இன்று இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம்!

இந்த ஆண்டின், முதல் சந்திர கிரகணம் இன்று மாலை (புதன்கிழமை) நிகழ்கிறது. கிரகண நேரத்தில் பெரிய நிலா அதாவது, ‘சூப்பர் மூன் மற்றும் பிளட் மூன்’ எனப்படும், ரத்த நிலா தோன்றும் வானியல் நிகழ்வும் நடக்கிறது.

சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் ஒரே நேர்கோட்டில் பூமி வரும் நிகழ்வுதான் சந்திர கிரகணம். இதில் முழு சந்திர கிரகணம் என்பது மூன்று ஆண்டுகளுக்கு 2 முறை நிகழும். முழுமையான சந்திர கிரகணத்தின்போது நிலவு கூடுதல் ஒளியுடன் ரத்தச் சிவப்பு நிறத்தில் மிளிரும் என்பதால், அதை ரத்த நிலா என்று அழைக்கின்றனர். அப்படிப்பட்ட முழு சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது.

சந்திர கிரகணத்தை நாட்டில் சில பகுதிகளில் இன்று காண முடியும் என்று மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று மாலை சந்திரன் உதயமானதும் சிறிது நேரத்துக்கு பகுதியளவு சந்திர கிரகணத்தை, சிக்கிம் தவிர்த்து வடகிழக்குப் பகுதிகள், மேற்கு வங்காளத்தின் சில பகுதிகள், ஒடிசாவின் சில கடற்கரைப் பகுதிகள் மற்றும் அந்தமான் நிகோபர் தீவுகளில் காணலாம்.

சந்திர கிரகணம் மாலை 3.15 மணிக்குத் தொடங்கி 6.23 மணிக்கு முடியும். அதேநேரம் முழு சந்திர கிரகணம் மாலை 4.39 மணிக்குத் தொடங்கும். அதை தென்அமெரிக்கா, வடஅமெரிக்கா, ஆசியாவின் சில நாடுகள், ஆஸ்திரேலியா, பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் காணமுடியும். இன்று ஏற்படும் சந்திர கிரகணத்துக்குப் பின் இந்தியாவில் அடுத்த சந்திர கிரகணத்தை இந்த ஆண்டு நவம்பர் 19-ம் திகதி காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *