ரணில், அத்துரலிய தேரரின் பதவிகளைக் பறிக்கக் திட்டம்!

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எங்கள் மக்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் ஆகியோரின் பதவிகளைப் பறிக்கும்படி உச்சநீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வினிவித முன்னணி என்ற கட்சியின் செயலாளரான சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்கு இன்று இந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவைத் தொடர்ந்துள்ளார்.
இலங்கையில் கட்சிகளால் தேசியப்பட்டியல் உறுப்பினர்களை பெயரிடும் செயற்பாடானது, கடந்த 2020ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 07ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் அந்தக் காலகட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் எங்கள் மக்கள் கட்சி ஆகியன தத்தமது தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் பெயரை ஆணைக்குழுவுக்கு அனுப்பத்தவறியதாக அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ள சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்கு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நிர்ணயிக்கப்பட்ட காலகட்டத்திற்குள் தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விபரங்களை கையளிக்க இந்த இரண்டு கட்சிகளும் தவறியமையின் பின்னர் பிறிதொரு காலத்தில் பெயர்களை அறிவித்ததினால் அரசியலமைப்பு மீறப்பட்டிருப்பதாக சட்டத்தரணி கொடிதுவக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நடவடிக்கையின் ஊடாக தனது மற்றும் நாட்டு மக்களின் அடிப்படை மனித உரிமை மீறப்பட்டிருப்பதாகவும், அதனால் தேசியப்பட்டியல் உறுப்பினர்களான காலதமதமாக பெயரிடப்பட்ட ரணில் விக்ரமசிங்க மற்றும் அத்துரலியே ரத்தன தேரர் ஆகியோரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்குமாறு உத்தரவிடும்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா உள்ளிட்ட பிரதானிகள், அந்த ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எங்கள் மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரத்தன தேரர், சட்டமா அதிபர் எனப் பலரும் மனுவில் பிரதிவாதிகளாகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.