மேலும் இருவார காலத்துக்கு பயணக் கட்டுப்பாடுகள் அவசியம்!

நாடளாவிய ரீதியில் அமுலிலுள்ள பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமானால், இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மீண்டும் சடுதியான அதிகரிப்பு ஏற்படும். எனவே எதிர்வரும் இருவார காலத்துக்கு பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் இருப்பது அவசியமாகும் என்று இலங்கை மருத்துவ சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி ,அதுமாத்திரமன்றி பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் இயங்கிக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் எழுமாற்றாக பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதன் ஊடாக கொவிட் – 19 தொற்றுப் பரவல் ஏற்படுகின்றதா என்பதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் அவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இலங்கை மருத்துவ சங்கத்தினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

சுகாதாரத்துறைசார் அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைவாக அதிதீவிர பயணத்தடை மேலும் நீடிக்கப்பட்டிருப்பதனை நாம் வரவேற்கிறோம். நாடளாவிய ரீதியில் பெரும் எண்ணிக்கையானோர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாவதையும் அதனால் அதிகளவானோர் உயிரிழப்பதையும் தடுப்பதற்கு இது உதவக் கூடும்.

இத்தோடு ஏற்கனவே இயலுமானவரை உச்சமட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் சுகாதாரத்துறையின் செயற்பாடுகள் முழுமையாகச் சீர்குலைவதும் இந்த அறிவிப்பின் மூலம் தடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும் ,எனவே மிகச்சரியான தருணத்தில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் ‘பயணக்கட்டுப்பாட்டு’ உத்தரவானது நாட்டில் இடம்பெற்றிருக்கக்கூடிய பாரிய அனர்த்தத்தையும் சுகாதாரத்துறையின் வலுவிழப்பையும் தடுத்துநிறுத்தியிருக்கிறது என்றே கூற வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *