புதிதாக ‘குரங்கு அம்மை’ வைரஸ் நோய் அடையாளம் காணப்பட்டுள்ளது!

பிரித்தானியாவில் குரங்கு அம்மை (Monkey Pox) என்னும் வைரஸ் பரவுவதால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர். வட வேல்ஸில் இரண்டு நோயாளர்களுக்கு ஆட்கொல்லி குரங்கு அம்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என பிரித்தானிய சுகாதார மற்றும் சமூக பாதுகாப்புச் செயலாளர் மட் ஹென்கொக் (Matt Hancock) தெரிவித்துள்ளார்.

இதன்படி ,ஏற்கெனவே கொவிட்-19 தனிமைப்படுத்தலை பராமரித்து வரும் நிலையில், தற்பொழுது இந்த அரிய வகை ஆட்கொல்லிக் கிருமி பிரித்தானிய மக்களை அச்சம் கொள்ளச் செய்துள்ளது.
இந்த நோய்த் தாக்கத்துக்குள்ளாகியுள்ள இருவரும், வெளிநாடொன்றிலிருந்தே இந்தக் கிருமியைக் காவிக்கொண்டு வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

நோய்த் தாக்கத்துக்குள்ளான இவர்கள் இருவரில், ஒருவர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். அவரின் நிலை என்னவென்பது தெரியவில்லை.

குரங்கு அம்மை என்பது அரிய நோய். இது தோல் வெடிப்பைக் கடுமையாக்கி, தலைவலி, முதுகுவலி, புளு காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் காட்டும். குரங்குகள், எலிகள், அணில்கள் மற்றும் சிறிய விலங்கினங்கள் மூலமாக இந்தக் கிருமித் தொற்று பரவுகின்றது.

அந்த நோயானது சாதாரணமாக, மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்காவிலேயே காணப்பட்டது. இந்தக் கிருமியானது, கண்கள், வாய், மூக்கு மற்றும் வெடித்த தோல் பகுதி என்பவற்றினூடாக உடலுக்குள் செல்கின்றது.

மேலும் அதன் பிறகு, ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குத் தோலுக்குத் தோல், இருமல், தும்மல், தொடுதல் மூலமாகப் பரவுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *