அண்டார்டிக் பனி அடுக்கின் கீழ் மறைந்திருந்த தனி உலகம்!

மனித இனம் இந்த பூமியில் செழித்து வளரத் தொடங்கியதிலிருந்து, புவி தன்னுள் ஒளித்து வைத்திருந்த மர்மங்களை அவர்கள் கண்டுபிடித்து வருகிறார்கள். தொழில்நுட்பம் தன் உச்சத்தில் இருக்கும் இந்த காலத்தில் கூட, பூமியில் புதைந்திருக்கும் பல்வேறு மர்மங்கள் ஒவ்வொன்றாக வெளிப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது.

அப்படி, அண்டார்டிக் பனி அடுக்கின் கீழ் சுமார் 500 மீட்டர் ஆழத்தில், பல்வேறு கடல்வாழ் உயிரினங்கள் வாழும் ஒரு தனி உலகமே இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ரோஸ் பனி அடுக்கின் (Ross Ice Shelf) முனையிலிருந்து சில நூறு கிலோமீட்டர் தொலைவில், ஆறும் கடலும் சேரும் முகத்துவாரத்தில் இப்படி ஒரு உலகம் இருப்பதை நியூசிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆய்வாளர்கள் தங்களின் துளையிடும் கருவி மூலம் பனி அடுக்கைத் துளையிட்டுக் கொண்டிருந்த போது, லாப்ஸ்டர்கள், நண்டுகள் போன்ற ஒரு வகையான ஆம்ஃபிபாட் உயிரினங்கள் துளையிட்டு முன்னேறிச் செல்லும் எந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமராவைச் சூழ்ந்து கொண்டது.

ஏதோ கேமராவில் கோளாறு ஏற்பட்டதாகக் கருதி, கேமராவை ஆய்வாளர்கள் குழு சரி செய்து, அதன் ஃபோகஸை அதிகரித்துப் பார்த்த போது 5 மில்லி மீட்டர் அளவு கொண்ட ஆந்த்ரோபாட் உயிரினங்கள் சூழ்ந்திருந்ததாக நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வாட்டர் அண்ட் அட்மாஸ்ஃபெரிக்ஸ் என்கிற நிறுவனத்தின் பேராசிரியர் மற்றும் ஃபிசிகல் ஓசியானோகிராஃபர் க்ரெய்க் ஸ்டீவன்ஸ் ‘இண்டிபென்டன்ட்’ பத்திரிகையிடம் கூறியுள்ளார்.

“எங்கள் எந்திரத்தை உயிரினங்கள் சுற்றி வருகின்றன என்றால், அங்கு ஒரு வாழ்வியல் சூழலே இருக்கிறது என்பது தெளிவானது. எனவே நாங்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தோம்” என்றும் கூறினார் க்ரெய்க் ஸ்டீவன்ஸ்.

அந்த பகுதியில் இருக்கும் நீரைக் கொஞ்சம் சேகரித்து, அதை ஆய்வகத்தில் பரிசோதித்த போது, அருகிலுள்ள வாழ்வியல் சூழல்களில் இல்லாத சில விஷயங்கள் இந்த வாழ்வியல் சூழலில் இருப்பதைக் கவனித்தோம் என்றும் கூறியுள்ளார் க்ரெய்க்.

இந்த ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள அண்டார்டிக்கா நியூசிலாந்து என்கிற அமைப்புதான் உதவியது. ஒடாகோ, ஆக்லேண்ட், வெலிங்டன் போன்ற பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதில் பணியாற்றினர்.

அவர்களோடு ஜியாலஜிகள் அண்ட் நியூக்ளியர் சயின்சன்ஸ் என்கிற அமைப்பைச் சேர்ந்தவர்களும் பணியாற்றினர். காலநிலை மாற்றத்தினால் பனி அடுக்குகள் உருகுவதில் முகத்துவாரங்களின் பங்கு என்ன என்பதைக் குறித்து இந்த குழு ஆராய்ந்தது. அப்போது தான் இந்த தனி கடல்வாழ் உயிரின உலகத்தைக் கண்டுபிடித்தது இந்த ஆராய்ச்சிக் குழு.

அப்பகுதியில் ஒரு முகத்துவாரம் இருப்பதை, இந்த ஆய்வை முன்னின்று வழிநடத்திய தலைவர் ஹூ ஹார்கன் (Huw Horgan) என்பவரும், வெலிங்டன் பல்கலைக்கழகத்தின் ஜியோஃபிசிகல் கிலேசியாலஜி பிரிவில் துணைப் பேராசிரியராக இருக்கும் டி ஹெரெங்கா வாகாவும் (Te Herenga Waka)

கண்டுபிடித்தனர்.

கடந்த பல காலமாகவே அண்டார்டிக் பனி அடுக்குக்களின் கீழ் ஆறுகள் மற்றும் ஏரிகள் மறைந்திருப்பதாகத் தொடர்ந்து சந்தேகங்களும், கருத்துகளும் எழுப்பப்பட்டு வந்ததாக முனைவர் ஹூ ஹார்கன் கூறியுள்ளார்.

அண்டார்டிக் பனி அடுக்கின் கீழ், பல நூறு மீட்டர் உயரம் கொண்ட ஒரு பெரிய தேவாலயம் போன்ற குகை இருந்தது. அதிலும் பல உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன என ஹூ ஹார்கன் கூறினார்.

இன்னும் என்ன மாயங்களை எல்லாம் அண்டார்டிக் பனி அடுக்குகள் தன்னுள் மறைத்து வைத்திருக்கிறதோ அறிவியலுக்குத் தான் வெளிச்சம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *