இலங்கைப் பாடசாலை மாணவர்களுக்கு தினமும் ஒரு முட்டை?

பாடசாலை மாணவர்களின் போசணை மட்டத்தை மேம்படுத்துவதற்கு தினமும் ஒரு முட்டையை வழங்குவது தொடர்பில் ஆராயுமாறு கல்வி அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று 2020.09.11 தெரிவித்தார்.

பேக்கரி உரிமையாளர்களின் சங்கத்தினர் மற்றும் முட்டை உற்பத்தியாளர்களின் சங்கத்தினர் ஆகியோரை விஜேராம உத்தியோகப்பூர்வ இல்லத்தில் சந்தித்த போதே பிரதமர் இதனை குறிப்பிட்டார்.

பேக்கரி உற்பத்திகளில் முட்டை விலை தாக்கம் செலுத்தும் விதம் குறித்து பேக்கரி உரிமையாளர்களின் சங்கத்தினர் பிரதமருக்கு தெளிவுபடுத்தியதுடன், முட்டை உற்பத்தியில் ஏற்படும் அதிக செலவினங்கள் தொடர்பில் முட்டை உற்பத்தியாளர்கள் விளக்கமளித்தனர்.

நாட்டின் அனைத்து பேக்கரி உற்பத்தி நிறுவனங்களுக்கும் நிலையான மொத்த விலைக்கு முட்டையை பெற்றுக் கொடுப்பதற்கு முடியுமானதாக அமையும் என முட்டை உற்பத்தியாளர்களின் சங்கம் குறித்த சந்திப்பின் போது தெரிவித்தது.

அதற்கமைய நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இரு சங்கங்களுக்கும் இடையே ஒரு உடன்பாட்டிற்கு வருமாறு சம்பந்தப்பட்ட பிரதிநிதிகளுக்கு பிரதமர் அறிவித்தார்.

கோழி குஞ்சு ஒன்றின் விலையை ரூபாய் 175-200 இற்கும் இடையே குறைப்பது தொடர்பிலும் முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் பேக்கரி உரிமையாளர்களுக்கான உடன்பாடு விடயத்தில் தலையீடு செய்யுமாறும் துறை சார்ந்த அமைச்சர்களுக்கு இச்சந்திப்பின் போது பிரதமர் அறிவுறுத்தினார்.

குறித்த சந்தர்ப்பத்தில் சந்தைப்படுத்தல் கூட்டுறவு சேவைகள் சந்தை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டை சார் தொழில் இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத், பிரதமரின் மேலதிக செயலாளர் அமந்தா கருணாதிலக மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *