ஆறு மாதங்களுக்கு சினிமா தியேட்டர்களுக்கு விடுமுறை?

உலகம் சுற்றி வந்து உயிர்களைக் குடித்து வரும் கொரோனா, பொருளாதாரத்தை இருந்த இடம் தெரியாமல் பொசுக்கி விட்டது. எல்லாத் தொழில் துறைகளும் வீழ்ந்து கிடக்கின்றன.
அதில் திரைத்துறையும் அடக்கம்.
தமிழக சினிமா திரையரங்குகளின் அவலநிலை குறித்து மட்டும் சின்ன அலசல்.

கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் அதிகாரபூர்வமாக மூடிக்கிடக்கின்றன தியேட்டர்கள்.
ஏப்ரல் 14 ஆம் தேதி திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஊரடங்கை அடுத்த மாதம் 3 ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
அதன் பிறகாவது தியேட்டர்கள் திறக்கப்படுமா? என்றால் வாய்ப்பே இல்லை.

3 ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டாலும், சினிமா தியேட்டர்களுக்கு விலக்கு கிடையாது.
‘சமூக இடைவெளியை’த் தியேட்டர்கள் கடைபிடிக்க முடியாது என்பது பிரதான காரணம்.
இப்போதைக்குத் தியேட்டர்களைத் திறக்கும் உத்தேசம் தமிழக அரசிடம் இல்லை.

ஒரு மாதமாக தியேட்டர்கள் அடைக்கப்பட்டு இருப்பதால், அதன் உரிமையாளர்கள் நொடித்து போய் விட்டார்கள் என்பது நிஜம்.
“மல்டி-பிளக்ஸ் அல்லாத தியேட்டர்களில் பணியாற்றும் ஊழியர்களுக்குச் சம்பளமே மாதம் 3 லட்சம் ரூபாய் முதல் 7 லட்சம் ரூபாய் வரை தேவை. மார்ச் மாத சம்பளத்தைக் கொடுத்து விட்டோம்.

ஏப்ரல் மாத சம்பளம் கொடுக்கப்பட வேண்டும். தியேட்டர்கள் ஓடாத நிலையில் அடுத்த மாத சம்பளத்தை எப்படி கொடுப்பது என்று தெரியவில்லை’’ என்று கண்ணீர் விடாத குறையாகச் சொல்கிறார் நெல்லையைச் சேர்ந்த ஒரு தியேட்டர் முதலாளி.
“இப்போது மக்களில் பலர் ஓ.டி.டி. தளங்களில் வீட்டிலேயே சினிமா பார்த்து சொகுசாகி விட்டார்கள்.

நாளையே தியேட்டர்கள் திறந்தாலும் கூட, கூட்டத்தில் அமர்ந்து படம் பார்த்தால் கொரோனா தொற்றிக் கொள்ளும் என்ற பயத்தில் அவர்கள் தியேட்டர்களுக்கு வரப்போவதில்லை.
இன்னும் 6 மாதங்களுக்கு இந்த நிலைதான் நீடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை’’ என்கிறார் திரையரங்க நிர்வாகி ஒருவர்.

“இதுபோன்ற சூழல் இதற்கு முன் எப்போதும் ஏற்பட்டதில்லை. தியேட்டர் உரிமையாளர்களுக்கு பலத்த நஷ்டம் என்பதில் மாறுபட்ட கருத்து கிடையாது. எவ்வளவு நஷ்டம் என்பதை இப்போது கணக்கிட முடியாது’’ என்கிறார், ஜி.கே.சினிமாஸின் ரூபன் மதிவாணன்.
தமிழ்நாடு திரைஉயரங்கு உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் ஆர்.பன்னீர்செல்வத்திடம் இதுகுறித்து கேட்டபோது, பொங்கித் தீர்த்து விட்டார்.

“பல லட்சம் ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளோம். தியேட்டர் இயங்கினாலும் சரி, இயங்கா விட்டாலும் சரி மின்சார கட்டணத்திலோ, சொத்து வரியில் இருந்தோ எங்களுக்கு விலக்கு அளிக்கப் போவதில்லை.

ஆனால் மற்ற தொழிற்சாலைகளுக்கு விலக்கு உண்டு. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பத்தில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது கொரோனா’’ என்று  தன்னுடைய வேதனையை வெளிப்பத்துகிறார் பன்னீர்செல்வம்.

மின்சாரக் கட்டணம் மற்றும் சொத்து வரியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தியேட்டர்கள் திறக்கப்பட்டு, பெரிய நட்சத்திரங்களின் படங்கள் ரிலீஸ் ஆனால் ஓரளவு தியேட்டர்கள் மீள முடியும் என்பது பலரது கருத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *