இலங்கையை துரத்தும் குவேனியின் சாபம்!

குவேனி பற்றிய கதைகளை நமக்குத் தந்தது மகாவம்சமே. மகாவம்சத்துக்கு மூலாதாரமாக இருந்த ஏனைய நூல்களான சிஹல அட்டகத்தா, தீபவம்சம் போன்றவையும் மகாவம்சத்தில் கூறப்படாத மகாவம்சக் கதைகளையும், கதை மாந்தர்கள் பற்றியும் மேலதிக விபரங்களைத் தந்துள்ளன. மகாவம்சம சிங்கள பௌத்தர்களின் புனித வரலாற்று நூலாக கொண்டாடப்படுகிற போதும் மானுடவியலாளர்கள் மகாவம்சத்தின் முழுக் கதைகளையும் உண்மை நிகழ்வுகளாக பரிந்துரைப்பதில்லை. அதன் நம்பகத் தன்மையை கேள்விக்குட்படுத்தும் பல புனைவுகள் அதில் உள்ளமை தான் அதற்குக் காரணம்.

ஆனாலும் சிங்கள இலக்கியங்களில் மகாவம்ச உபகதைகள் பல தனித்தனியாக பதிவு செய்யப்பட்டுள்ளன. கட்டுரைகளாகவும், நூல்களாகவும், திறனாய்வுகளாகவும் அவை உள்ளன. இவற்றுக்கு ஆதாரத்தை எவரும் தேடுவதில்லை. ஆனால் மகாவம்ச “புனித” சொல்லிவிட்டதால் அதற்கு ஒரு ஜனரஞ்சக சமூகப் பெறுமதி கிடைத்துவிடுகிறது. அப்படிப்பட்ட கதைகளில் ஒன்று தான் குவேனி இட்ட சாபம்.

இலங்கை எதிர்கொண்டுவருகிற பல சிக்கல்களுக்கு குவேனி அன்று இட்ட சாபம் தான் என்கிற பாணியில் இந்த மரபுவழிக்கதைகள் சமூகத்தில் வேரூன்றியுள்ளன.

தமிழ் பெண் குவேனி இட்ட சாபத்தினால் சிங்களவர்கள் மத்தியில் ஒற்றுமையின்மை மற்றும் அரசியல் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

மோசமான துஷ்ட செயல்களின் காரணமாக லாலா நாட்டு இளவரசன் விஜயன் மீது மக்கள் மன்னரிடம் புகார் செய்கின்றனர். மன்னர் விஜயனை அவனின் 700 தோழர்களுடன் கப்பலில் ஏற்றி நாட்டைவிட்டு விரட்டிவிடுகிறார். அந்தக் கப்பல் இலங்கைக் கரையை அடைகிறது.

இப்படி கி.மு. 543 ஆம் ஆண்டு இலங்கை நாட்டில் விஜயன் காலடி வைத்தபோது அங்கு ஒரு மரத்தடியில் குவேனி என்ற பெண் அமர்ந்திருக்கிறாள்.

இலங்கையை ஆண்ட ராவணனை ராட்சதன் என்று கூறப்பட்டதுபோல, குவேனியையும் ராட்சத குலம் என்று வர்ணிக்கிறது “மகாவம்சம்”.

விஜயனுக்கு அடைக்கலம் கொடுக்கிறாள் குவேனி. இருவரும் காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொள்கிறார்கள்.

குவேனி விஜயனை மணமுடித்த வேளையில் அதற்கு எதிராக குவேனியின் இயக்க இனத்தவர்கள் எதிர்ப்பு வெளியிட்டார்கள். இயக்கர் இனத்து மரபை பாதுகாப்பதற்காக உயிரைக்கூட கொடுக்கத் தயாராக இருக்கும் இனமாக கருத்தப்பட்டார்கள் இயக்கர்கள் (இயக்கர்களை யக்ஷர்கள் என்றும் அரக்கர்கள் என்றும் அழைக்கப்படுவர் ). இந்த மரபை மீறும் எவரையும் அந்த பரம்பரையிலிருந்து விலத்துவது ஒரு விதியாக இருந்தது. இயக்கர் பரம்பரையில் வரலாறு பற்றி எழுதப்பட்டிருக்கிற “வரிக பூர்ணிகா புஸ்தகய” (වර්ග පූර්ණිකා පුස්තකය) என்கிற நூலில் எழுதப்பட்டிருக்கிற விதிகளின் படி “பரம்பரைத் தனித்துவத்தைப் பாதுகாக்கவேண்டும், பரம்பரையை ஒரு போதும் காட்டிக்கொடுக்கக் கூடாது. வேற்றினத்தின் மரபுகளை பின்பற்றக்கூடாது, இன்னொரு கோத்திர இனத்துக்கு அடிபணிய கூடாது” என்பன உள்ளடங்குகின்றன. இதன்படி பார்த்தால் குவேனி இந்த அத்தனை விதிகளையும் மீறித்தான் விஜயனை விவாகம் செய்கிறாள். எனவே இயக்கர்கள் குவேனிக்கு கோத்திரத் தடையை விதித்து அதிலிருந்து துரத்திவிடுகிறார்கள்.

இயக்கக் கோத்திரத்திலிருந்து தள்ளிவைக்கப்பட்ட குவேனி விஜயனுடன் வாழ்கிறாள். விஜயனுக்காக பெரும் விலையைக் கொடுத்தவள் குவேனி. தனது இனத்தால் தனிமைப்படுத்தியதை ஏற்றுக் கொண்டது கூட விஜயனிடம் கொண்டிருந்த நம்பிக்கையால் தான். தனது இனத்தவர்களை விஜயன் இயக்கர் இனத்தை அழிக்க முடிவெடுத்தபோது அந்த அழித்தொழிப்புக்கு விஜயனுடன் ஒத்துழைக்கிறாள். விஜயன் தலைவனாவதற்கு உதவுகிறாள். விஜயனால் இரண்டு குழந்தைகளுக்கு தாயும் ஆகிறாள்.

விஜயனுடன் வந்த அவனுடைய 700 நண்பர்களும் இலங்கையில் குடியேறி பல நகரங்களையும், கிராமங்களையும் உருவாக்குகிறார்கள். அந்தப் பகுதிகளை உள்ளடக்கிய ராஜ்ஜியத்துக்கு மன்னனாகும்படி, விஜயனைக் கோருகிறார்கள்.

சிம்மாசனம் ஏறுமுன் ராஜவம்சத்து பெண்ணை மணந்து கொள்ளவேண்டும் என்று விஜயனிடம் கேட்டுக்கொள்கிறார்கள். அதை நிறைவேற்றும் பொருட்டு விஜயன், ஒரு இளவரசியை மணந்துகொள்வதற்காக விஜயனின் நண்பர்கள் மதுரைக்கு சென்று, அங்கு மன்னருக்கு முத்துக்கள், தங்க ஆபரணங்கள் முதலியவற்றை பரிசாக வழங்கி, தங்கள் மன்னனான விஜயனுக்கு இளவரசியை மணமுடித்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.

இதற்கு பாண்டிய மன்னன் சம்மதிக்கிறார். பாண்டிய இளவரசியுடன், விஜயனின் 700 நண்பர்களுக்கும் 700 பெண்களை தேர்வு செய்து, இலங்கைக்கு அனுப்பி வைக்கிறார். கூடவே ஆயிரக்கணக்கான ஊழியர்களும் சேர்த்து அனுப்பப்படுகிறார்கள்.

மணமாகப்போகும் விஜயன் குவேனியை அழைத்து, “நான் பாண்டிய ராஜகுமாரியை மணக்கப்போகிறேன். என்னுடைய இரண்டு குழந்தைகளையும் என்னிடம் ஒப்படைத்துவிட்டு, இங்கிருந்து போய்விடு” என்று கூறுகிறான்.

வேதனையும், விரக்தியும் அடைந்த குவேனி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு “லங்காபுர” என்ற இடத்துக்கு போய்விடுகிறாள்.

ஆனால் விஜயனோ குவேனியை துரத்திவிட்டு புதிய அரசியை மதுரையிலிருந்து கொண்டுவருகிறான். குவேனி எவரும் இல்லாமல் தனித்து அனாதையாக விடப்படுகிறாள். இந்தத் தனிமையும், துரோகமும் குவேனியை விரக்திக்கும். வெறுப்பின் உச்சத்துக்கும் தள்ளுகிறது.

இந்த சந்தர்ப்பத்தில் தான் குவேனி சபிக்கிறாள். இந்த சாபங்கள்

இயக்கர் வம்சத்துக்கு கொடுத்த சாபம்
விஜயனின் வம்சத்துக்கு கொடுத்த சாபம்
விஜயன் – குவேனி வம்சத்துக்கு கொடுத்த சாபம்
என்று மூன்றாக பிரிக்கலாம்

மொத்தம் ஒன்பது சாபங்கள்

சாபங்கள்

இலங்கைத் தீவு நான்கு திசைகளாலும் அழிக்கப்படட்டும்:
இந்த சாபத்தின் போது குவேனி மானகந்தா நீரூற்றில் இருந்து பாயும் நீரில் தலைமயிரை சேர்த்து இலங்கைக் கடலின் நான் திசையிலும் வீசினாள்.

நான் திசையாலும் அழிவு எட்டட்டும் என்பத அந்த சாபத்தின் சாரம்.

இலங்கையின் தலைவர்கள் அழிந்து போகட்டும் : சாபுர்ன என்றழைக்கப்படுகிற இந்த சாபத்தின் படி இலங்கைக்கு யார் எல்லாம் தலைமை கொடுக்கிறார்களோ அவர்கள் அழிந்து போகட்டும் என்பதே. (இங்கு இலங்கை என்று குறிப்பிட்டாலும் சிங்கள “நூல்களில் இது சிங்கள இனம்” என்றே குறிப்பிடப்படுகிறது)

அன்னிய ஆக்கிரமிப்புகளுக்கு சிக்கட்டும்: இந்த சாபத்தில், அந்நிய நாடுகளின் ஆக்கிமிப்புக்கு உள்ளாகி நாடு நாசமாகட்டும் என்று சபிக்கிறார்.

ஹெல இனம் இரத்தத் தூய்மை இழந்து தனித்துவத்தை இழக்கட்டும் : பக்கி மவுரி என்கிற இந்த சாபத்தின் மூலம் இனத்தூய்மை இழந்து. ஒருவரை ஒருவர் சாக்காட்டுங்கள் என்கிற சபிப்பு.

ஹெல தீவு இரண்டாகப் பிளந்து கடலுக்குப் பலியாகட்டும் : ‘நிமி மினிச” என்கிற இந்த சாபத்தின் மூலம் இலங்கை இரண்டாக உடைந்து இறுதியில் சமுத்திரத்தில் மூழ்கட்டும் என்கிற சாபம்.

அறிவில்லாத இனம் தோன்றட்டும் : இலங்கையில் அறிவீனமான இனம் தோன்றட்டும் என்கிற இந்த சாபத்துக்கு “தக்னிகா” என்கிற பெயரில் அழைக்கப்படுகிறது.

சூரியன், மழை, காற்று, கடல் மற்றும் நீர் என்பவற்றால் அனர்த்தங்கள் வரட்டும் : சூரியன், மழை, காற்று, கடல், நீர் என்பவற்றால் எப்போதும் அனத்தங்களுக்கு சிக்கலாகிக்கொண்டே இருக்க வேண்டும் என்று சபித்தாள்.

நோய்களோடே இருக்கக் கடவது : குணமடைய முடியாததும் விரைவாக பரவக் கூடியதுமான நோய்களுக்கு எப்போதும் ஆளாகிக்கொண்டிருக்கட்டும்
சிதைந்து சீரழிகின்ற இனமாக ஆகட்டும் : குவேனியின் சாபம் என்னவென்றால், கடலில் மிதக்கும் மரக் குச்சி அலைகளுக்கு அகப்பட்டு இங்குமங்குமாக எந்தக் இலக்குமில்லாமல் இறுதியில் மூழ்கிவிடுவது போல எந்தக் கொள்கையும் இல்லாத மக்கள் இலங்கையில் உருவாகட்டும்.

பரிகாரம் பற்றிய நம்பிக்கை
குவேனியின் சாபத்தை அவ்வளவு துச்சமாக மதித்து விடக்கூடாது என்று இன்றும் சிங்கள சமூகத்தில் பலர் நம்புகின்றனர். இலங்கையை ஆண்ட எந்த மன்னரும் இடையூறின்றி, நிம்மதியாக ஆட்சி செய்துவிட்டு மாண்டதில்லை. அவர்கள் அனைவருமே பீதியுடனும், போர்களுடனும், சதிகளை எதிர்கொண்டும் தான் ஆட்சி புரிய நேர்ந்தது. அது பண்டைய மன்னர்கள் தொடக்கம் இன்றைய நவீன அரசாங்கங்கள் வரை நீடிக்கின்றன என்கின்றனர். குவேனி சொன்னபடி இலங்கை இரண்டாக பிளவுபடுவதற்கு அண்மித்திருந்தது. அதிலிருந்து மீண்டது மக்களின் பரிகாரங்கள் தான் என்கின்றனர்.

“குவேனியின் சாபம்” என்கிற பெயரில் நூலொன்றும் சிங்களத்தில் தொகுக்கப்பட்டது. அதில் இந்த சாபத்தில் இருந்து மீள்வதற்கு செய்யவேண்டிய பரிகாரங்களையும் உள்ளடக்கியிருக்கிறார்கள்.

“புத்த மதத்தை சரியாகவும் முறையாகவும் நம்புங்கள். பின்பற்றுங்கள், குவேனிக்கு நன்றிக்கடன் செலுத்துங்கள் இந்த சாபத்தை கடவுளால் மட்டுமே அகற்ற முடியும். குவேனியின் சாபத்தை நீக்க பத்தினி அம்மாளுக்கு மட்டுமே இயலும், எனவே பத்தினி தெய்வத்திடம் (கண்ணகியைத் தான் பத்தினி தெய்யோ என்று சிங்களவர்கள் வணங்குகிறார்கள்) குவேனியின் சாபத்தை அகற்றும்படி வேண்டுங்கள் அதற்காக கன்னிபெண்களை தானம் கொடுங்கள், வேப்பிலையால் குளிர்த்துங்கள், இறந்துபோன பாட்டிமாருக்காக தானம் கொடுங்கள், வயதானவர்களுக்கு கொடுங்கள். முதியோருக்கு தானம் செய்யுங்கள்” என்கிறது அந்த நூல்.இப்போதும் இலங்கையின் அரசியல் தலைவர்கள், ஆட்சித் தலைவர்கள் அவ்வப்போது இதனை செய்துவருவதை காண்கிறோம்.

தன்னை சூழவுள்ள அனைவரதும் மீது எழுந்த வெறுப்பும், குரோதமும் குவேனியை இந்த இரக்கமற்ற சாபங்களை இடத் தள்ளின. குவேனி விஜயனுக்குப் பின் இன்னொரு துணையை நாடிச் செல்லவில்லை. மாறாக ஒரு பௌத்த துறவியாக ஆனாள். ஆனாலும் குவேனி இட்ட சாபத்தின் காரணமாக மரணத்துக்குப் பின் ஆத்மா சாந்தியடையவில்லை. அந்தச் சாபங்கள் நிலைத்தே நின்றன. அந்த சாபங்கள் நிவைவேறுவதை பார்த்துக்கொண்டு குவேனியின் ஆத்மா இன்றும் இலங்கை பூராவும் அலைகிறது என்கிற நம்பிக்கை இன்றும் நிலவுகிறது.

விஜயன் – குவேனிக்காக கட்டப்பட்ட முதல் வழிபாட்டுச் சிலை
இந்த சாபத்தை போக்க பரிகாரமாக விஜயன் – குவேனி ஆகியோரின் சிலைகள் அருகருகில் இருக்கும் வகையில் ஆலயம் ஒன்று 2014 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. மாத்தறை புகையிரத நிலைய வீதியில் உள்ள ஸ்ரீ சிவ சுப்பிரமணியர் ஆலய புனர்நிர்மாணம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டபோது அந்த ஆலயத்தில் விஜயன் மற்றும் குவேனியின் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

இலங்கையில் சிங்களவர்கள் உருவாக காரணமான விஜயன் மற்றும் இயக்கர் குல வேடுவ பெண்ணான குவேனி ஆகியோருக்கான முதல் கோயிலாக இது கருதப்படுகிறது.

குவேனி விஜயனிடம் தப்பிச் சென்றபோது இயக்கர்கள் குவேனியைப் பிடித்து கொன்றுவிட்டதாக மகாவம்சம் கூறுகிறது. அதேவேளை ஏனைய “வம்ச” வரலாற்று நூல்கள் குவேனி துறவறம் பூண்டாள் என்கின்றன. குவேனியின் ஆண் பிள்ளையும், பெண் பிள்ளையும் தப்பிச்சென்று மஹியங்கனையை அடைந்து அவர்கள் இருவரும் திருமணம் புரிந்து வம்சத்தை வளர்த்தார்கள் என்றும் அவர்களின் வழிவந்தவர்களே இன்றைய வேடுவர் இனம் என்றும் சிங்கள வாய்மொழி வரலாறுகளும் கூறுகின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *