தவறுதலாக வங்கிக் கணக்கில் போட்ட கோடிக்கணக்கான பணம் தலைமறைவான ஊழியர்!

சமீபகாலமாக, நாம் வேலை செய்யும் நிறுவனங்களில் நடக்கும் நகைச்சுவையான சம்பவங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிலும், வித்தியாசமாகவும், உண்மையாகவும் மனதில் தோன்றுவதை சொல்லி வேலையை ராஜினாமா செய்தவர்களைப் பற்றி ஒரு வாரக்காலமாக பல செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

அப்படி ஒரு வித்தியாசமான காரணத்திற்காக சிலி நாட்டை சேர்ந்த நபர் வேலையை விட்டிருக்கிறார். பொதுவாக நாம் வேலை செய்யும் நிறுவனங்களில் நமக்கு சம்பளம் கிரெடிட் செய்யும்போது, தவறுதலாக இரண்டு முறை அனுப்பிவிடுவார்கள். அதுவும் எப்போதாவது தான் அந்த தவறு நடக்கும். நாமும் அதை நல்ல பிள்ளையாக திரும்ப கொடுத்து விடுவோம்.

ஆனால் இந்த நபருக்கு அவர் பணிபுரியும் நிறுவனத்திலிருந்து தவறுதலாக 286 முறை சம்பளம் வந்துள்ளது. அதுவும் ஒரே மாத சம்பளம்.

இவரது ஒரு மாத சம்பளம் 500,000 சிலியன் பெஸோஸ் ( இந்திய மதிப்பில் ரூ.43,000 ). அவர் பணிபுரியும் நிறுவனம் இவருக்கு வழங்கிய சம்பளம் 165,398,851 சிலியன் பெஸோஸ். அதாவது இந்திய மதிப்பில் ரூ. 1.42 கோடியாம்.

இந்த தவறை உணர்ந்த நிறுவனம் பணத்தை திரும்ப கொடுக்க சொல்லி அவரை அனுகியபோது, அவரும் வங்கிக்கு சென்று பணத்தை எடுத்து வருவதாக சொல்லி சென்றுள்ளார்.

நிறுவனமும் அவர்களது பணம் வந்துவிடும் என்று காத்திருந்தது. அவர்கள் காத்திருந்தது தான் மிச்சம். வங்கியிலிருந்து பணம் வந்ததற்கான குறுஞ்செய்திகளும் வரவில்லை, பணம் எடுக்க சென்றவரும் வரவில்லை.

அவரை தொடர்புகொள்ள முயற்சித்த போது அந்த நபரும் பதிலளிக்கவில்லை. சில மணி நேரம் கழித்து அந்த நபரே நிறுவனத்திற்கு தொடர்புகொண்டு உறங்கிவிட்டதாகச் சொல்லி, இனிமேல் தான் வங்கிக்கு செல்லவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

ஆனால் கடந்த ஜூன் 2 ஆம் தேதி அலுவலகத்திற்கு சென்று தான் வேலையை ராஜினாமா செய்வதாக சொல்லிவிட்டு நிறுவனம் தவறுதலாகக் கொடுத்த சம்பளத்தை எடுத்துகொண்டு தலைமறைவாகிவிட்டார்.

தற்போது அவர் மீது வழக்கு பதிவு செய்து, அவரை தேடி வருகிறது நிறுவனம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *