திலீப் குமார் எனும் அமரத்துவ கலைஞன்!

எந்தவொரு துறையானாலும் இவருக்கு முன், இவருக்குப் பின் என்று குறிப்பிடும் அளவுக்குச் சாதனை புரிவோருக்கு என்றும் மறைவில்லை. தனது இருப்பினால், 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தி சினிமாவை உயிர்ப்புடன் இருக்கச் செய்த திலீப்குமாரும் அப்படியொருவர் தான்.

இயக்குனரும் கதாசிரியரும் என்ன சொல்கிறார்களோ அதைச் செய்வதோடு, ஒரு கதாபாத்திரத்தின் இயல்பும் முற்பகுதி வாழ்க்கையும் எப்படியிருந்திருக்கும் என்று யோசிக்கக் கூடியவர் திலீப் குமார். அதனாலேயே, இந்திய சினிமாவில் ‘மெதேட் ஆக்டிங்’ முறையைக் கையாண்ட முன்னோடிகளில் ஒருவராகக் கொண்டாடப்படுகிறார்.

பெயர் வந்தடைந்த காலம்!

1950-களில் ராஜ் கபூர், திலீப் குமார், தேவ் ஆனந்த் மூவரும் இந்தி சினிமாவின் முடிசூடா மன்னர்களாகத் திகழ்ந்தவர்கள்.

ராஜ் கபூரும் தேவ் ஆனந்தும் தங்களுக்கான பாத்திர அமைப்பையும் கதையையும் தாங்களே வார்த்துக் கொண்டனர். இருவருக்கும் நடுவே, புகழ்பெற்ற கதாசிரியர்கள், இயக்குனர்களோடு கைகோர்த்து தனக்கான ராஜபாட்டையை வடிவமைத்தவர் திலீப் குமார்.

1922 டிசம்பர் 11ஆம் தேதியன்று, தற்போது பாகிஸ்தானில் இருக்கும் பெஷாவர் அருகிலுள்ள கவானி பஜாரில் குலாம் சர்வார் கான் – ஆயிஷா பேகம் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் 11 பேர். முகமது யூசுப் கான் என்பது இவரது இயற்பெயர்.

நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் மும்பைக்கு வந்தவருக்கு, 1944இல் வெளியான ‘ஜ்வார் பட்டா’ முதல் படமாக அமைந்தது. அந்த படத்தில் நடித்த நடிகை தேவிகா ராணிதான், இவருக்கு ‘திலீப் குமார்’ எனும் பெயரைச் சூட்டினார். அந்த காலத்தில், இது போன்று சினிமாவுக்காக வேறு பெயர்களை வைத்துக்கொள்ளும் வழக்கம் இருந்தது.

நடிக்க வந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகே, தனக்கு புகழ் தேடித் தரும் வெற்றியை எதிர்கொண்டார் திலீப் குமார். ஜுக்னு, மேளாவுக்கு அடுத்தபடியாக 1949இல் வெளியான ‘அந்தாஸ்’ திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்று, மக்கள் மத்தியில் அவரைக் கொண்டாட வைத்தது.

இந்த படத்தில் ராஜ் கபூர், நர்கீஸ் அவருடன் நடித்திருந்தனர். மூவருக்கும் இடையிலான முக்கோணக் காதல் அப்படத்தை ரசிகர்களின் மனதில் நிலைக்கச் செய்தது.

நடிகர்களின் நடிகர்!

தென்னிந்திய சினிமாவில் எப்படி சிவாஜி கணேசன் கொண்டாடப்படுகிறாரோ, அதே போன்று இந்தி சினிமாவில் பல கலைஞர்களின் முன்மாதிரியாகத் திகழ்பவர் திலீப் குமார்.

பிருத்விராஜ் கபூர், அசோக் குமார் உள்ளிட்ட முந்தைய தலைமுறை கலைஞர்களிடம் இருந்து பெரிதும் வேறுபட்டிருந்தது திலீப்பின் நடிப்பு. இதனாலேயே, தனக்குப் பின் வந்த ராஜேந்திர குமார், தர்மேந்திரா, ஷம்மி கபூர், அதன் தொடர்ச்சியாக ராஜேஷ் கன்னா, அமிதாப் பச்சன், ரந்தீர் கபூர் என்று பலருக்கும் ஆதர்சம் ஆனார்.

உலகம் அறியாத கிராமத்தான், ஆடையில் சுருக்கத்தை அனுமதிக்காத நகரவாசி, வஞ்சகத்தைச் சுமக்கும் வழக்கறிஞர், புரட்சியைக் கையிலெடுக்கும் இளைஞன் என்று ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பாத்திரங்களில் நடித்தார்.

’கோஹினூர்’ எனும் படத்தின் பாடல் காட்சியில் சிதார் வாசிப்பது போல வரும் என்பதற்காக, ஆறு மாதங்கள் சிதார் கலைஞர் உஸ்தாத் ஹலீம் ஜாபர் கான் என்பவரிடம் பயிற்சி பெற்றார்.

அதேபோல, ‘தில் தியா தர்த் லியா’ என்ற படத்தில் மூச்சுத்திணறலுடன் வில்லன் பிரானிடம் இருந்து துப்பாக்கியைப் பறிக்கும் காட்சியில் நடிப்பதற்கு முன்னதாக, ஸ்டூடியோவைச் சுற்றி நான்கு முறை அவர் ஓடியதாகச் சொல்லப்படுகிறது.

இதெல்லாமே சிறு உதாரணங்கள்தான். தான் ஏற்கும் பாத்திரத்தை மனதில் உணர்வதற்காகச் செய்துகொண்டவை.

சில ஆண்டுகளுக்கு முன் பிபிசிக்கு அளித்த பேட்டியில், ஒரு இயக்குனர் 30 வயது இளைஞனாக நடிக்க வேண்டுமென்றால் அப்பாத்திரம் 29 வயது வரை எப்படி வாழ்ந்தது என்பதை ஸ்கிரிப்டில் இருந்து கண்டறிய முயன்றதாகச் சொல்லியிருக்கிறார் திலீப் குமார்.

அதாவது, ஒரு கதாபாத்திரத்தை திலீப் அடையாளம் காணத் தொடங்கிவிட்டால் அதன் செயல்பாடுகளை எல்லாம் அவரே முடிவு செய்யட்டும் என்று இயக்குனர் விட்டுவிடுவார்களாம்.

மீண்டும் திலீப்!

நம்மூர் மலைக்கள்ளன், ஆலயமணி, எங்கவீட்டுப்பிள்ளை உள்ளிட்ட சில கமர்ஷியல் ஹிட்களின் இந்தி பதிப்புகளான ஆசாத், ஆத்மி, ராம் அவுர் ஷ்யாம் படங்களில் நடித்தவர் திலீப் குமார். ‘பாகப்பிரிவினை’ பார்த்துவிட்டு, சிவாஜி கணேசனை பிரதியெடுக்க முடியாது என்று அவ்வாய்ப்பை ஒதுக்கியவர். ‘முகல்–இ-ஆசாம்’ படத்தில் சலீம் ஆக வந்து அனார்கலியை காதலித்தவர்.

எட்டு முறை சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை வென்றவர். இவருக்குப் பின், ஷாரூக் கான் மட்டுமே அச்சாதனையைப் புரிந்திருக்கிறார்.

காமெடி, ரொமான்ஸில் வெளுத்து வாங்கினாலும், ‘ட்ராஜடி கிங்’ என்ற பட்டத்தையும் இவர் சுமந்திருக்கிறார். அந்த அளவுக்கு, இவரது சோக நடிப்பை ரசித்துப் பார்த்தால் கண்களில் நீர் ததும்பிவிடும்.

தொடர்ந்து புகழ் ஏணியில் இருந்த திலீப் குமார், 70களுக்குப் பின் சரிவைச் சந்திக்கத் தொடங்கினார். முதுமையின் காரணமாக, நாயக வாய்ப்புகள் குறையத் தொடங்கியது.

இதனால், 1976ஆம் ஆண்டு ‘பைராக்’ எனும் படத்தில் நடித்தவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நடிக்கவேயில்லை. அந்த இடைவெளியை ஈடுகட்டும் வகையில், 1981இல் வெளியான ‘க்ரந்தி’ பெரிய வெற்றியைப் பெற்றது.

இதன் தொடர்ச்சியாக, 1982இல் ‘ஷக்தி’ எனும் படத்தில் அமிதாப்பச்சனுக்கு தந்தையாகவும் அனில் கபூருக்கு தாத்தாவாகவும் நடித்தார். அமிதாப்புடன் திலீப் குமார் நடித்த ஒரே படம் இதுவே.

நம்மூர் ‘தங்கப்பதக்க’த்துக்கு கோட்சூட் அணிந்தது போன்ற கதை. இப்படத்தில் நடித்ததற்காக திலீப்பும் அமிதாப்பும் ஒருசேர பிலிம்பேர் சிறந்த நடிகர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு, இறுதியில் திலீப் அதனை வென்றார்.

மஸால், மஜ்தூர், தரம் அதிகாரி, கானூர் அப்னா அப்னா, சவுதாகர் உள்ளிட்ட படங்களில் நடித்தவர், இறுதியாக 1998ஆம் ஆண்டு வெளியான ‘குய்லா’ படத்தில் தன் நடிப்பை வெளிப்படுத்தினார். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்தி திரையுலகில் இருந்தாலும், இவர் நடித்த மொத்த படங்களின் எண்ணிக்கை 65க்குள் அடங்கிவிடும்.

ஆனாலும், இன்றுவரை திலீப் குமார் நினைவுகூரப்படுவதற்குக் காரணம் அவரது திறன்மிக்க நடிப்பு மட்டுமே.

ஆதர்ச தம்பதிகள்!

1940களிலேயே நடிக்க வந்தாலும், 1966ஆம் ஆண்டு தன்னைவிட 22 வயது இளையவரான சாய்ரா பானுவை மணந்துகொண்டார் திலீப் குமார். இந்த தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை.

2000ஆவது ஆண்டுக்குப் பிறகு திலீப்குமாரின் உடல்நலம் மோசமடைந்தது. அதன்பிறகு, அவரை ஒரு குழந்தை போலவே சாய்ரா கவனித்துக்கொண்டார். சாய்ரா மூலமாகவே, இந்தி திரையுலக பிரபலங்கள் திலீப் உடல்நிலை குறித்து அறிந்து வந்தனர். திரையுலகைச் சேர்ந்தவர்கள், இவர்கள் இருவரையும் ஆதர்ச தம்பதிகளாகவே போற்றினர்.

கடந்த ஜுன் 30ஆம் தேதியன்று மூச்சுத்திணறல் காரணமாக மும்பை இந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திலீப் குமார், ஜூலை 7ஆம் தேதி காலை 7.30 மணியளவில் மறைந்தார்.

ஈடிணையற்ற கலைஞராக வாழ்ந்து மறைந்தவரின் நினைவைப் போற்றும் வகையில், அவருக்கு மகாராஷ்டிர அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார் அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே.

ஒரு சாதனையாளர் மறையும்போது பிரிவுத்துயர் வாட்டினாலும், அவர் விட்டுச்சென்ற நினைவுகள் என்றும் நம்மை உயிர்ப்புடன் இருக்கச் செய்யும்.

அந்த வகையில், ஒரு நிறைவாழ்வு பெற்றுச் சென்றிருக்கிறார் திலீப் குமார். அவரது திரைப்படங்களைத் தொடர்ந்து ரசிப்பதும், அவரது சாதனைகளை வியப்பதுமே நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாக அமையும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *