தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக சுமந்திரன்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குப் பின்னர் அந்தத் தலைமைப் பதவிக்குத் தான் தகுதியானவர் என்று கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

கொழும்பு தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையிலேயே சுமந்திரன் எம்.பி. இவ்வாறு குறிப்பிட்டார்.

சம்பந்தனின் தலைமைப் பதவியை அவருக்குப் பிறகு பெற்றுக்கொள்ள சுமந்திரன் தகுதியானவரா என்று பேட்டியாளர் கேட்டபோது, “தகுதியானவரா என்று கேட்டால் ஆம் என்பேன்” என்று அவர் பதிலளித்திருக்கின்றார்.

அவரின் பேட்டியின் சில பகுதிகளை கேள்வி – பதில் வடிவில் இங்கே தருகின்றோம்.

கேள்வி:- தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கும், மக்களின் நம்பிக்கையை வெல்வதற்கும் சுமந்திரன், சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பினர் உயர்மட்டத்துக்குச் செல்வதற்கான நோக்கம் என்ன?

பதில்:- அதற்குப் பிரதான காரணம் நாம் முன்னர் நல்லாட்சி அரசுக்கு ஆதரவளித்தோம். ஆனால், எந்தப் பயனும் இல்லை. அதன் காரணமாக மக்கள் அங்கும் இங்கும் அலை மோதினர்.

கேள்வி:- அப்படி என்றால் நல்லாட்சி அரசில் சிதைவு ஏற்பட்டதா?

பதில்:- அந்தச் சிதைவின் தாக்கம் எம்மையும் தாக்கியது.

கேள்வி:- அதற்குப் பொறுப்புக்கூற வேண்டியது சுமந்திரன் அல்லவா?

பதில்:- சுமந்திரன் அதற்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.

கேள்வி:- சுமந்திரன் பிரச்சினைகளை விற்றுப் பிழைக்கின்றாரா?

பதில்:- அவ்வாறு கூற முடியாது. நாம் அப்படி செயற்படுவதும் இல்லை.

கேள்வி:- சுமந்திரன் தனிப்பட்ட விளையாட்டொன்றை விளையாடுகின்றாரா? அதாவது தான் ஒரு தேசிய அரசியல்வாதி என்ற வகையிலான தனிப்பட்ட விளையாட்டொன்றை விளையாடுகின்றாரா?

பதில்:- அதனை நான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

கேள்வி:- சம்பந்தனின் தலைமைப் பதவியை அவருக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள சுமந்திரன் தகுதியுடையவரா?

பதில்:- தகுதியானவரா என்று கேட்டால் ஆம் என்பேன்.

கேள்வி:- எதற்காக இந்தியாவின் வெளிவிவகார செயாலாளர் இலங்கை வந்தார்?

பதில்:- அவர் புதிதாக நியமிக்கப்பட்டவர். ஆகவே, அயல் நாடுகளுக்கு விஜயம் செய்வது சாதாரணமான விடயமாகும்.

கேள்வி:- அப்படியாயின் கதவையடைத்துக்கொண்டு நீங்கள் பேசியது என்ன?

பதில்:- நாம் கதவை அடைத்துக்கொண்டு பேசவில்லை.

கேள்வி:- அப்படியானால் பேசிய விடயங்களை கூறினீர்களா?

பதில்:- ஆம், பேச்சு முடிந்தவுடன் நாம் பேசிய விடயங்களை வெளியில் வந்து தெரிவித்தோம்.

கேள்வி:- கூட்டமைப்பின் தேர்தல் வாக்குளை வேறொரு இடத்தில் கொண்டு சென்று வைப்பதற்கான நிலை தென்படுகின்றதா?

பதில்:- இல்லை. அவ்வாறானதொரு நிலை இல்லை.

கேள்வி:- தேசியத் தலைவர் ஒருவர் இன்று இல்லையா?

பதில்:- ஆம் இல்லை.

கேள்வி:- எதிர்க்கட்சி என்ற ஒன்று இன்று இல்லையா?

பதில்:- ஆம் இல்லை.

கேள்வி:- உங்களுக்குத் தென்படவில்லையா?

பதில்:- இப்போது எமக்குத் தென்படவில்லை. ஆகவே, நாம் அதனை உருவாக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *