அஜினோமோட்டோவால் ஏற்படும் ஆபத்துக்கள் எச்சரிக்கும் மருத்துவர்!

அதிகரித்த அஜினோமோட்டோ பாவனை பல சுகாதார பிரச்சினைகளுக்கு காரணமாக அமைகிறது என யாழ்.போதனா வைத்தியசாலை பொது வைத்திய நிபுணர் மருத்துவர் எஸ்.சிவன்சுதன் எச்சரித்துள்ளார்.

அஜினோமோட்டோ என்பது மலிவானதும் சுவை நிறைந்ததுமான ஒருவகை உப்பு. இது 100 வருடங்களுக்கு மேலாக மனிதனின் உணவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் கடந்த சில வருடங்களாக இது சம்பந்தமாக நடந்து வரும் ஆய்வுகள் அதிகரித்த அஜினோமோட்டோ பாவனை பல சுகாதார பிரச் சினைகளுக்கு காரணமாக அமைகிறது என்பதை சுட்டிக்காட்டி நிற்கின்றன.

இதிலே காணப்படும் இரசாயனப்பதார்த்தம் மொனோ சோடியம் குழூடாமேற் (Mono sodium glutamet) எனப்படும் ஒருவகை உப்பு ஆகும்.

இது பலவகையான உணவுவகைகளிலே அதிகமாக சேர்க்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நூடில்ஸ் வகை, சூப்வகை, பதப்படுத்தப்பட்ட உணவுவகைகள், பேணிகளில் அல்லது பொதிகளில் அடைக்கப்பட்டு வரும் உணவுவகைகள், கடைகளில் விற்பனையாகும் பல உடன் உணவு வகைகள் போன்றவற்றில் அதிகளவு அஜினோமோட்டோ சேர்க்கப்பட்டு வருகிறது.

அதிகரித்த அஜினோ மோட்டோ பாவனை தலையிடி, படபடப்பு, உடல் எரிவு, விறைப்பு, நித்திரை குறைவு, அதிகரித்த வியர்வை, வாந்தி, களைப்பு போன்ற பல அறிகுறிகளை ஏற்படுத்த முடியும் என்று ஆய்வுகள் உறுதி செய்கின்றன என மருத்துவர் சிவன்சுதன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அஜினோ மோட்டோ ஆனது பசியைக் கட்டுப்படுத்தும் லெப்ரின் என்ற ஓமோனை நிரோதிப்பதால் பசி அதிகரித்து உடல்நிறை அதிகரிப்பதற்கும் காரணமாக அமைகின்றது.

அஜினோ மோட்டோ ஆனது அன்ரிஒக்சிடென்ற் இன் தொழிற்பாட்டை நிரோதிப்பதன் மூலம் இரைப்பை, குடற்புற்றுநோய்கள் ஏற்படுவதற்கும் இது காரணமாக அமையலாம் என்று சில ஆய்வுகள் சுட்டிக்காட்டி நிற்கின்றன.

கர்ப்பகாலங்களிலே இதன் பாவனை சிசுவுக்கு பாதுகாப்பானது அல்ல என்பதும் ஆண்களிலே இது மலட்டுத் தன்மைக்கு ஒரு காரணியாக அமையலாம் என்பதும் சில அவதானிப்புகள் மூலம் அனு மானிக்கப்பட்டிருக்கிறது.

அஜினோ மோட்டோவில் சோடியத்திறனுடைய செறிவு அதிகமாகக் காணப்படுவதால் குருதி அமுக்கத்தை அதிகரிக்கச் செய்வதுடன் உடல்வீக்கத்திற்கும் இது காரணமாக அமையலாம். சிலரில் இது ஆஸ்துமா எனப்படும் முட்டு நோய் கடுமையாவதற்கும் காரணமாக அமைகின்றது.

அளவான அஜினோ மோட்டோ பாவனை பலரில் எதுவித தாக்கங்களையும் ஏற்படுத்தாத காரணத்தால் இது ஒரு தடைசெய்யப்பட்ட உப்பு என்று சுகாதார நிறுவனங்களால் அறிவிக்கப்படவில்லை. ஆனால் கட்டுப்படுத்தப்படாத இதன் அதிகரித்த பாவனை சம்பந்தமாக சுகாதார தரப்பினர் கரிசனைகாட்ட ஆரம்பித்திருக்கிறார்கள் எனவும் பொது வைத்திய நிபுணர் சிவன்சுதன் தெரிவித்துள்ளார்.

அதிகம் உள்ள சில உணவு வகைகள் குறிப்பாக சில நூடில்ஸ் வகைகள் சில நாடுகளில் தடைசெய்யப்பட்டிருக்கின்றன.

எமது பகுதிகளில் விற்பனையாகும் பலவகையான உணவுப்பொருட்களில் அஜினோமோட்டோவின் செறிவு அதிகமாகக் காணப்படுகிறது. சமையலின் பொழுதும் உணவின் சுவையை அதிகரிப்பதற்காக அஜினோ மோட்டோ சேர்க்கப்பட்டுவருவது அவதானிக்கப்பட்டுவருகிறது.

எனவே அதிகரித்த அஜினோமோட்டோ பாவனை சம்பந்தமாகவும் அதன் தீய விளைவுகள் சம்பந்தமாகவும் பொதுமக்களிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அத்துடன் இதன் பாவனையை இயன்றளவு குறைத்துக்கொள்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் பொது வைத்திய நிபுணர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *