பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அநியாயம் செய்கிறது சொயிப் மலிக் குற்றச்சாட்டு!

கிரிக்கெட் உலகில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி என்றாலே அதில் சர்ச்சைக்கு பஞ்சமிருக்காது. அந்த அணியைஏதாவது ஒரு சர்ச்சை சுற்றிக்கொண்டே இருக்கும். தற்போது அந்த அணியின் கிரிக்கெட் நிர்வாகத்தின் மீது, பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் என பலரும் சரமாரியான குற்றச் சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இதற்கிடையில் அந்த அணியின் மூத்த மற்றும் முன்னணி வீரரான சோயிப் மாலிக், அந்த அணி நிர்வாகத்தின் மீதும், கேப்டன் பாபர் அசாம் மீதும் பரபரப்பான குற்றச்சாட்டை கூறி உள்ளார்.

இதுகுறித்து இணையதளம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், “எங்களது நாட்டில் வீரர்களின் திறமையை விட, அவர்கள் யாருக்கு நெருக்கமாக உள்ளார்கள் என்பதே பெரிதாக பார்க்கப்படுகிறது. அப்படி பெரிய பதவியில் இருக்கும் நபர்களுடன் நெருங்கிய உறவில் இருக்கும் வீரர்கள் மட்டும்தான் பாகிஸ்தான் அணியில் விளையாட முடியும். இதுபோன்ற நடைமுறை மற்ற நாடுகளில் இருந்தாலும் எங்களது நாட்டில் அது கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. பாகிஸ்தான் அணியின் தற்போதைய கேப்டன், பாபர் அசாம் எந்த வீரரைக் கைகாட்டுகிறாரோ, அந்த வீரர்தான் பாகிஸ்தான் அணியில் இடம்பிடிக்க முடியும்.

இதற்கு தேர்வுக் குழுவின் ஆதரவும் முழுமையாக உள்ளது என்பதால் அவருக்கு நெருக்கமான வீரர்களை மட்டுமே அவர் அணியில் சேர்க்கிறார். இதற்கு சிறந்த உதராணமாக தற்போது நடந்து முடிந்த பகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நடந்த கிரிக்கெட் தொடரை குறிப்பிட்டு பேசிய அவர், ஜிம்பாப்வே தொடருக்கான கிரிக்கெட் அணியில், பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் பாபர் அசாமிற்கு பிடிக்காத சில வீரர்களை தேர்வு செய்தது. கிரிக்கெட் நிர்வாகத்தின் இந்த முடிவால் கோபமடைந்த பாபர் அசாம், தேர்வுக் குழுவினருடன் சண்டைப்போட்டு அந்த வீரர்களை அணியிலிருந்து வெளியேற்றியது மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த வீரர்களை அணியில் சேர்த்துக் கொண்டார்’’ என்று அவர் குற்றச்சாட்டுக்களை அடுக்கினார்.

இதற்கு முன்னதாக ஜுனைத் கான், முஹம்மது ஆமீர், வகாப் ரியாஸ் போன்ற வீரர்கள், பாகிஸ்தான் அணியில் வீரர்களின் தேர்வு குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தனர். அவர்களின் வரிசையில் தற்போது சோயிப் மாலிக்கும் இணைந்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *