ரஷ்யாவின் 3 முக்கிய பகுதிகளில் உக்ரைன் அதிரடி தாக்குதல்!

கடந்த 2 மாதங்களாக ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதலில் உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் உருக்குலைந்து விட்டன. ஆனால், ரஷ்யாவுக்குள் நுழைந்து உக்ரைன் தாக்குதல் நடத்த அஞ்சுகிறது. அபூர்வமாக எப்போதாவது ஒருமுறை இதுபோன்ற தாக்குதல்களில் அது ஈடுபட்டுள்ளது. ஆனால், தற்போது அதிரடியாக 300 கி. மீட்டர் தூரத்திற்கு ரஷ்யாவுக்குள் புகுந்து 3 பகுதிகளில் உக்ரைன் தாக்குதல் நடத்தி உள்ளது. சோவியத் யூனியன் கலைக்கப்பட்டபோது, அந்த கூட்டமைப்பில் இருந்த பல்வேறு நாடுகள் தனித்தனி சுதந்திர நாடுகளாக பிரிந்தன. அவ்வாறு தனி நாடாக உருவானதுதான் உக்ரைன்.

அந்த நேரத்தில் உக்ரைனிடம் பல்வேறு பொருளாதார வளங்கள், பலமிக்க அணு ஆயுதங்கள் இருந்தன. இதை தன் வசப்படுத்துவதற்காக, சோவியத் யூனியன் கலைக்கப்பட்ட சிறிது காலத்தில் உக்ரைனுடன் ரஷ்யா ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் போட்டது. அதன்படி, தன்னிடம் இருந்த பெரும்பாலான அணு ஆயுதங்களை ரஷ்யாவிடம் உக்ரைன் ஒப்படைத்தது. அப்போது, ‘இந்த ஆயுதங்கள் மூலம் எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் வராது’ என ரஷ்யா வாக்குறுதி அளித்தது. ஆனால், நிலைமை இப்போது மாறி விட்டது.

உக்ரைன்-ரஷ்யா போர் வெறும் இருநாட்டுக்கான போர் அல்ல. இதில், உலக அரசியல் அடங்கி உள்ளது. ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அருகே உள்ள கடல் பகுதியில் இருந்து ஜெர்மனியின் லப்மின் வரை பால்டிக் கடலுக்கு கீழே 1,200 கிமீ நீளத்துக்கு ‘நார்டு ஸ்ட்ரீம்-2’ என்ற எரிவாயு குழாய் அமைக்கப்பட்டுள்ளது. உக்ரைன் வழியாக செல்லும் இதன் மூலம்தான், ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யாவில் இருந்து எரிவாயுவை கொண்டு செல்லப்பட உள்ளது. ரஷ்யா குறைந்த விலையில் எரிவாயு வழங்கி வருவதால், ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்ய ஐரோப்பிய நாடுகள் விரும்புகின்றன.

இத்திட்டம் நிறைவேறினால், அமெரிக்காவை ஐரோப்பிய நாடுகள் திரும்பி கூட பார்க்காது. இதனால், ரஷ்யாவின் இத்திட்டத்தை முடக்க உக்ரைனை தூண்டி விட்டது அமெரிக்கா. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்ந்தால், அந்நாட்டுக்கு ஏதேனும் பிரச்னை என்றால், அதற்கு ஆதரவாக களத்தில் இறங்கி ரஷ்யாவின் ஸ்திரத்தன்மை குலைக்கலாம் என அமெரிக்கா எண்ணியது. இதற்கு ரஷ்யா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஆனால், அமெரிக்காவின் மறைமுக தூண்டுதலால், உலக நாடுகளை எச்சரிக்கும் செய்யும் வகையில் உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி ரஷ்யா அதிகாரப்பூர்வமாக போரை தொடர்ந்தது.

முதற்கட்ட போரில் உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களை கைப்பற்ற முடியாமல் அதிருப்தி அடைந்த ரஷ்யா, அங்குள்ள அப்பாவி மக்களை இனப்படுகொலை செய்து புதைத்தது. ஏராளமான பெண்களை பலாத்காரம் செய்தது. இதற்கான ஆதாரங்களும் சிக்கி உள்ளது. தற்போது, கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியம், துறைமுக நகரமான மரியுபோல், தெற்கு உக்ரைன் போன்ற பகுதிகளை பிடிப்பதற்காக மட்டுமே ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

கடந்த 2 மாதமாக நடந்து வரும் போரில், உக்ரைனில் உள்ள கெர்சன் பிராந்தியத்தை மட்டுமே ரஷ்யா முழுமையாக கைப்பற்றி உள்ளது. மேலும், மரியுபோலில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய இரும்பு தொழிற்சாலையை தவிர மற்ற இடங்களை வசப்படுத்தி உள்ளது. கிழக்கு உக்ரைனில் அதன் தாக்குதல் தீவிரமாகி வரும் நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வழங்கியுள்ள ராக்கெட்டுகள், டிரோன்களின் மூலமாக, ரஷ்யாவுக்குள் 300 கி.மீ தூரம் வரை ஊடுருவி சென்று உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தி இருக்கிறது. இது, அதிபர் புடினுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

சில தினங்களுக்கு முன் ஒரே நாளில் 3 மாகாணங்களில் டிரோன்கள் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும், குண்டுமழையும் பொழிந்துள்ளது. கிழக்கு உக்ரைன் எல்லையில் இருந்து 32 கி.மீ தூரத்தில் உள்ள பெல்கோராட், 321 கி.மீ தூரத்தில் உள்ள வோரோனேஜ், 112 கி.மீ தூரத்தில் உள்ள குர்ஸ்க் ஆகிய 3 நகரங்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதை இந்த 3 மாகாணங்களின் ஆளுநர்களும் உறுதி செய்துள்ளனர். ஆனால், பாதிப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ரஷ்யாவுக்குள் புகுந்து உக்ரைன் அதிரடி தாக்குதல் நடத்தி இருப்பதால், அணு ஆயுத போர் வெடிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.  

  • உக்ரைனில் ரூபிள்
    உலகம் முழுவதும் தற்போது அமெரிக்காவின் டாலர் ஆதிக்கமே அதிகமாக உள்ளது. இதை தடுக்கும் வகையில், தனது நாட்டின் ரூபிளின் மதிப்பை உயர்த்தும் நடவடிக்கையில் ரஷ்ய அதிபர் புடின் ஈடுபட்டுள்ளார். தன்னிடம் இருந்து வாங்கும் எரிவாயுவுக்கு ரூபிளில் பணம் செலுத்தும்படி ஐரோப்பிய நாடுகளுக்கு அவர் நிபந்தனை விதித்துள்ளார். இதை கேட்காத போலந்து, பல்கேரியா நாடுகளுக்கு எரிவாயு ஏற்றுமதியை நிறுத்தி உள்ளார். இந்நிலையில், உக்ரைனில் தான் கைப்பற்றியுள்ள நகரங்களில் ரூபிள் பயன்பாட்டை கொண்டு வர ரஷ்யா முயற்சித்து வருகிறது. தெற்கு கெர்சன் பிராந்தியத்தில் மே 1 முதல் ரூபிள் பயன்படுத்தப்பட உள்ளது.
  • போருக்கு இடையே ரூ.5 லட்சம் கோடிக்கு ஜெர்மனி வர்த்தகம்  
    உக்ரைன் மீது போரை கண்டித்து ரஷ்யா மீது ஜெர்மனி பல்வேறு தடைகள் விதித்துள்ளது. இருப்பினும் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்து வந்தது. இந்நிலையில், உக்ரைனில் போர் தொடங்கிய முதல் இரண்டு மாதங்களில் ரஷ்யாவின் எரி பொருளை அதிகம் வாங்கும் நாடாக ஜெர்மனி இருந்ததாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. பிப்ரவரி 24 முதல் ரூ.5 லட்சம் கோடிக்கு ரஷ்யாவிடம் ஜெர்மனி வர்த்தகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.  
  • இலக்கை அடைவோம் புடின் திட்டவட்டம்
    ரஷ்ய நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் அதிபர் புடின் பேசுகையில், ‘உக்ரைனில் பிப். 24 அன்று தொடங்கப்பட்ட சிறப்பு ராணுவ நடவடிக்கையின் அனைத்து பணிகளும் நிபந்தனையின்றி நிறைவேற்றப்படும் என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். ராணுவ நடவடிக்கையின் இலக்குகள் எட்டப்படும்’ என்றார்.

10 ஆண்டுகள் போர் நீடிக்கும்

  • உக்ரைன்-ரஷ்யா போர் 10 ஆண்டுகள் வரை நீடிக்கும் என்று இங்கிலாந்து வெளியுறவு துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.
  • ரஷ்யாவின் கீழ்சபை எம்பி.க்கள் 368 ேபருக்கு பிரிட்டன் தடை விதித்துள்ளது. இதற்கு பதிலடியாக, பிரிட்டனின் 287 எம்பி.க்களுக்கு ரஷ்யா நேற்று தடை விதித்தது.
  • ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், ரஷ்யா பயணத்தை முடித்து கொண்டு உக்ரைன் தலைநகர் கீவ் சென்றுள்ளார். அங்கு இனப்படுகொலை நடந்த புச்சா நகரை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், ‘சர்வதேச நீதிமன்றத்தில் நடக்கும் போர் குற்ற வழக்குக்கு ரஷ்யா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
  • அனைவரும் ஒருநாள் சாகப் போகிறோம்
    ரஷ்யா அரசு தொலைகாட்சியில் நடந்த ஒரு விவாதத்தில், ரஷ்ய அரசு ஊடகமான ஆர்டியின் தலைவரான மார்கரிட்டா சிமோன்ய பேசுகையில், ‘ரஷ்யாவின் போரில் மற்ற நாடுகள் தலையிடுவதை தடுக்கும் வகையில் உக்ரைனில் அணு ஆயுதப்போர் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நாம் அனைவரும் ஒருநாள் சாகப் போகிறோம்’ என்று கூறியிருப்பது பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *