நாட்டை முழுமையாக மூடமாட்டேன் என ஜனாதிபதி அறிவிப்பு!

கொரோனா வைரஸ் ​தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், நாட்டை முழுமையாக முடக்காது, பயணக்கட்டுப்பாடுகளை கடுமையாக்குமாறு ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பில் உரிய தரப்பினருக்கு பணித்துள்ளார் என்றும் அறியமுடிகின்றது.

நாடளாவிய ரீதியில் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரையிலான ஊரடங்கு சட்டம், 16ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஊரடங்கு உத்தரவை, வார இறுதி நாள்களில் முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என நேற்றைய தகவல்கள் தெரிவித்திருந்தன.

அத்துடன் அந்த ஊரடங்கு உத்தரவை ஒரு மாதத்துக்கு முழுமையாக பிறப்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன என நேற்றைய தகவல்கள் தெரிவித்திருந்த நிலையிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு பணித்துள்ளார் என அறியமுடிகின்றது.

இந்நிலையில் தனது தலைமையில் நேற்றிரவு நடைபெற்ற வாராந்த அமைச்சரவை சந்திப்பின் போதே, நாட்டை முழுமையாக மூடமாட்டேன் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

நாட்டை முழுமையாக மூடினால், பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாத நிலைமையொன்று ஏற்படும். அன்றாடம் வாழ்க்கை நடத்தும் ஒரு பிரிவினர் கடுமையான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி ஏற்றலை துரிதப்படுத்தவேண்டும். அதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் உரிய தரப்பினருக்கு ஜனாதிபதி பணித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *