ஆளும் கட்சியின் பிரதமராக ரணில்?

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவதற்கு மஹிந்தானந்த அழுத்கமகே போன்ற சிலர் தயாராக உள்ளனரா என்ற கேள்வி எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நாடாளுமன்றத்திற்கு அழைப்பதற்கான தேவை யாருக்கு பிரதானமான தேவையாகவுள்ளது என்று மக்கள் சிந்திக்க வேண்டும்.

அரசியலில் ஆழமான அனுபவம் மிக்கவரான முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன, ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றம் சென்றால் மீண்டும் பிரதமாராகக் கூடிய வாய்ப்பும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சர்வதேசமட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் தலைவராவார். ஆசியாவில் சிறந்த நிபுணத்துவமும் அரசியல் அனுபவமும் உடைய மூத்த அரசியல்வாதியாவார்.

அதனடிப்படையில் அவதானிக்கும்போது ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்குவதற்கு மஹிந்தானந்த அழுத்கமகே போன்ற சிலர் தயாராக உள்ளனரா? என்ற கேள்வி எழுகிறது. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியில் எவரும் மீண்டும் அவருடன் இணையுமளவிற்கு தைரியமற்றவர்கள் அல்ல.

அரசாங்கம் அதன் குறைபாடுகளையும் இயலாமையையும் மறைப்பதற்காக தற்போது இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து எந்தவொரு தலைவர் தெரிவு செய்யப்பட்டாலும் அவர்களால் இலகுவாக மீளெழ முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *