குழந்தைகள் கொரோனாவை எப்படி எதிர்கொள்கிறார்கள்?

பெரும் தடுமாற்ற உணர்வையும், நாளை பற்றிய கேள்விக்குறியையும் வயதில் மூத்தவர்களுக்கே மனதில் உருவாக்கியிருக்கிறது கொரோனா.

குழந்தைகள்?

இதுவரை பார்த்திராத இயற்கைப் பேரிடரான கொரோனா பற்றிய செய்திகள் வெளிவந்தபோது படித்துக் கொண்டிருந்த குழந்தைகள் பலரும் எப்படி அதை எடுத்துக் கொள்வது என்பதில் குழம்பிப் போனார்கள். பலர் கல்விக்கூடங்கள் மூடப்படும் என்ற அறிவிப்புக்கு உடனடியாகச் சந்தோஷப்பட்டார்கள். தொடர்ந்து விடுமுறை கிடைக்கும் என்று ஆனந்தப்பட்டார்கள்.
செல்போனும், தொலைக்காட்சியுமாகத் தொந்திரவுகள் இல்லாமல் இருக்கலாம் என்று தற்காலிக விடுதலை உணர்வை அடைந்தார்கள். படிப்புக்கும், அதாவது புத்தக வாசிப்புக்கும் இவர்களுக்கும் இடையில் தூரம் அதிகமானது.

பள்ளியில் நன்றாகப் படிக்கும் மாணவ, மாணவிகள் கூட இப்படி இருந்தார்கள். செல்போன்களில் சக நண்பர்களுடன் பரிமாறிக் கொண்டிருந்து மகிழ்ந்த தருணங்கள் எல்லாம் சிறிது சிறிதாகக் குறைந்துபோனது.

வீட்டுக்குள்ளும் ஒரு அதுவரை இல்லாத புதிய புதிரைப் போல இருந்தார்கள் பல குழந்தைகள். பெற்றோர்கள் அவர்கள் செல்போன் பேசிக் கொண்டிருப்பதையோ, அல்லது அதைக் கண்டித்தால் பதிலுக்குக் கோபப்பட்டுக் கத்துமளவுக்குப் போனார்கள்.
பெற்றோர்களுடன் சண்டையிட்டார்கள். தங்களுடைய சுதந்திரத்தில் தலையிடக்கூடாது என்றெல்லாம் பேசினார்கள். செல்போனைத் தொடர்ந்து பார்த்துக் கண் சிவந்து போகுமளவுக்குப் போவதைப் பார்த்து, பெற்றவர்கள் கண்டிக்கிறபோது “இதை விட்டு என்ன செய்யச் சொல்கிறீர்கள்?’’ என்று எதிர்க்கேள்வி கேட்டார்கள்.

சிலர் தங்களுடைய குழந்தைகளின் விசித்திரப் பண்பைப் புரிந்து கொள்ள முடியாமல் மருத்துவர்களிடம் அழைத்துச் செல்லும் அளவுக்குப் போனார்கள்.

ஒருவித மந்தநிலையை பல குழந்தைகளின் மனதில் ஏற்றியது தான் கொரோனா காலத்தில் பரவிய தொற்றுகளில் கூடுதல் இணைப்பாகத் தொற்றியிருக்கும் தொற்று.

வீட்டில் இருப்பதால் பல குழந்தைகள் முன்பிருந்ததைவிடக் கூடுதலாகச் சாப்பிட்டார்கள். அவர்களுடைய தோற்றத்தில் மாற்றம் தெரிந்தது. கண்ணாடிக்கு முன்னால் தங்கள் குழந்தைகள் அடிக்கடி நிற்பதையும் பெற்றோர்கள் பார்க்க முடிந்தது.
நண்பர்களுடன் மணிக்கணக்கில் செல்போனில் உரையாடினார்கள். செல்போனைப் பிடிவாதத்துடன் அவர்களுடைய தேவைக்கேற்ப ரீசார்ஜ் செய்தார்கள்.

ஆன்லைன் வகுப்புகள் நடந்தபோதும், பெரும்பாலான மாணவ, மாணவிகள் அதில் அக்கறை கொள்ளவில்லை. சற்றே அலட்சியமான போக்கு படிப்பதில் நீடித்தது.
தங்களுடைய நலனுக்காகத் தான் ஆன்லைன் வகுப்புகள் நடக்கின்றன; ஆசிரியர்கள் பல்வேறு சிரமங்களுக்கிடையில் ஆன்லைன் பாடங்களை நடத்துகிறார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. படிப்பு சம்பந்தமான எதிர்காலமும் அதில் அடங்கியிருக்கிறது என்பதையும் உணரவில்லை.

சில மாணவர்கள் ஆன்லைன் வகுப்பின்போது, முதலில் ஆஜர் கொடுத்துவிட்டு, அடுத்துக் காணாமல் போனார்கள். அதற்கான தொழில்நுட்ப வித்தைகள் பலருக்குத் தெரிந்திருந்தன. “வகுப்பில் அதுவரை நன்றாகப் படித்துவந்த தங்கள் பிள்ளைகள் ஏன் இந்த மாதிரி மாறிப் போனார்கள்?’’ – திகைத்துப் போனார்கள் பல பெற்றோர்கள்.

மனநல மருத்துவர்கள் தரப்பில் என்ன சொல்கிறார்கள்?

எதிர்பாராத பேரிடரைச் சந்திக்கும்போது வயது வித்தியாசம் பாராமல் பலரும் கலக்கமடைந்து போகிறார்கள். வேலைகளும், தொழிலும் நலிவடைந்து போகின்றன. வீட்டுக்கு வழக்கமாக வரும் வருமானம் குறைந்து போகிறது. கணிசமானவர்கள் கடன் வாங்குகிறார்கள் அல்லது வீட்டில் உள்ள நகைகளையோ, மற்றவற்றையோ அடமானம் வைக்கிறார்கள் அல்லது விற்கிறார்கள்.

சிலர் கூடுதலான அளவில் கந்துவட்டிக்குப் பணம் வாங்குகிறார்கள். எப்படியாவது இந்தக் கொரோனாக் காலத்தைத் தாண்டிவிட மாட்டோமா என்கிற ஏக்கம் பலரிடமும் இருக்கிறது.

ஆனால் இதில் சிக்கல் என்ன என்றால் பிள்ளைகளுக்குக் கல்விக் கட்டணத்தைச் செலுத்தக்கூடப் பல பெற்றோர்கள் படாதபாடு படுகிறார்கள். பெருமூச்சுடன் அலுத்துக் கொள்கிறார்கள்.

அந்தக் கஷ்டம் எதுவும் தங்கள் பிள்ளைகளுக்குத் தெரியக்கூடாது என்று நினைக்கிறார்கள். அதனால் பல குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் தங்களுடைய பெற்றோர்களின் பொருளாதாரச் சிக்கல்கள் தெரிவதில்லை; அதனால் தங்களுக்கான வசதிகளையே அவர்கள் முன்னிறுத்துகிறார்கள். அதனால்தான் பல வீடுகளுக்குள் பிரச்சினைகள் உருவாகின்றன.

கொரோனாக் காலப் பேரிடர் இளம் மனங்களில் ஏற்படுத்தியிருக்கும் பெரும் தாக்கம் – தன்னை, தன் சௌகர்யங்களை மட்டும் முன்னிறுத்தி, பெற்றோர்களை, ஆசிரியர்களைப் புறம் தள்ளும் தன்னலப் போக்கும், அதில் காட்டும் பிடிவாதமான வீம்பும் தான்.

கொரோனா தங்களைக் கடந்து போவதில் இருக்கும் சிரமங்களைப் பலரும் தங்கள் வாழும்காலத்தில் நிச்சயம் மறக்கப் போவதில்லை. சுற்றியுள்ளவர்கள் காட்டும் அலட்சியத்தையும் மறக்கப் போவதில்லை.
இதே தாக்கம்  மனதில் கரும்புகை படர்ந்த உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அவரவர் மனங்களில் கற்களை விட்டெறிந்திருக்கிறது கொரோனா. அதன் சலனத்தை அவர்கள் தங்களுடைய செயல்பாடுகளில் காட்டுகிறார்கள்.

திரும்பவும் பள்ளிகள் திறக்கப்படும் என்கிற அறிவிப்பைக் கூடப் பல குழந்தைகள் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை; சுற்றியுள்ள ஒவ்வொருவரையும் கொரோனா கிருமியைப் போலப் பார்க்கப் பழக்கியிருக்கிறது அண்மைக்காலம்.

என்ன தான் முகக்கவசம் அணிந்து தகுந்த பாதுகாப்புடன் இருந்தாலும், யாரையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்கிற வினோதம் நம் மனங்களில் இன்னொரு தொற்றைப் போலப் பரவியிருக்கிறது. இதற்குக் குழந்தைகளும் விதிவிலக்கல்ல.
காய்ச்சல் வந்த, தும்முகிற, இருமுகிற ஒவ்வொரு மாணவனும், மாணவியும் அல்லது ஆசிரியரும் பிறரால் பள்ளிகளில் சந்தேகத்தோடு பார்க்கப்படுவது நடக்கும். கொரோனா ஏற்படுத்தியிருக்கிற நவீனத் தீண்டாமை கல்விக்கூடங்களிலும் நடக்கும்.

அதையடுத்து கல்விக்கூடங்களுக்கும் மாணவர்களுக்கும் கொரோனாக் காலத்தில் நீண்ட இடைவெளி விழுந்திருப்பதால், மீண்டும் வகுப்பறையில் கல்வியோடு மாணவர்களை ஒன்ற வைக்க ஆசிரியர்கள் சில சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். மனம் ஒன்றிப் படிக்கும் மனநிலையை மாணவர்களிடம் உருவாக்க ஆசிரியர்கள் மெனக்கிட வேண்டியதிருக்கும்.
பெரும் பாறை உருண்டு வருவதைப் போலத் தங்களை நோக்கி நகர்ந்து வரும் கொரோனாத் தொற்றை ஒவ்வொருவரும் தங்கள் பலம், பலமின்மையைப் பொருத்துக் கடந்து வருகிறார்கள்.

பிஞ்சு மனங்கள் அந்தக் கனத்தை எப்படித் தாங்கி நம்பிக்கைக் கரையில் மேலேறும்? அந்தக் கனம் தான் அவர்களை இதுவரை தாங்கள் பார்க்காத விசித்திரக் கோணத்தில் பெற்றவர்களைப் பார்க்க வைத்திருக்கிறது. இனி கல்விக்கூடங்கள் திறந்த பிறகு ஆசிரியர்களையும் அப்படிப் பார்க்க வைக்கும்.

அதைப் புரிந்து கொள்கிற முயற்சியோடு அவர்களை அணுக வேண்டும்.

அது தான் முக்கியம்.

இதைப் புரிந்து கொண்டால் போதும்,

குழந்தைகளுக்கும், நமக்கும், கல்விக்கும் இடையே விழுந்துவிட்ட இடைவெளியைக் குறைத்து, அவர்களையும் புரிந்து கொள்ள முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *