என்னை மிரட்டவும் முடியாது!விரட்டவும் முடியாது ஜனாதிபதி கோட்டாபய!

“நான் நிறைவேற்று அதிகாரத்தைக்கொண்ட ஜனாதிபதி. எனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தியே அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளேன். இந்நிலையில், நடைமுறையிலுள்ள இந்தச் சட்டத்தை இரத்துச் செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் கொடுக்கவும் முடியாது; மிரட்டவும் முடியாது.” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று நடத்திய விசேட சந்திப்பின்போதே மேற்கண்டவாறு கூறினார்.

“மக்கள் போராட்டங்களை அடக்குவதற்காக அவசரகாலச் சட்டத்தை நான் நடைமுறைப்படுத்தவில்லை. போராட்டம் என்ற பெயரில் வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக அனைத்துச் சட்டங்களும் பாயும்” என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

“எனக்கு எதிராக எவரும் கருத்துக்களையும் தெரிவிக்கலாம்; போராட்டங்களையும் நடத்தலாம். ஆனால், என்னைப் பதவியிலிருந்து எவரும் விரட்ட முடியாது. 5 வருட மக்கள் ஆணைக்கமைய நான் ஜனாதிபதி பதவியில் நீடிப்பேன்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் அரசுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார்.

இதற்கு உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் கடும் கண்டனங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி மக்களின் அறவழிப் போராட்டம் மீது கைவைக்க வேண்டாம் எனவும் அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட ‘மொட்டு’வின் சிரேஷ்ட உறுப்பினர்களில் சிலர் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமைக்கு எதிராகக் கருத்துக்களையும் முன்வைத்தனர். எனினும், கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரினதும் வாய்களையும் மூடும் வகையில் ஜனாதிபதி மேற்படி விடயங்களைத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *