புற்று நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவரை எவ்வாறு பராமரிப்பது?

இன்றைய காலத்தில் புற்று நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனால் ஒரு நாள் எமது அன்புக்குரியவர்களும் பாதிக்கப்படலாம். நவீன மருத்துவ உலகத்தில் மிகவும் வினைத்திறனான சிகிச்சை முறைகள் புற்றுநோய்க்கு எதிராக காணப்பட்ட போதிலும் பல சந்தர்ப்பங்களில் புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர் இறுதியில் மரணத்தை தழுவ வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

இது அவர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கும் உறவினர்களுக்கும் என்றுமே ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நிலைமையாகும். இருந்த பொழுதிலும் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவரின் இறுதி நாட்களை மிகச் சரியாக திட்டமிட்டு அவரை பராமரிப்பதன் மூலம் அவரின் தவிர்க்கமுடியாத இறப்பினை அல்லது அவர் அனுபவிக்கும் வேதனையை சற்று இலகுவாக்கிக் கொள்ள முடியும்.

புற்று நோயாளர் தனது இறுதி நாட்களை நெருங்கும் பொழுது அவருக்கு என்ன நடக்கும் என்பதை எவராலும் அனுமானிக்க முடியாது. அவரின் இறுதி நாட்களின் பராமரிப்பு அவர் எங்கே வைத்துப் பராமரிக்கபடுகிறார் என்பதில் தங்கியுள்ளது. அவரை வீட்டில் வைத்து பராமரிக்கும் பொழுது குடும்ப அங்கத்தவர்களின் பொறுப்புகள் இங்கு மிக அதிகம்.

சாதாரணமாக மரணமானது சில வாரங்களில் அல்லது மாதங்களில் ஒருவர் புற்றுநோயால் படிப்படியாக நலிவடைந்த பின்னர் நிகழும். அம் மரணம் எப்பொழுது நடைபெறும் என்பதை எவராலும் எதிர்வுகூற முடியாது.

இருந்த பொழுதிலும் பின்வரும் அறிகுறிகள் அவர் தனது இறுதிக் காலத்தை நெருங்குகிறார் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்தும்.

• உடல் வலிமையானது மிகவும் சோர்வடைந்து காணப்படுதல்

• ஒரு நாளில் அதிகளவான நேரத்தை நித்திரையில் செலவழித்தல்

• உடல் எடை அதிகமாக குறைவடைதல்

• அளவுக்கு அதிகமாக பசி இல்லாத தன்மை

• உணவை உண்பதற்கும் விழுங்குவதற்கும் சிரமப்படுதல்

• கதைப்பதற்கும் கிரகிப்பதற்கும் சிரமப்படுதல்

• வெளி உலகத்தில் நடப்பவை பற்றி அக்கறை கொள்ளாது இருத்தல்

• தனக்கு அருகில் குறிப்பிட்ட சிலரையே வர அனுமதித்தல்

• நலம் விசாரிக்க வருபவர்களுடன் செலவிடும் நேரத்தைக் குறைத்தல்

மேலும் சில நாட்கள் நெருங்கும் பொழுது அவர்கள் பின்வரும் அறிகுறிகளை வெளிப்படுத்துவார்கள்.

• சுவாசிக்க கடினப்படுதல்

• தோல் மற்றும் கை, கால்கள் குளிராக காணப்படுதல்

• உதடு மற்றும் வாய் பகுதி உலர்ந்து காணப்படுதல்

• சிறுநீரின் அளவு குறைவடைதல்

• தன்னை அறியாமல் மலம் கழித்தல்
• நாள் மற்றும் நேரம் பற்றிய குழப்பநிலை காணப்படுதல்

• தொடுகை மற்றும் சத்தத்திற்கு பிரதிபலிப்பு இல்லாது இருத்தல்.

இவ்வாறான குணம் குறிகளை வெளிப்படுத்தும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சௌகரியமாக தனது இறுதி நாட்களை கழிப்பதற்கு குடும்ப அங்கத்தவர்களினால் நிச்சயமாக உதவி செய்ய முடியும்.

இதற்கான அறிவுரைகளை அவரை பராமரிக்கும் வைத்தியரிடம் அல்லது தாதியரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
அவ்வாறான செயற்பாடுகள் சில.

• கட்டில் மற்றும் கதிரைகளை மென்மையாக வைத்துக் கொள்ள காற்றினால் செய்யப்பட்ட படுக்கைகளைப் பயன்படுத்துதல்

• அவர் அமர்ந்திருக்கும் அல்லது படுத்திருக்கும் நிலையை அடிக்கடி மாற்றிக் கொள்ளுதல். இது படுக்கை புண் வராமல் இருப்பதற்காகச் செய்யப்படுகின்றது.

• கட்டில் விரிக்கை மற்றும் தலையணை உறைகளை வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை மாற்றிக் கொள்ளுதல்.

• அவருக்கு சௌகரியமாக இருக்கும் வகையில் தலைப்பகுதியை சற்று உயர்த்தி வைத்திருத்தல்

• அவரை சூடாக பேணும் முகமாக துணியினால் போர்த்தி வைத்தல்

• கைகளையும் கால்களையும் இளம் சூடான நீரினால் துடைத்து விடுதல்

• அவருடன் மென்மையாகவும் துல்லியமாகவும் கதைத்தல்

• நாள் மற்றும் நேரம் பற்றிய விளக்கங்களை அவருக்கு குறிப்பிடுதல்

• அவரை பார்க்க வரும் உறவினர்களைப் பற்றி அவருக்கு எடுத்துக் கூறுதல். ஏனென்றால் உறவினர்களை அடையாளம் காண்பதில் அவர்கள் சற்று தடுமாற்றத்தைக் காட்டலாம்

• அவருக்கு பிடித்த பாடல்களை மெல்லிய சத்தத்துடன் இசைக்க விடுதல்

• அவருடைய வாயினை ஈரலிப்பாக பேணுவதற்காக சிறிதளவு தண்ணீரை கரண்டியினால் குடிக்க கொடுத்தல். அல்லது கிளிசரின் போன்ற பதார்த்தங்களை பயன்படுத்துதல்.

• அவருடைய உடலை மெருதுவாக வருடி விடுதல்

• அவருடன் எப்பொழுதுமே அருகில் இருத்தல். இது அவர்கள் பாதுகாப்பாக இருப்பதான ஒரு மனநிலையை அவர்களுக்கு ஏற்படுத்தும்.

அவர் சுயநினைவை இழக்கும் சந்தர்ப்பத்தில் அவருடன் பின்வரும் விடயங்களை நாம் பகிர்ந்து கொள்ளலாம்.

அதாவது பதில் சொல்லவேண்டிய கேள்விகளை கேட்பதை தவிர்த்து
“இங்கு எல்லாம் நன்றாக நடக்கின்றது”
“நாங்கள் உங்களுடன் இருக்கின்றோம்”
”நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கின்றோம்”
“நாங்கள் உங்களுடைய மனைவியை அல்லது கணவனை நன்றாக பார்த்துக் கொள்ளுவோம்”
“நாங்கள் உங்களை நேசிக்கின்றோம்”

போன்ற அன்பான வார்த்தைகளைக் கதைக்க வேண்டும்.

வலியினை கட்டுப்படுத்துதல்

புற்றுநோயானது பலவழிகளிலும் ஒருவருக்கு உடல் வலியினை ஏற்படுத்தும். அது அவர்களின் இறுதி நாட்களில் அவர்களுடைய சௌகரிகத்தில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும். வலியானது குழப்பநிலை மற்றும் சோர்வு நிலையை மேலும் அதிகரிக்கும். மேலும் அது அவர்கள் குடும்ப அங்கத்தவர்களுடனும் உறவினர்களுடனும் செலவிடும் நேரத்தையும் குறைக்கும்.

வலியினை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு வகைப்பட்ட மருத்துவமுறைகள் காணப்படுகின்றது எனவே உறவினர்கள் வைத்திய ஆலோசனைகளை பெறுவதன் மூலம் புற்று நோயாளியிக்கு இறுதி நாட்களில் ஏற்படும் வலியை முற்றுமுழுதாக குறைத்துக்கொள்ள முடியும். இதற்கு அருகிலுள்ள வைத்தியசாலையை மற்றும் வைத்தியரின் உதவியை நாட முடியும்.

சுய விருப்பங்களை மதித்தல்

புற்று நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனது இறுதி நாட்களில் இனி வரும் நாட்களில் தனக்கு எவ்வாறான வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை பற்றிய விருப்பத்தை வெளியிடுவார். உதாரணமாக தனது மரணச் சடங்கு எவ்வாறு நடைபெற வேண்டும், உயிர் ஆபத்து ஏற்படும் பொழுது வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதா அல்லது இல்லையா, தான் இறுதியாக காண விரும்பும் உறவினர்கள், நண்பர்கள் போன்ற விடயங்களைக் குறிப்பிடலாம்.

இயலுமானவரையில் அவற்றை நாம் நிறைவு செய்ய முயற்சி செய்ய வேண்டும்.

நடைமுறை விடயங்களை ஒழுங்குபடுத்துதல்

இவ்வாறான விடயங்களை முன்கூட்டியே ஒழுங்குபடுத்தி வைப்பது குடும்பங்களுக்கு இலகுவாக இருக்கும். அதேபோல் அது புற்று நோயினால் பாதிக்கப்பட்டவருடைய இறுதி நாட்களில் நாம் அவருடன் செலவிடும் நேரத்தை அதிகரிக்கவும் செய்யும்.

பின்வருவன அவ்வாறான விடயங்களில் சில.

• முக்கியமாக தேவைப்படும் பத்திரங்களை ஒழுங்கு செய்தல். உதாரணமாக வங்கிக்கணக்குகள், காணிகள் சம்பந்தமான பத்திரங்கள் மற்றும் கைத்தொலைபேசி பயன்படுத்துபவராயின் அதற்குரிய இரகசிய இலக்கங்கள் என்பன.

• அவர் இறுதிநாட்களில் சந்திக்க விரும்பும் நபர்கள்.

• மரணம் நிகழும் சந்தர்ப்பத்தில் அவருடன் இருக்க விரும்பும் நபர்கள்.

• மரணம் நிகழ்ந்த பின்னர் தொடர்புகொள்ள வேண்டிய நபர்களும் அவர்களுடைய தொடர்பு இலக்கங்களும். உதாரணமாக நெருங்கிய உறவினர்கள், கிராம சேவை உத்தியோகத்தர், வீட்டில் மரணம் நிகழும் சந்தர்ப்பத்தில் அதை உறுதி செய்ய வேண்டிய வைத்தியர் மற்றும் மரண சடங்கை நிகழ்த்துவதற்கு தேவைப்படுகின்ற நபர்கள் போன்றவை.

அதேபோல் மரணச்சடங்கை நடத்தி முடிப்பதற்கு தேவையான நிதியினையும் ஒழுங்கு செய்து வைத்தல் வேண்டும்.

மரணம் நிகழ்ந்தபின் சில மணித்தியாலங்களில் செய்ய வேண்டியவை

மரணம் நிகழ்ந்த பின் அவருடைய தசைகள் இலகுவாகும், சுவாசம் மற்றும் இதயத்துடிப்பு நிறுத்தப்படும். இது குடும்ப அங்கத்தவர்களினால் எதிர்பார்க்கப்பட்டது என்றாலும் அவர்களினால் உடனடியாக அதை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு அதிர்ச்சி நிலைமை ஏற்படும்.

இவ்வாறு வீட்டில் இயற்கையாக மரணம் நிகழும் பொழுது அதனை வைத்தியருக்கு தெரியப்படுத்த வேண்டும். ஆனாலும் அது அவசரமாக செய்யப்பட வேண்டிய ஒரு விடயம் அல்ல.

பெரும்பாலான குடும்ப அங்கத்தவர்கள் இவ்வாறான மரணம் நிகழ்ந்த பின்னர் தனது அன்புக்குரியவருடன் சற்று அருகிலிருந்து கதைத்து அல்லது அவர்களுடைய கைகளை பிடித்து கட்டி அணைத்து சிறிது நேரத்தைக் கழிக்க விரும்புவர். எனவே அவற்றுக்கு சந்தர்ப்பம் அளித்து மேலதிக வேலைகளை நிதானமாக செய்வது நல்லது.

எனவே எமது அன்புக்குரியவர்கள் புற்றுநோயினால் மரணிக்கும் சந்தர்ப்பத்தில் மேற்கூறிய விடயங்களை கவனத்தில் எடுத்து செயல்படும் பொழுது அவருக்கும் எமக்கும் ஏற்படும் அசௌகரியங்களை மிகக் கணிசமான அளவு குறைத்துக்கொள்ள முடியும்.

Dr. விஷ்ணு சிவபாதம்
MBBS, DCH, MD Pediatrivs
குழந்தை நல வைத்திய நிபுணர்
போதனா வைத்தியசாலை மட்டக்களப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *