40 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.நா.வில் அவசரக் கூட்டம் 193 நாடுகளுக்கு அழைப்பு!

உக்ரைன் மீதான ரஷ்யப் படைகளின் தாக்குதல் 5-ஆம் நாளை எட்டியுள்ள நிலையில், இது குறித்து விவாதிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு அமெரிக்காவில் இன்று அவசரமாக கூடுகிறது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளை கண்டித்து சில நாட்களுக்கு முன்னர் ஐ.நா. பாதுகாப்புக் குழு கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி வீழ்த்தியது.

இந்த நிலையில், ஐ.நா.பொது சபையின் அவசர சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவது குறித்து முடிவு செய்ய பாதுகாப்பு கவுன்சில் மீண்டும் கூடியது.

மொத்தம் 15 உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் 11 நாடுகள் ஐ.நா. பொது சபையை கூட்ட ஆதரவு தெரிவித்தன. ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தது.

இந்தியா, சீனா ஐக்கிய அரசு அமீரகம் ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன.

இதையடுத்து ஐக்கிய நாடுகள் சபையின் அவசர பொதுக்குழு கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு 193 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு ஐ.நா. பொது செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.

நியூயார்க் உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்க உள்ள இந்த கூட்டத்திற்கு ஐ.நா. பொதுக்குழுவில் தலைவர் அப்துல்லா ஷாஹீத் தலைமை ஏற்கிறார்.

சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.நா. பொது சபையின் அவசரக் கூட்டத்திற்கு பாதுகாப்பு கவுன்சில் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

80-க்கும் மேற்பட்ட நாடுகள் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு எதிரான நிலைப்பாட்டினை கொண்டு இருப்பதால், இந்தக் கூட்டத்தில் ரஷியாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட அதிக வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *