அவுஸ்திரேலியாவில் 99 வீதமான கொரோனா வைரஸை அழிக்கும் மருந்து கண்டுபிடிப்பு!

கொரோனா வைரஸ்களை அழிக்க இதுவரை எந்த சிகிச்சை முறையும் இல்லாத நிலையில், ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் புதிய சாதனை படைத்துள்ளனர். அவர்கள் கண்டுபிடித்த ஆர்என்ஏ சிகிச்சை முறையில் 99 சதவீதம் கொரோனா வைரஸ்களை அழிக்க முடியும் என கூறி உள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆகி விட்டன. இந்த வைரசிடமிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள இப்போதுதான் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ்களை அழிக்க எந்த ஒரு சிகிச்சை முறையும் இதுவரை இல்லை. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள கிரிப்பித் பல்கலைக்கழகத்தின் மென்ஸிஸ் சுகாதார நிறுவனமும், அமெரிக்க ஆய்வாளர்கள் குழுவும் இணைந்து கொரோனாவுக்கான புதிய சிகிச்சை முறையை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இவர்கள் மனித செல்களில் கொரோனா வைரஸ் தனது பல மாதிரிகளை உருவாக்குவதை தடுக்க ‘சிறு குறுக்கீடு ஆர்என்ஏ’ (எஸ்ஐஆர்என்ஏ) என்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர். கொரோனா வைரஸ்கள் உருமாற்றம் பெற்றாலும் அவற்றின் ஆர்என்ஏக்கள் பொதுவானதாக இருக்கும். அந்த ஆர்என்ஏக்கள் தான் வைரஸ்களை நகலெடுக்கின்றன. வைரஸ் ஆர்என்ஏக்களின் சிறு துகள்களில் இருந்து எஸ்ஐஆர்என்ஏ தயாரிக்கப்பட்டுள்ளது. அவற்றை உடலில் செலுத்தும் போது, வைரஸ்களின் ஆர்என்ஏவுடன் இணைந்து, அவற்றை நகலெடுப்பதை தடுத்து அழிக்கின்றன. எலிகளுக்கு தந்து பரிசோதனை செய்ததில் இந்த சிகிச்சை முறையில் 99% வைரஸ்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனாலும், இது மனிதர்களிடம் சோதித்த பிறகே முழு வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *