ஜெர்மனியில் பீட்சா டிலிவரி செய்யும் ஆப்கான் முன்னாள் அமைச்சர்!

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள், வெளியேறுவதை அடுத்து
அங்கு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர்.

இதையடுத்து அங்குள்ள மக்கள்
வெளிநாடுகளுக்குத் தப்பி செல்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக காபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடியுள்ளனர். அங்கு கூட்டம் நிரம்பி வழிகிறது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமைச்சர் சையது அகமது ஷா சதாத்,
ஜெர்மனியில் பீட்ஸா டெலிவரி செய்பவராக பணியாற்றி வரும் புகைப்படங்கள், சமூக
வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஆரஞ்ச் நிற உடை அணிந்து முதுகில் உணவு
பையுடன் அவர் சைக்கிளில் செல்லும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அப்கானிஸ்தானின் தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த இவர், கடந்த ஆண்டு
பதவியில் இருந்து விலகினார். பின்னர், ஜெர்மனி சென்ற அவர், லீப்ஜிக் (Leipzig) நகரில் பீட்ஸா டெலிவரி செய்து வருகிறார். அவருடைய பீட்ஸா டெலிவரி செய்யும் புகைப்படங்களை, அல் ஜசீரா தொலைக்காட்சியும் ஜெர்மனியின் சில ஊடகங்களும் வெளியிட்டுள்ளன.

ஜெர்மனியை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர், இதுபற்றி ட்விட்டரில், ‘இரண்டு வருடத் துக்கு முன் ஆப்கானிஸ்தான் தகவல் தொடர்பு அமைச்சராக இருந்தவரை சமீபத்தில் சந்தித்தேன். லீப்ஜிக்கில் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன். நான், எஸெனில் உணவு டெலிவரி செய்துவிட்டு லீபெரண்டோ (Lieferando)வுக்கு விரைகிறேன் என்று தெரிவித்தார் எனக் கூறியுள்ளார். Lieferando உணவு விநியோக சேவையை செய்யும் நிறுவனம்.

தான் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் பணியாற்றுவது உண்மைதான் என்று ஸ்கை செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ள சையது அகமது ஷா சதத், ஆப்கானிஸ்தானில் அஷ்ரப் கனி அமைச்சரவையில் 2018 ஆம் ஆண்டு கேபினட் அமைச்சராக பதவி வகித்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு பதவியில் இருந்து விலகிய அவர், ஜெர்மன் சென்றார். இப்போது உணவு விநியோகிக்கும் வேலை செய்து வருகிறார்.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் எலக்ட்ரானிக் என்ஜினீயரிங் முடித்துள்ள சதாத்திடம், தற் போது ஆப்கான் நிலைமை குறித்து கேட்டபோது, ’இவ்வளவு விரைவாக அஷ்ரப் கனியின் ஆட்சி வீழும் என எதிர்பார்க்கவில்லை’ என்று சோகத்துடன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *