இலங்கை போன்ற பொருளாதார நெருக்கடி இந்தியாவில் ஏற்படும் அபாயம்!

பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்பட்டு உள்ள ஜனரஞ்சகமான நலத்திட்டங்களால், இலங்கையில் ஏற்பட்டுள்ளதை போன்ற பொருளாதார நெருக்கடி உருவாகும் என பிரதமர் நரேந்திர மோடி உடனான கூட்டத்தில் பல்வேறு துறை செயலர்கள் கருத்து தெரிவித்தனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, எரிபொருள், சமையல் எரிவாயு தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு போன்றவற்றால், அங்கு கொடிய வறுமையில் மக்கள் தவித்து வருகின்றனர்.

அதனால் அதிபருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒன்றிய அரசின் பல்வேறு துறை செயலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமரின் முதன்மை செயலர் பி.கே.மிஸ்ரா, அமைச்சரவை செயலர் ராஜிவ் கவுபா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பெரிய வளர்ச்சித் திட்டங்களை முன் எடுக்காததற்கு வறுமையை காரணமாக கூறும் பழங்கதையை கைவிட்டு புதிய கண்ணோட்டத்தைக் கடைப்பிடிக்கும்படி அதிகாரிகளிடம் பிரதமர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த மாநிலம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் அறிவிக்கப்பட்டுள்ள ஜனரஞ்சகமான சில திட்டங்கள் பொருளாதார ரீதியாக நீடிக்க முடியாதவை. இந்த திட்டங்களால் இலங்கையில் ஏற்பட்டுள்ளதை போன்ற பொருளாதார நெருக்கடி நம் நாட்டிலும் ஏற்படக் கூடிய அபாயம் உள்ளது என செயலர்கள் பிரதமரிடம் வெளிப்படையாக தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *