கொரோனா தொற்றுக்குள்ளான 38 தாய்மார் 40 குழந்தைகள் பிரசவிப்பு!

இலங்கையில் கொரோனா மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுகின்றதோடு, மற்றும் சில பகுதிகள் புதிதாக தனிமைப்படுத்தப்படுகின்றது.
அத்துடன் நாளுக்குநாள் கொரோனா தொற்றாளர்கள் கணிசமான அளவு அதிகரித்து வருகின்ற நிலையிலும் கொரோனா தொற்றாளர்கள் பலர் குணமடைந்தும் வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான தாய்மாரினால் இதுவரை 40 குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றுக்கு உள்ளான 38 தாய்மார்கள்,  கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் கடந்த டிசம்பர் முதலாம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையிலான ஒரு மாத காலத்தில் 40 குழந்தைகளை பிரசவித்துள்ளதாக, அந்த வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்திய நிபுணர் மயூரமான தேவாலகே தெரிவித்தார்.

அனைத்து தாய்மார்களும் நலமான குழந்தைகளை பிரசவித்துள்ளதுடன், பிரசவத்தின் பின்னர் இரு குழந்தைகளுக்கு மட்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளாகும் கர்ப்பிணிகள் தொடர்பில் சிகிச்சையளிக்க விஷேடமான வைத்தியசாலையாக கிழக்கு கொழும்பு ஆதார வைத்தியசாலை உள்ளது.

ஏனைய வைத்தியசாலைகளில் இருந்து குறித்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட 38 தாய்மார்கள் கடந்த டிசம்பரில் 40 குழந்தைகளை பிரசவித்துள்ளனர்.  இதில் இரட்டை குழந்தைகளும் உள்ளடங்கும்.

இலங்கையில் கொரோனா தொற்றில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி இரண்டாம் அலை இனங்காணப்பட்டதையடுத்து மேல் மாகாணத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகினர்.

எனினும் தற்போது கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் இவ்வாறு கொரோனா தொற்று அபாய நிலைமை அதிகரித்துள்ளது. அதற்கமைய இவ்விரு மாகாணங்களிலும் பல பகுதிகள் அண்மையில் புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடி பொலிஸ் பிரிவு மற்றும் கல்முனை பிரதேசத்தில் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் புதுவருடப்பிறப்பு தினமான நேற்று வெள்ளிக்கிழமை பகல் முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய காத்தான்குடி பொலிஸ் பிரிவு மற்றும் கல்முனை பிரதேசத்தில் கல்முனை 1, கல்முனை 1 சி, கல்முனை 1 ஈ, கல்முனை 2, கல்முனை 2 ஏ, கல்முனை 2 பீ, கல்முனை 3,  கல்முனை 3 ஏ, கல்முனை குடி 1 , கல்முனை குடி 2, கல்முனை குடி 3 ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

நேற்று வெள்ளிக்கிழமை 557 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 43 856 ஆக உயர்வடைந்துள்ளது. 

இவர்களில் 36,155 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 7493 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதே வேளை 406 நபர்கள் தொற்று அறிகுறிகளுடன் சந்தேகத்தினடிப்படையில் மருத்துவ கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
சுவாச நோய் விடுதியில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமையால் மாத்தளை வைத்தியசாலையின் சுவாச நோய் விடுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறித்த 2 கொரோனா நோயாளர்களும் தெல்தெனிய கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோயாளர்களுடன் நெருங்கி பழகிய 04 பேருக்கு பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளது. இறுதியாக நேற்று வெள்ளிக்கிழமை வரை 4 கொரோனா மரணங்கள் பதிவாகின.

ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடைய ஆணொருவர் வெலிகந்த வைத்தியசாலையிலிருந்து தேசிய தொற்று நோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் நிமோனியா நிலைமையாகும்.

கொழும்பு 14 பிரதேசத்தைச் சேர்ந்த 91 வயதுடைய பெண்ணொருவர் தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். இவரது உயிரிழப்பிற்கான காரணம் இரத்தம் நஞ்சானமை மற்றும் கொவிட் தொற்றுடன் நிமோனியா நிலை ஏற்பட்டமையாகும்.
அகலவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஆணொருவர் களுத்துறை பொது வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது நேற்று முன்தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.

மரணத்திற்கான காரணம் கல்லீரல் நோய் தீவிரமடைந்தமை மற்றும் கொவிட் நிமோனியா நிலை ஆகும்.

தர்காநகர் பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய ஆணொருவர் டிசம்பர் 29 ஆம் திகதி களுத்துறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார். உயிரிழப்பிற்கான காரணம் கொவிட் தொற்றுடன் இரத்தம் நஞ்சானமை மற்றும் இதய நோய் என்பனவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *