பாராளுமன்ற அமர்வுக்கு பிரதமர் தலைமையில் சைக்கிளில் வருவார்கள் இம்ரான் எம்.பி!

எரிபொருள் விலை தற்பேது மிகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பல கஷ;டங்களுக்கு முகங்கொடுக்கவுள்ளனர். இதனைக் கண்டித்து பிரதமர் தலைமையில் அமைச்சர்கள், எம்.பிக்கள் அடுத்த பாராளுமன்ற அமர்வுக்கு சைக்கிளில் வருவார்கள் என எதிர்பார்க்கிறேன.;

இவ்வாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர் மேலும் கூறியுள்ளதாவது,

கடந்த எமது அரசு காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் விலை சூத்திரத்துக்கமைய நியாயமான எரிபொருள் விலையேற்றம் இடம்பெற்ற போது அதற்கெதிராக தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் பாராளுமன்ற அமர்வுக்கு சைக்கிளில் வருகை தந்தனர்.

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் கஷ;டங்களை அனுபவிப்பதாகவும், அந்த விலையேற்றத்தை எதிர்த்தே சைக்கிளில் பாராளுமன்றம் வந்ததாகவும் அவர்கள் கருத்து தெரிவித்தனர். தற்போது இந்த விடயம் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருவதால் அதனை அனைவரும் விளங்கிக் கொண்டுள்ளோம்.

அன்று மக்களுக்காக சைக்கிளில் மற்றும் மாட்டு வண்டிகளில் பாராளுமன்றம் வந்தவர்கள் அடுத்த பாராளுமன்ற அமர்வில் அதனைச் செய்வார்களா என்பதைக் கேட்க விரும்புகின்றேன்.

இவர்களது ஏமாற்று அரசியல் குறித்து அடுத்த பாராளுமன்ற அமர்வு வரை மக்கள் பொறுத்திருந்து பார்க்க முடியும்.

இப்போது நியாயமான காரணங்களுக்கு அப்பால் அதிக எரிபொருள் விலையேற்றம் இடம்பெற்றுள்ளது. நாட்டு மக்களைச் சுரண்டி சுகபோகம் காணும் அரசின் நோக்கமே இந்தளவு எரிபொருள் விலையேற்றத்துக்கு காரணமாகும்

இந்த எரிபொருள் விலையேற்றத்தால் போக்குவரத்துச் செலவு உட்பட சகல பொருட்களினதும் விலைகள் அடுத்தடுத்து அதிகரிக்கப்படவுள்ளன. இதனால் தாங்க முடியாத சுமையை மக்கள் தாங்கிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்தின் தூர நோக்கற்ற செயற்பாடு காரணமாக உணவுப் பொருட்கள் உள்ளிட்ட சகல பொருட்களுக்கும் ஏற்கனவே விலை அதிகரித்துள்ளது. மக்கள் இந்த சுமையை சுமக்க முடியாமல் சுமந்து வருகின்றனர். இந்த அரசாங்கத்தின் வினைத்திறனற்ற செயற்பாடுகளே இந்த விலையேற்றங்களுக்கு காரணம்.

இந்த சூழ்நிலையிலேயே மீண்டுமொரு பாரிய விலையேற்ற சுமை மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. மக்கள் நலனைப் பற்றிய எந்த எண்ணமும் அரசாங்கத்திற்கு இல்லை என்பதை இது நன்கு தெளிவு படுத்துகின்றது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ காலத்தில் இருந்த எரிபொருள் விலையை கடந்த எமது ஆட்சிக்காலத்தில் பெருமளவு குறைத்தோம். எரிபொருள் விலையேற்றத்துக்கென சூத்திரம் ஒன்றை நாம் அறிமுகப் படுத்தினோம். அது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத சூத்திரம். அதிலுள்ள நியாயத்தை மக்களும் விளங்கிக் கொள்ளும் வாய்ப்பு இருந்தது.
இதனைக் கூட சகித்துக் கொள்ள முடியாத நிலையில் தான் அன்று பாராளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்தனர்.

அது மாத்திரமன்றி எரிபொருள் விலையைக் குறைத்த நாம் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை 100 வீதம் அதிகரித்தோம். மருந்துப் பொருட்களின் விலை உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்தோம். இதனால் மக்களின் சிரமங்களில் பெருமளவு குறைந்தது. எனவே, எமது கடந்த கால அரசின் செயற்பாடுகள் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டதாகவே இருந்தது.

இப்போது இந்த அரசில் மக்களின் நலன் நோக்கிய செயற்பாடுகள் இல்லை. குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து கொண்டு குளிருட்டப்பட்ட வாகனங்களில் பயணிப்போர் மக்கள் அனுபவிக்கும் இந்த கஸ்டங்கள் விளங்கிக் கொள்ளப் போவதில்லை.

அரசு என்ற அடிப்படையில் எல்லோரும் சேர்ந்து எரிபொருள் விலையேற்றத் தீர்மானத்தை எடுத்து விட்டு இன்று குறிப்பிட்ட அமைச்சர் மீது குற்றத்தை சுமத்துகின்ற அநாகரிக அரசியல் இடம்பெறுவது குறித்து நான் மிகவும் வேதனைப் படுகின்றேன். இப்படி குறிப்பிட்ட அமைச்சர் மீது குற்றஞ்சாட்டி விட்டு பொதுமக்கள் மத்தியில் நல்ல பிள்ளையாக இருக்க அரசு நினைக்கிறது.

இந்த நாட்டிலுள்ள மக்கள் கல்வி அறிவு கூடியவர்கள். நன்கு சிந்திக்கும் திறன் உள்ளவர்கள். எனவே, இது போன்ற வெட்கமில்லாத காரணங்களை கூறி அவர்களை ஏமாற்றும் செயன்முறையை அரசு கைவிட வேண்டும்.

தற்போதைய பொருத்தமற்ற எரிபொருள் விலையேற்றத்தை உடன் குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *