ஜனாஸா விவகாரத்தில் சலவை செய்யப்படும் சமயோசிதம்!

அரசாங்கத்தின், அதிரடித் திட்டங்கள், நடவடிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் குடிமக்களை அதிர்ச்சி அடையச் செய்யும் அதே அளவில்தான், குழப்பமடையவும் செய்கிறது. க.பொ.த. சாதாரண தரத்திற்கு கீழ் கல்வி பயின்ற ஒரு இலட்சம் பேருக்குத் தொழில்வாய்ப்பு, இராணுவத்தை மக்கள் மயப்படுத்தும் நோக்கில், அதன் கட்டமைப்புக்குள் வெளியாருக்கு தொழில்வாய்ப்புக்கள் எல்லாம் ஆறுதல் செய்திகள்தான். ஒரு இலட்சம் பேரை அரச அதிகாரிகளின் அனுபவங்களுடன் இணைத்துப் பயிற்றுவிப்பதுதான் இதன் நோக்கம். இதன் பின்னர் அனுபவமுள்ள அரச ஊழியர்களாகப் பணியாற்றவும் திறமைகளை மேம்படுத்தவும் இவர்களுக்கு வழிபிறக்கும்.

கணினி, தொழினுட்பம், கணிதம், விஞ்ஞானம் மேலும் சமூகப் பணிகளில் இராணுவத்தைப் புடம்போட்டு, மக்களுக்கு நெருக்கமான உறவுகளாக படையினரை ஈடுபடுத்தவே, வெளியாருக்கு இந்தக் கட்டமைப்பில் தொழில்கள் வழங்கப்படுகின்றன. துப்பாக்கிகளால் மட்டும் பேசாது, மக்களின் உணர்வுடன் பேசும் உறவாக இராணுவத்தைக் கட்டமைப்பதில் இந்த அரசாங்கம் எடுக்கும் பிரயத்தனங்களே இவை.

இதேபோன்றுதான், கொவிட் தொற்று ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான அறிவிப்பும் உள்ளது. எழுமாந்தமாகப் பேசுவது, எடுத்தெறிந்து பேசுவது, எதிர்பாராது பேசுவது, உதாசீனமாகப் பேசுவது, உதறித்தள்ளிப் பேசுவது, சமயோசிதமாகப் பேசுவது, சந்தர்ப்பவசமாகப் பேசுவது என்றெல்லாம் உள்ளதே!

நல்லடக்க அனுமதி குறித்த பிரதமரின் கூற்றை எவ்வாறு கொள்வது? முஸ்லிம் சமூக அரசியலின் நாவன்மை முதல் வேளாண்மையினர் வரை இதுதான் விவாதமாகியிருக்கிறது. சுமார் 11 மாதங்களாக நம்பிக்கை வற்றி முரண்பாடுகள் முற்றியிருந்த ஒரு சமூகம், பிரதமரின் இந்தப் பேச்சை வகைப்படுத்துவதல்ல பிரதானம். ஒரு விடிவெள்ளி தென்படாதிருந்த வானத்தில், ஒளிக்கீற்றாவது ஒளிந்திருந்ததே என ஆறுதலடைவதுதான் அழகு.

அரசியலமைப்பையே, மாற்றவும் இயற்றவும் அதிகாரம் உள்ள ஒரு சட்டவாக்க உயரிய சபையில், மிகப் பழுத்த அனுபவமுடைய, நாட்டின் அதிமுக்கிய பதவியிலுள்ள பிரதமர், வெட்டிப் பேச்சா பேசுவார்? சந்தர்ப்பவசத்தால் அல்லது சமயோசிதத்தால் பேசியிருக்கலாம் எனக் கருதவும் இடமுண்டு. ஹன்சார்டில் பதிவு உள்ளது மாத்திரம் போதுமே, ஏனையதை முன்னெடுக்க.

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட கூச்சல், குழப்பங்களைச் சமாளிப்பதற்காக சந்தர்ப்பம் பார்த்துப் பேசும் தேவை, பழுத்த அனுபவமுள்ள இந்தப் பிரதமருக்கு இருக்காதென்றே நான் கருதுகிறேன். இவற்றையும் விட எத்தனை அமர்க்களங்களைக் கண்ட அவரது அனுபவம் இவ்வாறு பேசாது. மஹிந்தவின் நாமொழிதல், அரசியலில் நடக்காதிருந்த சரித்திரம் இல்லையே! கொழும்புத் துறைமுக கிழக்கு முனைய உத்தரவாதத்தை எழுத்தில் தருமாறு கோரிய தொழிற் சங்கங்களுக்கு பிரதமர் கூறியதும் இதைத்தான்.

ஆகவே, அரசியல் சமயோசிதம் பிரதமரைப் பேச வைத்திருக்கிறது. ஆ.. அமெரிக்கா சொல்லி, ஐரோப்பா வேண்டி, இந்தியா அறிவுறுத்தியும் அசையாத அரசாங்கம் பாகிஸ்தானுக்குப் பயந்துவிட்டதா? இப்படிக் கருதுவதும், அறிவுக் கஞ்சத்தனத்தையே காட்டும்.

ஜனாஸாக்கள் எரிக்கப்பட ஆரம்பித்தது தொட்டே, “இப்போதைக்கு நல்லடக்கம் சாத்தியமே இல்லை, அறிவியல் ரீதியாகப் பேசும் போது ஆத்மீகத்தை நுழைக்காதீர்கள். மனித உயிர்களைக் காப்பாற்ற அரசாங்கம் போராடுகையில், இறந்தவை பற்றி அலட்டுவது ஏன்?” என்றுதான் அரசாங்கம் அடித்துரைத்தது. இப்போது, அறிவியலின் ஏதோவொரு துறை சாதிக்கும் என்ற நம்பிக்கையில், பிரதமர் நாமொழிந்ததாகவும் கொள்ளலாம்தானே.

ராஜதந்திர உறவுகளில் மிகக் கூர்மை, நேரான பாதையில் நடக்க நேரிட்டுள்ள ராஜபக்ஷ அரசு, பாகிஸ்தானுக்காக மட்டும் தீர்மானம் எடுப்பதாக நினைப்பது பழக்கதோஷம் . ஆனால், ஜெனீவா மைதானத்தில் களமிறங்கும் அணிகளில் பாகிஸ்தானும் பலமான அணிதான். அரபு நாடுகளை வளைத்து எடுப்பதில் பாகிஸ்தானின் பலம் பலருக்கும் தெரிந்ததுதான்.

தமிழ் மொழி பேசும் முஸ்லிம்களைப் பற்றி அரபு நாடுகளுக்கு என்ன கவலை என்ற உணர்வில்லை இது. முஸ்லிம்களுக்குப் பொதுவான அரபு மொழியில்தான், உலக முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்படுகின்றன. எனவே, அரபு நாடுகள் மட்டுமல்ல முழு முஸ்லிம் நாடுகளதும் இஸ்லாமிய உணர்வைத் தொடுவதால், ஜெனீவா மைதானத்தில் இந்நாடுகள் ஒன்றுபடவே செய்யும்.

எல்லோருக்கும் தெரிந்த இது, ஐம்பது வருட அரசியல் அனுபவமுள்ள பிரதமருக்குத் தெரிந்திருக்காதா? சிறுபான்மையினர் சிந்திப்பதற்கு இன்னுமொன்றும் உள்ளது. பிரித்தாளும் தந்திரம் தோற்கிறதா? அல்லது தோற்கடிக்கப்படுகிறதா? என்பதை அறிவதற்கான வியூகங்களும் இதில் உள்ளன. யாருக்கு உள்ளதென்பது, கோடிட்டுக் காட்டப்படுமளவுக்கு நமது வாசகர்கள் அவ்வளவு பாமரர்களும் இல்லை.

தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகள், அழிவுகளுக்கு நீதி வேண்டி நடைபெறும் பவனிகள் எல்லாம் ஒரே மைதானத்தில் ஒன்றுபடுவது, தனித்து ஆடப்போகும் அணிக்கு அசௌகரியம்தானே. இதனால், சமயோசிதம் சலவை செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகள் பல, பிரதமரின் இந்த முடிவை வரவேற்றிருக்கிறதே. இதுதான் ராஜபக்ஷக்களின் ராஜதந்திரம். இதற்குள் வர்த்தமானி வரவில்லை, தவிர இவ்விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் சுதர்சினியின் உரையில் பிரதமர் மௌனம்காத்தமை என்பவற்றை வைத்துக்கொண்டு இவர்களை நம்ப முடியாதென்ற கருத்தாடல்களும் நிலைக்கின்றன. இன்னும் சில அரசியல்வாதிகள், இதில் சாதனை உரிமை கோருவது “காகம் குந்த பனம் பழம் விழுந்த” கதையாகிவிடாமல் இருக்கட்டும். மேலும் அரசுக்குள் ஏற்பட்டுள்ள தற்போதைய கொதிநிலையும் இலங்கை அரசியலை சூடாக்கவே செய்கின்றது.( சுஹைப்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *