நெருக்கடிக்கு தீர்வு காணப்படாவிட்டால் சங்க மாநாட்டை கூட்டி முடிவெடுக்கப்படும்!

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மகா சங்கத்தினர் ஒன்றிணைந்து சங்க மாநாட்டை பிரகடனப்படுத்துவோம் என, மூன்று பௌத்த உயர் பீடங்களின் மகாநாயக்கர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர், அஸ்கிரிய பீட மகா நாயக்கர் வரகாகொட தம்மதஸ்ஸி ஸ்ரீ பஞ்சானந்த ஞானரதன தேரர், அமரபுர மகா நிகாயாவின் தொடம்பஹல ஸ்ரீ சந்திரசிறி தேரர், ஸ்ரீலங்கா ராமஞ்ஞா மகா நிக்காயவின் மகுலேவே ஸ்ரீ விமல த்ரைநிகாய மகா நாயக்க தேரர் ஆகியோரின் கையொப்பத்துடன் குறித்த விசேட அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் ஆகியோருக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியை தீர்க்க, தாங்கள் கடந்த ஏப்ரல் 04ஆம் திகதி ஜனாதிபதிக்கு அனுப்பிய யோசனைகள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை என்பது பற்றி தாங்கள் வேதனை அடைவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் எதிர்நோக்கும் உக்கிரமான வாழ்க்கை சிக்கல்கள், இன்னல்களுக்கும், இரவு பகல் பாராது வரிசையில் நின்று மரணிக்கும் மக்கள் தொடர்பில் கவலையின்றி காலத்தை கடத்தி, பொறுப்பற்ற வகையில் செயற்படுவதன் மூலம், முழு நாட்டு மக்களும் எதிர்கொண்டுள்ள கஷ்டங்களுக்கும் நாட்டின் அரச தலைவர் உட்பட பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒவ்வொரு உறுப்பினரும் பொறுப்புக்கூற வேண்டும் என அதில் தெரிவிக்க்கப்பட்டுள்ளது.

மகாசங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி எம்மால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பில் கவனம் செலுத்தாமல், தொடர்ந்தும் மக்கள் அபிலாஷைகளுக்கு எதிராக செயற்படுகின்றமை தொடர்பில் எமது அதிருப்தியை தெரிவித்துக் கொள்கின்றோம். அத்துடன் பின்வரும் விடயங்கள் தொடர்பில் முழு அரசியல்வாதிகளினதும் கவனத்தை செலுத்த வேண்டுமென விரும்புகின்றோம்

தற்பொழுது எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வை வழங்குவதை விடுத்து புதிய அமைச்சரவையை அமைப்பதன் மூலம் இந்த பிரச்சினைகளை ஒருபோதும் தீர்க்க முடியாது என்பதை நாம் முழுமையாக நம்புகின்றோம்.

தற்போது பல்வேறு போராட்டங்கள் மற்றும் பேரணிகள் தொடர்பில் மக்கள் மேற்கொள்ளும் அமைதியான மற்றும் சட்டத்தை மதிக்கின்ற போராட்டங்களுக்கு செவிமடுத்து உடனடியாக மக்களுக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் இவ்வாறான போராட்டங்களை அடக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதில் இருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கின்றோம். அத்துடன் ஏப்ரல் 19ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையின் போது நபர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, இவ்வாறான துரதிஷ்டவசமான சம்பவம் மீண்டும் ஒருமுறை நாட்டில் இடம்பெறாதிருப்பதற்கு அரசாங்கம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென நாம் தெரிவிக்கின்றோம்.

நிறைவேற்று அதிகாரம் மற்றும் சட்டவாக்கம் ஆகியவற்றுக்கிடையே சமநிலையற்ற தன்மையை உருவாக்கி நாட்டில் அரசியல் ரீதியான பிளவுகளுக்கு காரணமான, 20ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை இல்லாதொழித்து, 19வது திருத்தத்தில் காணப்பட்ட சாதகமான காரணங்களை உள்ளடக்கி, புதிய அரசியலமைப்பு சீர்திருத்தங்களை கொண்டு வர அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் மிக விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகளுக்கு அண்மைக்காலமாக நாட்டை ஆட்சி செய்த அனைத்து அரசாங்கங்களும் பொறுப்பேற்க வேண்டும். அத்துடன் இந்த முக்கியமான தருணத்தில் அமைச்சர்கள், எம்பிக்கள், அதிகாரிகளுக்கு காணப்படுகின்ற சலுகைகளை பொதுமக்களின் நலனுக்காக தியாகம் செய்து நாட்டின் சொத்துக்களை விற்காது, முன்னுரிமையான அபிவிருத்தி திட்டங்களுக்கு அமைய நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கிறோம்.
எனவே இவ்விடயங்கள் குறித்து கவனம் செலுத்தி நாட்டை அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வருவதற்கு கட்சி பேதமின்றி பாதிக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களையும் விரைவில் அழைத்து, கலந்துரையாட நாம் எண்ணியுள்ளோம்.

மேற்படி விடயங்களில் கவனம் செலுத்தாமல், நாட்டில் தொடர்ந்தும் மக்களின் பிரச்சினைகளுக்கு பொறுப்பற்ற வகையில் செயற்பட்டு, அரசியல் ஸ்திரத்தன்மையை உருவாக்கி இந்த பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை வழங்க வேண்டும் என்பதுடன், அவ்வாறு செய்யாவிட்டால் மகாசங்கத்தினர் ஒன்றிணைந்து சங்க மாநாட்டை பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்துக் கொள்கிறேன்.

நிலைபேறான தீர்மானம் மூலம் தற்பொழுது ஏற்பட்டுள்ள  பிரச்சினைகளை அறிந்து, பாதுகாப்பான நாட்டை ஏற்படுத்த உங்கள் அனைவருக்கும் ஆசியும் சக்தியும் தைரியமும் கிடைக்க வேண்டுமென பிரார்த்திக்கிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *