30 ஆயிரம் ரூபா பணத்திற்காக பெண்ணின் தயார் தரகர் ஊடாக வீட்டு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் உறவினர்களின் வீடுகளுக்கு 11 பெண் பிள்ளைகளை இடைத் தரகர் அழைத்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

டயகம பகுதியைச் சேர்ந்த இஷானிலி என்ற 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொரல்லை பொலிசார், கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிசார், கொழும்பு வடக்கு சிறுவர், மகளிர் விவகார பிரிவு ஆகியன மேற்கொண்ட விசாரணைகளில் இந்த விடயங்கள் தெரியவந்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப் பீரிஸ் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் மனைவி, மனைவியின் தந்தை, இடைத்தரகர் ஆகிய மூவரும் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

அத்துடன் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் மற்றுமொரு பெண் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை குறித்து அவருடைய மைத்துனர் கைதுசெய்யப்பட்டார்.

இந்த நிலையில் குறித்த நால்வரும் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

மரணம் தொடர்பான சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின்படி, குறித்த சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அத்துடன் இந்தச் சம்பவம் சந்தேக நபர்களில் ஒருவரான தரகரிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட 30 ஆயிரம் பணத்திற்குப் பதிலாக, பெண்ணின் தயார் குறித்த தரகர் ஊடாக வீட்டு வேலைக்கு அனுப்பியுள்ளதாக மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேபோல, குறித்த இடைத் தரகர், 11 பெண் பிள்ளைகளை ரிஷாட் பதியூதீனின் உறவினர்கள் வீடுகளுக்கு அழைத்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் உயிரிழந்த சிறுமி 16 வயதை அடைந்து நான்கு நாட்களான 2020 நவம்பர் மாதம் 18ஆம் திகதி இவ்வாறு பணிப் பெண்ணாக அழைத்துவரப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த சிறுமி வீட்டின் சமையல் அறைக்கு வெளியே, ஆறுக்கு நான்கு அடி அறையொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த அறைக்கு மின்சார இணைப்பு இருந்த போதிலும், தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்படி குறித்த சிறுமி பாதுகாப்பற்ற முறையில் வசித்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் சட்டம் இயற்றப்படும் சபையின் உறுப்பினர் ஒருவரின் வீட்டில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றது கவலையளிக்கும் விடயம் எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில். வைத்தியசாலையில் உள்ள குறித்த வீட்டின் தலைவர் ரிஷாட் பதியூதீனிடமும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப் பீரிஸ் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து சந்தேக நபர்கள் நால்வரையும் அடுத்த 48 மணி நேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதேவேளை, வரும் 26ஆம் திகதி சந்தேக நபர்களை மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதனையடுத்து ரிஷாட் பதியூதீனின் மனைவி கிருலப்பனை பொலிஸ் நிலையத்திலும், ஏனைய மூவரும் பொரல்லை பொலிஸ் நிலையத்திலும் தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *