தமிழ் தேசியத்தின் ஏக அரசியல், திரும்பிப் பார்க்க வேண்டிய தூரம்!

சில்லறை அரசியல் செல்நெறிகளால், இலட்சியங்களை அடைவதற்கான சிறுபான்மையினரின் பாதைகளில் தடைகள் போடப்படுவது தொடரவே செய்கின்றன. அரசாங்கங்கள் இந்தத் தடைகளைப் போடுகிறதா? அல்லது அழுத்தங்களால் இந்தப் பாதைகள் தடைப்படுகின்றனவா?இலட்சிய தாகமுள்ளோர் சிந்திக்க வேண்டிய விடயமிது. இருப்பினும் சிறுபான்மைத் தலைமைகளின் செல்நெறிகள், தீர்க்கதரிசனமாக இல்லாததால் போடப்படும் தடைகளாகவே இவை நோக்கப்படுகின்றன.

எதிர்ப்பு அரசியல் மனோபாவங்களால் அரசாங்கத்துக்கும், தமிழர்களின் ஏக உரிமை அரசியலுக்கும் இடைவெளிகள் நீண்டு செல்கின்றதே தவிர நெருங்கியதாக தென்படவில்லை. இக்கட்டான கட்டங்களில் அரசுக்கு அல்லது, ஆட்சிக்கு வரச்சாத்தியமான கட்சிக்கு இந்தத் தமிழ்த்தேசிய உரிமைக் கட்சிகள் உதவியதில்லை. தென்னிலங்கையில், சுமார் இரண்டு தசாப்தங்களாகக் காலூன்றியுள்ள நவீன கருத்தாடலிது.

ஜெனீவாவில் மடக்கிப்பிடிப்பது அல்லது உள்நாட்டில் உதறித்தள்ளுவது, இப்படியே சென்ற அரசியல் செல்நெறிகள்தான், தமிழரின் தாயக அரசியல் பாதையில் தடைகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்தத் தடைகளில் ஒன்றாகத்தான், தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் ஜனாதிபதி நடத்தவிருந்த சந்திப்பும் தடைப்பட்டுள்ளது. தடைப்பட்டதா? அல்லது தடுக்கப்பட்டதா? என்ற பின்னணிகளுக்குப் பின்னால் சென்றால், இந்த அரசியலின் பல பரிணாமங்களைப் பார்க்க முடியும். ஏன்? ஏற்கனவே நடந்த சந்திப்புக்களால், இந்தத் தலைமைகள் எவற்றைச் சாதித்தன.

அரசியல் கைதிகளின் விடுதலை, வடக்கு – கிழக்கு இணைப்பு, அரசியலமைப்பு மாற்றம் மற்றும் காணி அபகரிப்புக்களை நிறுத்துதல் என்பவைதான், போருக்குப் பின்னரான தமிழரின் அரசியல் பரிணாமங்களாகி வருகின்றன. ஒரு கலாசாரத்தின் (திராவிட), மொழியின் தனித்துவத்துக்கான அபிலாஷைகள், இன்று அடையாள அரசியலுக்கான ஆசைகளாகியுள்ளதுதான் கவலை. இந்நிலை ஏற்பட்டதற்கு உரிமை அரசியலுக்கான செல்நெறிகள் பங்களித்திருக்கலாம். கடந்த, தற்போதைய காலங்கள் இவற்றை நிரூபித்து வருகின்றன.

சிறுபான்மையினரின் குறிப்பாக, தமிழர்களின் ஒட்டுமொத்த ஆதரவால் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசிலாவாவது, தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள் இல்லாவிட்டாலும் கைதிகள் விடுதலை, காணிகளை விடுவித்தல், மாகாண சபைகளின் ஆள்புலங்கள் ஆகிய ஆசைகளையாவது அடைந்திருக்கலாம். இந்தச் செல்நெறிகளால் இவற்றைச் சாதிக்க முடிந்ததா இவர்களுக்கு? அபிலாஷை அரசியலுக்கான அடையாளமாகக் கிடைக்கப்பெற்ற மாகாண சபைகளின் செயற்பாடுகளையும் சீரழித்திருக்கின்றன இந்தச் செல்நெறிகள். இது தெரியாத சிலர், மாகாண சபைகளின் அதிகாரங்களைப் பிடுங்கும் வகையில், பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்த முயற்சிப்பதும் கவலையளிக்கிறது.

ஆதரவுடன் வந்த அரசாங்கத்திலே சாத்தியமற்றுப் போன தமிழர்களின் அரசியல் ஆசைகளை, குற்றவாளிகளாகக் குற்றம்சாட்டிப் பிரச்சாரம் செய்த அரசாங்கத்திடம் அடைந்துகொள்ளக் கூடியதாக இருக்குமா? தென்னிலங்கையின் எழுச்சியால் ஆட்சிக்கு வருவதற்கான சந்தர்ப்பங்கள் கண்ணூடாகத் தெரிந்தும், இவர்களின் கணிப்பீடுகள் பிழைத்தமைக்கு எதிர்ப்பு அரசியல் மனநிலைகள்தானே காரணம். இல்லை, போரின் வலிகளுக்கான எதிர்ப்பைக் காட்டி, தமிழரின் மனநிலைகளை ஒன்றுதிரட்டத்தான் 2019 இல் இந்தத் தீர்மானத்தை எடுத்ததாகச் சிலர் நியாயப்படுத்தலாம். அவ்வாறானால், நியாயம் பெறுவதற்கு தமிழர் நம்பியுள்ள தரப்புக்களூடாகத்தான் தீர்வுக்கும் முயற்சிக்க வேண்டியிருக்கிறது.

இதனையே, அரசு சார்பான செல்நெறியில் செல்லும் தமிழ்த் தலைமைகள் சொல்கின்றன. “உள்ளூரில் பேசித் தீர்ப்போம், அந்நியத் தலையீடுகளும், ஐ.நா அமர்வுக் கோஷங்களும் வாக்காளர்களை உசுப் பேற்றுமே தவிர, தன்மானத்தோடு தமிழர்களை வாழவைக்காது” என்கின்றனர். இது, இன்று யதார்த்தமாவதையும் காணக்கிடைக்கின்றது.

பொறுப்புவாய்ந்த அரசாங்கம் என்ற வகையில், அரசியலை மறந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திக்க ஜனாதிபதி விரும்பினாலும் அழுத்தங்கள் விடுவதாக இல்லை. எனவே, இந்த அழுத்த சக்திகள் தெளிவடையும் வகையிலான செல்நெறிகளையே, தமிழ்த் தேசியத்தின் ஏகபிரதிநிதிகள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தப் பிரகாரம், மாகாணங்களின் ஆள்புலங்களா? அல்லது அதற்கும் மேலானதா? தமிழர்கள்தான் பேசவேண்டும். இந்தியாவையோ அல்லது ஜெனீவாவையோ பேசவைப்பது அந்நியத்தலையீடுகளாகத்தான் அழுத்த சக்திகளால் பார்க்கப்படும்.

ஆனாலும்,போரின் வடுக்களால் புதிதாகத் தோற்றம் பெற்றுள்ள பக்கவிளைவுப் பிரச்சினைகள் இருக்கிறதே! இவற்றை அரசு சார்பு தமிழ்த் தலைமைகள் தீர்த்துவைக்க இடமளிப்பதுதான், அழுத்த சக்திகளின் இயங்கு நிலைகளை உறங்கல் நிலைக்கு கொண்டு செல்லும். சார்பு அரசியலைக் கடைப்பிடிப்பது அல்லது அரசு சார்பு தமிழ்த் தலைமைகளுக்கு இடமளிப்பது, இதிலொன்றுதான் தமிழ்த் தேசியத்தின் ஏகபிரதிநிகளுக்கு இப்போதுள்ள வழியாகும். ( சுஹைப்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *