யாழில் லீசிங் நிறுவன ஊழியர்களின் அடாவடியால் உயிரை மாய்த்துக்கொன்ட தாய்

லீசிங் நிறுவனத்தின் பணியாளர்கள் இருவர் தரக்குறைவாகப் பேசியதால் மனமுடைந்து தனது உயிரை மாய்த்துக் கொண்ட தாயொருவர். 

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் தாவடி தெற்கில் புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

அதே இடத்தைச் சேர்ந்த சுவிதன் அனுசுயா (வயது-34) என்பவரே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டார். அவருக்கு 5 பிள்ளைகள். முதலாவது பிள்ளைக்கு 10 வயதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டார்.

அவரது விசாரணையில் தெரிவிக்கப்பட்டதாவது,

கணவர் லீசிங் முறையில் மோட்டார் சைக்கிளை எடுத்துள்ளார். அதற்குரிய தவணைக் கட்டணங்களை அவர் செலுத்ததால் லீசிங் நிறுவனத்தின் பணியாளர்கள் அவரது வீட்டுக்கு புதன்கிழமை மாலை சென்றுள்ளனர்.

எனினும் கணவர் வேலைக்குச் சென்றுள்ளதாகவும் இரண்டு நாள்கள் தவணை வழங்குமாறும் நிலுவைப் பணத்தைச் செலுத்துவதாக மனைவி கேட்டுள்ளார். அதற்கு பணியாளர்கள் தரக் குறைவாகப் பேசியுள்ளனர். அதனால் இருதரப்புக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதனை அயலவர்கள் கண்டுள்ளனர். அதனால் மனமுடைந்த பெண் தூக்கிலிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார் – என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

லீசிங் முறையில் வாகனம் வாங்கியோர் பலர் இப்படிப்பட்ட இன்னல்களை அனுபவித்த வண்ணமே உள்ளனர். அதிக வட்டி வசூலிப்பது மட்டுமல்லாது தவணைக்கு பணம் செலுத்தாத வாடிக்கையாளர்களை தரக்குறைவாக பேசுவதை லீசிங் நிறுவனங்கள் வழமையாக கொண்டுள்ளன.

லீசிங் நிறுவனங்கள் இறுதி யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியிலேயே வடமாகாணத்தில் கால் பாதித்தவை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

லீசிங் முறை பற்றி எம்மவர்களுக்கு எத்தனை தடவை விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் அவர்கள் அதை உணர்வதாக இல்லை .

எது எவ்வாறு இருப்பினும் பெறுமதி மிக்க உயிர்களை சாதாரண விடயங்களுக்காக மாய்ப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *