ஒரே நாளில் 10 கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர்!

நியூசிலாந்தில் ஒரே நாளில் 10 கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர் சிக்கிய நிலையில், அவர் தெரிவித்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்தில் ஒருவர் ஒரே நாளில் 10 கொரோனா தடுப்பூசிகள் போட்டுக்கொண்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அடையாளம் தெரிவிக்கப்படாத அந்த நபர் ஒரே நாளில் பல தடுப்பூசி மையங்களுக்குச் சென்று 10 தடுப்பூசிகளைப் பெற்றதாக நம்பப்படுகிறது.

விசாரணையில், தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுக்கும் நபர்களால் கூலிக்காக இவர் அவர்களின் பெயரில் தடுப்பூசி போட்டுக்கொண்டது அம்பலமானது.

நியூசிலாந்தில், தடுப்பூசியைப் பெறும்போது மக்கள் தங்கள் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியதில்லை. தற்போது இந்த தடுப்பூசி முறைகேடு சம்பவத்தை சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளதுடன், நாட்டின் எந்த பகுதியில் முறைகேடு நடந்தது என்பதை வெளியிட மறுத்துள்ளனர்.

மேலும், இந்த விடயத்தை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம். இந்த நிலைமை குறித்து பொருத்தமான அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம் என சுகாதார அமைச்சக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

இதுபோன்று அதிக தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர்கள் எவரேனும் சமூகத்தில் கண்டறியப்பட்டால், உடனடியாக அவர்களை மருத்துவர்களின் ஆலோசனை பெற வலியுறுத்துங்கள் எனவும் சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கும் எண்ணிக்கையில் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும், அவ்வாறான நடவடிக்கைகள் உயிருக்கு ஆபத்தாக முடிய வாய்ப்புள்ளது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *