கொரோனா வைரஸால் இறந்தவர்களை அடக்கம் செய்வதால் பாதிப்பில்லை என நிரூபிக்க குழு நியமனம்

இலங்கையில் கொரோனா தொற்று ஏற்பட்டு, மரணிப்பவர்ளை அடக்கம் செய்வது பற்றி விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து வைத்தியர்களுக்கும், அரச மேல் மட்டத்திற்கும் அதை சமர்ப்பிப்பதற்காக உயர்மட்டக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய நிலையில், கொரோனா தொற்று ஏற்பட்டு முஸ்லிம்கள் மரணித்தால், அவர்களை தகனம் செய்வதற்கான வழிமுறைகளே காணப்படுகிறது. இது நாட்டு முஸ்லிம்களடையே அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதற்கு துரித கதியில் தீர்வு காணும் பொருட்டு, மாற்றுமத சகோதரர்களையும் உள்ளடக்கி தொழில்சார் நிபுணர்கள் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

றிஸ்வி முப்தி தலைமையிலான இக்குழுவில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான இல்யாஸ், பைஸர் முஸ்தபா, டொக்டர் குறைஸ் ஹனீபா, முஸ்லிம் சலாஹுதீன், அப்சல் மரிக்கார், மஸ்வர் மகீன், மௌலவி முர்ஸித், ஆகியோருடன் வைத்தியர்களான றிஸ்வி செரீப்டின், கமால், ஹனீபா, சரீப்டின் ஆகியோருடன் முக்கிய ஆலோசனைகளை வழங்குவதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோரும் உள்ளீர்க்கப்பட்டுள்ளனர்.

உலக வரலாற்றில் தொற்று நோயினால் மரணிப்பவர்கள், அடக்கம் செய்யப்படும் வரலாறு மிக நீண்டகாலமாக இருந்து வருவதுடன், வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களை உரியமுறையில் அடக்கம் செய்யலாமென நிரூபிக்கப்பட்டும் வருகிறது.

இதற்குச் சாதகமான தத்துவங்களும், அறிவியல் கட்டுரைகளும், விஞ்ஞான ரீதியிலான ஆதாரங்களும் காணப்படுகிறது.

அந்தவகையில் மேற்சொன்ன குழுவும் கொரோனா வைரஸினால் ஒருவர் மரணித்தால், அவரை அடக்கம் செய்யலாமென்ற விடத்தை அறிவியல் ரீதியாக இலங்கை மருத்துவர்களுக்கு நீரூபிக்க முயற்சிப்பார்கள் என நம்பப்படுவதுடன், அவசியப்படுமிடத்து அரச மேல்மட்டத்தையும் சந்தித்து அதனை சான்றுகளுடன் சமர்ப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

(அன்ஸிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *