உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது உணரப்பட்ட நிலநடுக்கம்!

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது நிலநடுக்கம் உணரப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. அதில் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-அவுஸ்திரேலியாவும் மற்றும் இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

குயின்ஸ் பார்க் மைதானம்
இந்த நிலையில், தொடரிலிருந்து வெளியேறிய அணிகளுக்கு இடையே தரவரிசையை நிர்ணயிக்க போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் டிரின்டாட் பகுதியில் உள்ள குயின்ஸ் பார்க் மைதானத்தில் ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின.

குலுங்கிய கேமரா

இப்போட்டியில் ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது ஆட்டத்தின் 11-வது ஓவரில் வீரர்கள் விளையாடி கொண்டிருந்த போது திடீரென கேமிராக்கள் ஆடியது. இதனைப் பார்த்த ரசிகர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போதுதான், கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபட்டு இருந்த ஆண்டிரூ லேனார்ட் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பதறிய வர்ணனையாளர்கள்
அப்போது பேசிய அவர், ‘நிலநடுக்கத்துக்கு நடுவில் நாம் சிக்கியுள்ளோம் என்பதை உணர்கிறேன். முதல் முறையாக இப்போதுதான் நான் நிலநடுக்கத்தை உணர்கிறேன். பெரிய ரயில் பின்னால் ஓடினால் எப்படி நிலம் அதிருமோ, அது போல் உள்ளது’ என ஆண்டிரூ லேனார்ட் கூறினார்.
தடையின்றி நடந்த போட்டி
இந்த நிலநடுக்கமானது சுமார் 15 முதல் 20 விநாடிகள் வரை நீடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ரிக்டர் அளவுகோளில் 5.2 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிலநடுக்கமானது மைதானத்தில் ஏற்படவில்லை. அதனால் போட்டி எந்தவித தடையுமின்றி நடைபெற்றது. இதில் ஜிம்பாப்வே அணி 166 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *