாள் ஜனாதிபதி கோட்டா நாடு திரும்பியதும் காத்திருக்கும் நெருக்கடி?

இலங்கையை விட்டு தப்பியோடியதாக கூறப்படும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டுக்குத் திரும்பியவுடன் அவர் யுத்தக்குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச ஊடகங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கோட்டாபய  ராஜபக்ச நாடு திரும்புவார் என  அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ள நிலையிலேயே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜூலை மாதம் மாலைதீவிற்கும் பின்னர் சிங்கப்பூருக்கும் சென்ற கோட்டாபய ராஜபக்ச அங்கிருந்து தனது பதவி விலகல்  கடிதத்தை அனுப்பினார்.

ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் விடுபாட்டுரிமைக்குரியவராக காணப்பட்ட கோட்டாபய ராஜபக்ச தற்போது வழக்கு விசாரணைகளில் இருந்து பாதுகாக்கப்படாதவராக மாறியுள்ளார்.

அவரது பதவிக்காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. அவரை கைதுசெய்யவேண்டும் என்ற பரந்துபட்டவேண்டுகொள்கள் காணப்படுகின்றன.

பாதுகாப்பு செயலாளராக கோட்டாபய பணியாற்றியவேளை 2009 இல் தமிழ் கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக இராணுவம் இழைத்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து முன்னாள் ஜனாதிபதியை விசாரணைக்குட்படுத்தவேண்டும் என இலங்கையின் ஒடுக்குமுறைகளிற்குள்ளான சிறுபான்மையினத்தவரை பிரநிநிதித்துவம் செய்யும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

எதிர்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தியும் மார்க்சிச கட்சியும் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக ஊழல் விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளன என ஸ்டிரெய்ட் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் தனது விசாவை இரண்டு வார காலத்திற்கு நீடித்துள்ளார் என ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

11ம் திகதி வரை அவர் சிங்கப்பூரில் தங்கியிருக்கலாம் என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது. கோட்டாபய ராஜபக்சவை கைதுசெய்யவேண்டும் என மனித உரிமை அமைப்புகளால் அழுத்தத்திற்குள்ளாகியுள்ள சிங்கப்பூர் அதிகாரிகள் கோட்டாபய  ராஜபக்ச இதுவரை அடைக்கலம் கோரவில்லை என தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *