முஸ்லிம் சமய திணைக்கள பணிப்பாளர் அதிகாரத்தை மீறி செயற்படுகின்றார்!

குர்பான் உள்ளிட்ட விவகாரம் தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் தனது அதிகாரத்தையும் தாண்டி எல்லை மீறி செயற்படுகின்றார் என கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன் உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தினார்.

குர்பான் வழங்குதல் என்பது மார்க்கச் செயற்பாடாகும். இலங்கையில் காலாகாலமாக பள்ளிவாசலில் குர்பான் கொடுக்கும் வழமை இருக்கின்றது. இந்நிலையில் அதனை தடுக்கும் விதமாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பீ.எம்.அஷ்ரப் அறிக்கையொன்றை வெளியிட்டிருப்பதானது பெரும் ஆபத்தான கட்டுப்பாடாகும் என அவர் மேவும் சுட்டிக்காட்டினார். இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மேலும் கூறுகையில்,

கொழும்பு போன்ற நகரச் சூழலில் குர்பான் கொடுப்பதற்கு வீடுகளில் இடமில்லை என்பதால் நீண்ட காலமாக பள்ளிவாசல் காணிகள் மற்றும் வளாகத்திலேயே குர்பான் கொடுக்கும் நடைமுறை இருந்து வந்துள்ளது. இந் நடைமுறை பல கிராமங்களிலும் இருக்கின்றன. கூட்டுக் குர்பான் நடைமுறை செய்யப்படும்போது முஸ்லிம்களின் மத்திய நிலையமாக பள்ளிவாசல்களையே தெரிவு செய்து அங்கு குர்பான் கொடுக்கும் வழமையையே இலங்கை முஸ்லிம்கள் கொண்டுள்ளனர். இந்நிலையில், இதனை தடுக்கும் விதமாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் வெளியிட்டிருக்கும் அறிக்கையானது மிகவும் பாரதூரமானதாகும்.

அவர் எந்த அடிப்படையில் இந்த அறிக்கையை அவர் வெளியிட்டார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பிரதமரின் கீழுள்ள அமைச்சுக்கு கீழ் வருகின்றது. இந்நிலையில், யாரின் ஆலோசனைக்கு அமைய இந்த அறிக்கை வெளியிடப்பட்டது என்பதை பணிப்பாளர் கூற வேண்டும்.

அத்தோடு, பணிப்பாளருக்கு இவ்வாறான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான அதிகாரம் கிடையாது. அது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணியும் இல்லை. எனவே, பணிப்பாளர் தனது அதிகாரத்தையும் தாண்டி முஸ்லிம் விவகாரங்களில் எல்லை மீறி செயற்படுகின்றார். ஆளும் தரப்பில் முஸ்லிம் பிரதிநிதிகள் இருக்கின்றனர். அமைச்சரவையில் நீதியமைச்சர் அலிசப்ரியும் இருக்கின்றார். இந்த வியடம் குறித்து நீதியமைச்சர் கவனம் செலுத்தி உடனடியாக பணிப்பாளரின் குறித்த அறிக்கையை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *