ஓய்வெடுக்கும் நடிகர்கள், பிஸியாகும் நடிகைகள்!

தென்னிந்திய சினிமாவில் உள்ள உச்ச நட்சத்திரங்களில் இன்றைக்கு படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் ஒரே நடிகர் சிரஞ்சீவி மட்டுமே.

கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் கோலிவுட், மோலிவுட், டோலிவுட் என அனைத்து மொழி சூப்பர் ஸ்டார்களும் ஓய்வில் உள்ளனர்.

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் கொஞ்சம் தளர்த்தியதால், ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் ரஜினிகாந்தும், ‘வலிமை’யில் அஜீத்தும் பங்கேற்றனர்.

ஐதராபாத் ‘ஷுட்டிங்கில்’ இருந்த இருவரையும், கொரோனா மீண்டும் சென்னைக்கே திருப்பி அனுப்பி வைத்துவிட்டது.

ஒரு வருடமாக விஜய் அரிதாரம் பூசவில்லை. ‘மாஸ்டர்’ ரிலீசுக்குப் பிறகே அவர் நிதானமாக முடிவெடுப்பார்.

மூன்று படங்கள் கைவசம் உள்ள நிலையில், கமலஹாசன் தேர்தல் பிரச்சாரத்துக்கு ‘கால்ஷீட்’ கொடுத்துள்ளதால், இப்போதைக்கு அவர் கேமிராவில் தலை காட்டும் வாய்ப்புகள் இல்லை.

மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி ஓராண்டாக ஓய்வில் தான் இருக்கிறார்.
மம்முட்டி நடித்து முடித்துள்ள மூன்று படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், அமல் நீரட் இயக்கும் ‘பிலால்’ என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். ஷுட்டிங் எப்போது என்பது உறுதியாகவில்லை.

மோகன்லால், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட சமயத்தில் ‘திரிஷ்யம்-2’ படத்தில் ஒரே மூச்சில் நடித்து கொடுத்துவிட்டார்.

ஓ.டி.டி. தளத்தில் அந்தப் படம் வெளியாகிறது. எனினும் கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே ரிலீஸ் ஆக வேண்டிய ‘மரைக்காயர்; அரபிக் கடலிண்டே சிம்ஹம்’ வெளியாகவில்லை.

அந்தப்படம் வெளிவந்த பிறகு தான் அடுத்த படத்தில் நடிப்பார் என தெரிகிறது.

ஓராண்டாக ஓய்வில்  இருந்த சிரஞ்சீவி, சில நாட்களாக ‘ஆச்சார்யா’ ஷுட்டிங்கில் பங்கேற்று வருகிறார்.

இன்னும் சில நாட்களில் இதன் படப்பிடிப்பு  முடிந்து விடும்.

இதன்பின் ‘லூசிபர்’, தெலுங்கு ரீமேக் படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார்.

ஆனால் தென்னிந்திய நடிகைகள் ஹீரோக்களுக்கு நேர் மாறாக ஆளுக்கு ஐந்தாறு படங்களை கைவசம் வைத்துக்கொண்டு, ‘அவுட்டோர், இண்டோர்’ என ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.
யார்? யார்? எத்தனை டங்களில் நடித்து கொண்டிருக்கிறார்கள்?

விரிவாகவே அலசலாம்.

நயன்தாரா:

ரஜினிகாந்த் போல், பணம், புகழ் எல்லாவற்றையும் பார்த்துவிட்ட நயன்தாராவுக்கு,  சினிமாவில் இனி எதுவும் தேவை இல்லை..

தமிழில் அண்ணாத்த, காத்து வாக்கில ரெண்டு காதல், நெற்றிக்கண் ஆகிய மூன்று படங்கள் வைத்திருக்கிறார்.

பூர்வீக பூமியான மலையாளத்தில் நிழல், பாட்டு ஆகிய இரு படங்கள்.

காதல், பயணம் – ஷுட்டிங் என இரட்டை குதிரைகளில் சவாரி செய்யும் நயனுக்கு இந்த வருட டைரி நிரம்பி விட்டது என்றே சொல்ல வேண்டும்.

மோகன்லால் நடித்து மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற ‘லூசிபர்’ படம் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க தயாராகிறது.

இந்தப் படத்தில் வில்லன் மனைவியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சு நடந்து வருகிறது.

காஜல் அகர்வால்:

கல்யாணம் ஆனால் தாய் ஆவதற்கு, ஒரு பெண்ணுக்கு 10 மாதங்கள் தேவைப்படும். சினிமாவிலோ, தாலி கட்டிய மறுநாளே, ‘அம்மா’ வேடத்துக்கு ஒப்பந்தம் செய்ய, நடிகையின் வீட்டு வாசலில் வந்து நிற்பார்கள்.

காஜல் அகர்வாலுக்கு அந்தத் துர்பாக்கியம் நேரவில்லை.

திருமணத்துக்குப் பிறகும் தமிழில் இரு படங்களில் நாயகியாகவே நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.

சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா, கமலுடன் ‘இந்தியன் -2’ ஆகியவற்றோடு மேலும் இரு தெலுங்கு படங்களையும் கையில் வைத்துள்ளார் காஜல்.

இரண்டாவது ஹனிமூனை இந்த ஆண்டில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு காஜல் படுபிஸி.

கீர்த்தி சுரேஷ்:

ஒரே சமயத்தில் மூன்று மொழிகளில் நடித்துக்கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

தமிழில் – அண்ணாத்த மற்றும் சாணி காகிதம்

இந்தியில் ராங்கி டே.

தெலுங்கில் நடித்து வரும் மூன்று படங்களில் ‘குட்லக் சக்தி’ கீர்த்திக்கு இன்னொரு ‘நடிகையர் திலகமாக’ இருக்கும் என்கிறார்கள்.

ராகுல் ப்ரித் சிங்:

தென் இந்தியாவில் அதிக படங்களை கை இருப்பில் வைத்திருப்பவர் ராகுல் பரித் சிங்.

மொத்தம் எட்டு படங்கள்.

தமிழில், இந்தியன் -2 மற்றும் அயலான்.

இந்தியில் சர்தார் அண்ட் கிராண்ட் சன்ஸ், மே டே, தேங்க் காட் ஆகிய மூன்று படங்கள்.

தெலுங்கில் மூன்று படங்கள்.

தமன்னா:

தமிழில் என்ன காரணத்தாலோ தமன்னாவுக்கு புதிய சினிமாக்கள் இல்லை.

ஆனால் தெலுங்கில் நான்கு படங்களில் பிஸி.

இவற்றில் வெங்கடேஷுடன் நடிக்கும் ‘F3’ என்ற படத்தை ரொம்பவும் நம்பியுள்ளார்.

ராஷ்மிகா மந்தனா:

தமிழில், கார்த்தியுடன் நடிக்கும் ‘சுல்தான்’ சினிமா வந்த பிறகு தான் ராஷ்மிகா மந்தனாவின் பெயர் கோடம்பாக்கத்தில் பிரபலமாகும்.

கன்னடத்தில் ‘போகுரு’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்தியில் அமிதாப் நடிக்கும் ‘டெட்லி’ மற்றும் சித்தார்த் நடிக்கும் ‘மிஷன் மஞ்சு’ ஆகிய இரு படங்கள் உள்ளன.

தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா மற்றும் சர்வானந்த் ஜோடியாக ஒரு படம் என நான்கு மொழிகளில் நடிக்கும் ஒரு சில நட்சத்திரங்களில் ராஷ்மிகாவும் ஒருவர்.

நயன்தாராவுக்கு போட்டியாக கருதப்பட்ட திரிஷா மற்றும் அனுஷ்கா ஆகியோருக்கு இந்த ஆண்டில் படங்கள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *