குரங்கம்மை நோய் தொடர்பில் இலங்கை வைத்திய நிபுணர் விடுத்துள்ள எச்சரிக்கை!

உலக நாடுகளில் தற்போது பரவி வரும் குரங்கம்மை நோயானது கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களை வேகமாகத் தாக்கும் என யாழ். போதனா வைத்தியசாலையின் நோயியல் மகப்பேற்று வைத்திய நிபுணர் அப்பாத்துரை சிறீதரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவ சங்கம் குரங்கம்மை நோய் தொடர்பில் விழிப்பூட்டும் வகையில் நேற்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தது.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், 1958ஆம் ஆண்டு ஆபிரிக்க ஆய்வு கூடம் ஒன்றில் ஆய்வு பணிக்காக வைத்திருந்த குரங்கு ஒன்றில் முதன் முதலில் குரங்கம்மை நோய் இனம் காணப்பட்டது.

இலங்கையில் குரங்கம்மை நோய்
இலங்கையில் குரங்கம்மை நோயின் தாக்கம் உணரப்படாமல் விட்டாலும் இலங்கையை குறித்த நோய் தாக்காது என கூற முடியாது.

ஏனெனில் சுற்றுலாப்பயணிகளின் வருகை, பொருட்கள் மற்றும் பண்டங்கள் பரிமாற்றம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற நிலையில் குறித்த நோயானது வீடுகளுக்கே செல்லக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவிட் வைரஸ் ஏற்பட்டபோது சீனாவில் தான் பரவியுள்ளது என நாம் அலட்சியமாக சில மாதங்கள் இருந்தோம். ஆனால் மிக வேகமாக இலங்கையை தாக்கியதை அனைவரும் அறிவீர்கள்.

இலங்கையில் கோவிட் தாக்கத்தின் போது கர்ப்பிணிப் பெண்கள் பலர் உயிரிழந்த நிலையில் குரங்கு அம்மை நோய் தொடர்பில் நாம் விழிப்பாக இருக்க வேண்டும்.

கர்ப்பிணி தாய்மார்கள் பாலூட்டும் தாய்மார்களின் நோய் எதிர்ப்பு சக்தியானது குறைவாக காணப்படுமிடத்து குரங்கம்மை நோயானது விரைவாக அவர்களை தாக்கக் கூடிய சூழ்நிலை உள்ளது.

குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போது தொப்புள் கொடி வழியாக குறித்த நோயானது குழந்தைக்கும் பரவும். இதனை தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என நாம் நோக்கும் போது பெரியம்மை நோய் குரங்கம்மை நோய் இரண்டும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை.

குறித்த நோயானது தொடுகை, சுவாசம் போன்றவற்றினால் பரவும் நிலையில் காணப்படுவதால் கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் இரண்டு விடயங்களிலும் அவதானமாக இருக்க வேண்டும்.

பெரியம்மை நோய்க்கான தடுப்பூசி
இலங்கையில் 1980ஆண்டு பெரியம்மை நோய் முழுமையாக கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி வழங்கியமையே பிரதான காரணம்.

பெரியம்மை நோய்க்கு வழங்கப்படுகின்ற மூன்றாவது தடுப்பூசியை குரங்கு அம்மை நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு செலுத்த முடியும்.

ஆகவே குரங்கம்மை நோய் தொடர்பில் நாம் விழிப்பாகவும், முன்னெச்சரிக்கையாகவும் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அனைவருடைய பொறுப்பாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *