டோக்கியோ ஒலிம்பிக்கின் மறுபுறம்!

இரண்டு வாரங்களுக்கு ஒட்டுமொத்த உலகின் கவனமும் டோக்கியோ ஒலிம்பிக் மீதுதான் இருக்கப் போகிறது. இதில் வீரர்கள் செய்யப்போகும் சாதனைகளைப் பற்றித்தான் அனைவரும் பேசப் போகிறார்கள்.

இந்நிலையில் இந்த டோக்கியோ ஒலிம்பிக்கைப் பற்றி அதிகம் தெரியாத சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்.

பசுமை ஒலிம்பிக்

இப்போது உலகின் முக்கியப் பிரச்சினைகளில் ஒன்றாக எலக்டிரானிக் கழிவுகள் உள்ளன.

லேப்டாப்கள், செல்போன்கள், கம்ப்யூட்டர்கள், டிவிகள் என்று ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட எலக்டிரானிக் பொருட்களை நாம் எந்தக் கவலையும் இல்லாமல் தூக்கி எறிகிறோம்.

அவை நமது சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த சூழலில், ஜப்பானிய மக்கள் ஏற்கெனவே பயன்படுத்திய எலக்டிரானிக் பொருட்களில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட உலோகக் குப்பையில் இருந்து, இந்த ஒலிம்பிக் போட்டிக்கான பதக்கங்களை போட்டி அமைப்பாளர்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் உலோகக் குப்பைகளில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கப் பதக்கங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

மனிதர்களால் தூக்கி வீசப்பட்ட குப்பைகளில் இருந்தே, அவர்கள் பெருமை கொள்ளும் வகையில் பதக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மரத்தால் ஒரு ஸ்டேடியம்

இந்த ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவும், நிறைவு விழாவும் நடக்கவுள்ள நேஷனல் ஸ்டேடியத்துக்கு மற்றொரு சிறப்பும் உள்ளது.

இந்த ஸ்டேடியம் பெரும்பாலும் மரத்தைக் கொண்டே கட்டப்பட்டுள்ளது என்பதுதான் அந்த சிறப்பு. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இப்படி மரத்தால் ஸ்டேடியத்தை உருவாக்கியுள்ளனர்.

மரத்தை வெட்டினால் சுற்றுச்சூழல் மேலும் பாதிக்குமே என்கிறீர்களா?. அங்கேதான் நிற்கிறார்கள் ஜப்பானியர்கள். இந்த ஒலிம்பிக் போட்டி முடிந்ததும் ஸ்டேடியத்தில் உள்ள மரங்களைப் பிரித்தெடுத்து பள்ளிகளுக்கான பெஞ்ச்களை செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.

இதன்மூலம் பெஞ்ச்களுக்காக மரங்களை வெட்டுவது தடுக்கப்படுகிறது. வீரர்கள் தங்கும் அறைகளில் அவர்களுக்கான கட்டில்கள்கூட கார்டுபோர்டுகளால் தயாரிக்கப்பட்டுள்ளன.

சர்வம் இயந்திரமயம்

ஒருசில விஷயங்களில் பசுமையை காத்தாலும், தேவையான விஷயங்களுக்கு நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தவும் இந்த ஒலிம்பிக்கில் ஜப்பானியர்கள் தவறவில்லை.

ஓட்டுநர் இல்லாத கார்கள், வரவேற்பறையில் ரோபோட்கள் என்று திரும்பிய பக்கமெல்லாம் இயந்திரமயமாக்கி இருக்கிறார்கள்.

எகிறிய செலவுக் கணக்கு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை நடத்த ஆரம்பத்தில் 6.8 பில்லியன் டாலர் செலவாகும் என்று கணக்கிடப்பட்டது.

ஆனால் கோரொனா வைரஸ் காரணமாக கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டி இருப்பதாலும், போட்டியை ஓராண்டு தள்ளிவைக்க வேண்டி வந்ததாலும் தற்போது அந்த செலவுக் கணக்கு 14.8 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

இளமையும் முதுமையும்

இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதிலேயே மிக இளம் வீராங்கனையாக சிரியாவின் ஹெண்ட் சாசா உள்ளார். 12 வயதே ஆன இவர் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆட தகுதி பெற்றுள்ளார்.

அதே நேரத்தில், இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் அதிக வயதான நட்சத்திரமாக ஆஸ்திரேலியாவின் மேரி ஹன்னா உள்ளார்.

66 வயதான இவர் குதிரையேற்ற போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *